சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள்

viduthalai
7 Min Read

26.6.2025 அன்றைய தொடர்ச்சி…

அது போலவே வாலிப மகாநாட்டுத் தலைவரான, உயர்திரு. டி.வி. சோமசுந்திரம் பி.ஏ., பி.எல்., அவர் களும் தமது தலைமை உரையில்.

‘சுயராஜ்ஜியம் வந்தவுடன் அடிமைப்பட்டுக் கிடக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு அவர்கள் உரிமைகள் வழங்கப்படுமென்று காந்தியார் சொல்வதை உண்மையென்று எப்படி நம்பமுடியும்?’

“நம் நாட்டுத்தலைவர்கள் திரு. காந்தி உள்பட ஒருவரும் வருணாசிரமப் பிடியிலிருந்து வழுவவில்லை.

“சமத்துவமும் , சகோதரத்துவமும் பரவவேண்டு மானால் மதமெல்லாம் மறைய வேண்டும்.’’

“சமதர்மக் கொள்கைகளை நாடெங்கும் பரப்ப வேண்டும்.

“சொத்து , குடும்பம், நிதி, சட்டம், ஆகியவற்றில் உள்ள பழைய எண்ணங்கள் தாக்கப்படவேண்டும்’’

“சுருங்கக் கூறுமிடத்துக் காங்கிரஸ் முதலாளிகள் ஜமீன்தாரர்கள் பக்கமே சாய்ந்திருக்கிறது.’’ என்று முழங்கி இருக்கிறார்,

சுயமரியாதைப் பெண்கள் மாகாநாட்டு வரவேற்புத் தலைவி திருமதி பத்மாவதி திருவண்ணாமலை அம்மாள் அவர்கள் வரவேற்பு உபன்யாசத்தில்,

“எப்படியோ நமக்கு விழிப்பு ஏற்பட்டு விட்டது.  இனிமேல் நம்மை ஏமாற்ற முடியாது’’

“கடவுள்கள் காலம் வேறு, இப்போதைய நிலைமைவேறு.’’

“ஆண்கள் எவ்வித சுதந்திரத்துடன் வாழ்கின்றார்களோ அவ்வித சுதந்திரத்துடன் நாமும் வாழவேண்டும்.’’

“கலியாண விஷயங்களில் நமக்குச் சுதந்திரம், சொத்து சுதந்திரம் வேண்டும்.’’

“நாம் கூசாமல் கிளர்ச்சி செய்யவேண்டும்” “உதவிக்குச் சுயமரியாதை இயக்கம் இருக்கிறது’’

“சுயமரியாதை இயக்கத்தைப் பலப்படுத்துவதே நமது விடுதலையின் அஸ்திவாரமாகும்.’’ என்று முழங்கி இருக்கிறார்கள்.

பெண்கள் மகாநாட்டுத் தலைவி திருமதி இந்திராணி பாலசுப்பிரமணியம் அம்மாள் அவர்கள் செய்த தலைமை உபன்யாசமோ மிக அருமையானது.  சற்று நீண்ட தாயிருந்தாலும், ஒவ்வொருவரும் படித்துப் பார்க்க வேண்டிய தொன்றாகும்.  அநேக விஷயங்களைப் புள்ளி விவரங்களுடன் எடுத்தாண்டிருக்கின்றார்கள்:  அவையாவன.

“இந்நாடு அடிமைப்பட்டதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பெண்களை அடிமை களாக்கினது.  இரண்டு பிறப்பால் ஜாதி வகுத்தது. மூன்று மனிதனுக்கு மனிதன் தீண்டாதவனாக்கினது.  நான்கு மூடப்பழக்க வழக்கங்கள் சடங்குகள்.’’

“விதவைகளை மக்கள் செய்யும் கொடுமை களாலேயே பெண்மணிகளின் உயிர் நாடிகள் நசுக்கப் பட்டுவிட்டது.  சாரதா சட்டத்திற்குப் பயந்து பால் குடிக்கும் குழந்தைகளுக்கு மணம் முடித்துவிட்ட பாதகர்கள் நம் நாட்டில் பி.ஏ., எம்.ஏ., படித்த மனிதர்களாய் விளங்குகிறார்கள்’’

“கற்பு நாயகிக்கு மாத்திரந்தானா?  நாயகனுக்கு இல்லையா?’’

“மறுமணம் வேண்டுமானால் இருபாலருக்கும் வேண்டும்.’’

“ஒரு பிறவிக்கு ஒரு நீதி கொண்ட கற்பு அடிமைப் படுத்துவதில் ஆசை கொண்ட மூர்க்கத்தனமே யொழிய அதில் யோக்கியமும், நாணயமும் இல்லை.’’

“வானத்தில் மேகம் தவழ்வது போலவும், கடலில் அலை எழும்புவதுபோலவும் , பறவை தனது அழகிய சிறகை விரித்துப் பறப்பதுபோலவும் பெண் மக்களுக்குத் தங்களுடைய உள்ளத் திலெழும் விருப்பப்படி நடக்கும் உரிமை இருக்க வேண்டும்.’’

