மதுரை, ஜூன் 29- நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்குரைஞர் மாதவன், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
ஜாதி அடையாளம்
நெல்லை மாவட்டத்தில் ஜாதி ரீதியான கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு காரணம், திருவிழா போன்ற பொது நிகழ்ச்சிகளில் ஜாதி அடையாளங்களை வெளிப் படுத்துவதுதான். இந்த நிலையில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவில் தேரோட்டம் வருகிற 8ஆம் தேதி நடக்கிறது.
இந்த திருவிழாவில் லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். ஆண்டுதோறும் இந்த திருவிழாவின்போது ஜாதி ரீதியான வண்ண பட்டாசுகளை வெடிக்கச்செய்வது, சமுதாய தலைவர்களுக்கு ஆதரவாக முழக்கம் போடுவது, ஜாதியை வெளிப்படுத்தும் வகையில் டி-சர்ட் அணிவது என இளைஞர்கள் நடவடிக்கை இருந்தது.
இதனால் அடிக்கடி சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. திருவிழா வின்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதில் சிரமப்படுகின்றனர். எனவே நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தின்போது, ஜாதி மோதல்கள் உருவாக்க காரணியாக இருந்துவரும் மேற்கண்ட செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் (27.6.2025) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை அமைதியான முறையில் நடத்துவதற்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், நிதி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் இணைந்து ஏற்பாடு செய்ய வேண்டும். இதில் எந்த ஜாதிய அடையாளங்கள் இடம் பெறுவதையும் தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.