“வலுத்தவன் இளைத்தவனை அடக்கி ஆள்வதற்கு அத்தாட்சி ஜாதிவித்தியாசமேயாகும்.

“இதனால் நமது நாடு மிருகத்தன்மையில் இருந்து மனிதத் தன்மைக்கு இன்னமும் வரவில்லை என்பது புலனாகிறது.’’

“ஜாதிவேற்றுமை ஒழிவதில் தான் நமது நாட்டுவிடுதலை யிருக்கிறது’’

“சிலர் சுயநலத்திற்காகவே ஜாதிவேற்றுமை காப்பாற்றப்படுகிறது’’

“நம்சகோதரர்களுக்கு நாம் சகோதரத்தனம் காட்டவில்லையானால் பிறநாட்டார் இடம் நாம் எந்த முகத்துடன் சகோதரத்துவம் கேட்பது?’’

“பிறநாட்டார் எண்ணெய் இல்லாமல் மோட்டார் விடலாமா?  மார்ஸ்நட்சத்திர மண்டலத்தில் மக்கள் இருக்கின்றார்களா?  என்பதுபோன்ற ஆராய்ச்சி செய்கிறார்கள், நம்நாட்டார் கோவிலுக்குள் இன்னாரை விடலாமா?  வேண்டாமா?  குளத்தில் தண்ணீர் எடுக்க இன்னாரை விடலாமா?  வேண்டாமா?  பொது ரஸ்தாவில் இன்னார் நடக்கலாமா?  வேண்டாமா?  என்கின்ற ஆராய்ச்சிக்கு நம்நாட்டுப் பணம், நேரம், ஆராய்ச்சி ஆகியவை செலவழிக்கப்படுகின்றன’’

“இது ஒரு பைத்தியக்காரர்கள் வாழும் நாடாயிருக்கிறது’’

“கோவிலுக்காகப் பல ஜாதியாரால் செலுத்தப்படும் பணம் பல ஜாதியாருக்கும் பயன்பட வேண்டாமா?’’

“பிரார்த்தனை, காணிக்கை முதலிய விஷயங்களில் ஆண்களைவிடப் பெண்களே அதிக நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள்’’

கடைசியாக ‘சென்னை மாகாணத்தில் ஆண்களைவிட 6-லட்சம்பேர்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ள 23,64,936 பெண்களுக்குச் சென்னை சட்டசபையில் ஒரேஒரு பிரதிநிதித்துவம் கொடுத்திருப்பதானது எவ்வளவு வருந்தத்தக்க விஷயமாகும் ’ என்றுபேசி இரத்தக்கண்ணீர் வடித்துப் பேசியிருக்கின்றார்கள்.  ஆகவே இந்த அபிப்பிராயங்கள் எல்லாம் உலகஞானமும் கல்வியறிவும் உள்ள பெரியோர்களால் மிகவும் பிரத்தியட்ச அனுபோகத்தின் மீதும் ஆழ்ந்து யோசித்த நடு நிலைமை முடிவின் மீதுமே பேசப்பட்டவைகளேயொழிய வெறும் மூட நம்பிக்கைகளின் மீதும் இவ்வித அபிப்பிராயங்களுக்குச் செல்வாக்கிருக்கின்ற தென்கின்ற கண்மூடித்தனமான தைரியத்தின் மீதும் கிளிப்பிள்ளை தன்மைபோலும், வயிற்றுப்பாட்டை உத்தேசித்தும் பேசப்பட்டவைகள் அல்ல என்பது உலக அனுபவமும் நடு நிலைமைஞானமும் சிறிதாவதுமுள்ள எவருக்கும் விளங்கும்.

இன்றைய தினம் சுயமரியாதை இயக்கத்தின் மீது சிலரால் சொல்லப்படும் குற்றமெல்லாம் ‘இவ்வியக்கத்தில் ‘தேசியம் இல்லை’ என்பதும் ‘காங்கிரசைக்கண்டிக்கின்றது என்பதும் ‘திருகாந்தி அவர்கள் அபிப்பிராயத்தை மறுக்கின்றதே’ என்பதும் ஆகியவைகளே முக்கியமான குற்றங்களாக சொல்லப்பட்டு வருகின்றன.  35-கோடி மக்கள் கொண்ட ஒரு பெரியதும் சகலவித வளமும் கொண்டதுமான ஒரு புராதன தேசம் ஆயிரக்கணக்கான வருடங்களாக அடிமைப்பட்டு கல்வியறிவில்லாமல் சிறிதும் முற்போக்குமில்லாமல் மிருக பிராயத்தில் இருந்து கொண்டு எச்சிலைக்கு மானத்தையும் மனிதத்தன்மையையும் விற்றுக்கொண்டு, மனிதனுக்கு மனிதன் இழிவு என்று கருதும் படியாகவும் நாட்டு செல்வங்கள் எல்லாம் நாட்டு மக்கள் யாவரும் சமமாயும் அனுபவிக்காமலும் பாட்டுக்குத்தகுந்தபடியும் அனுபவிக்க முடியாமல் கடவுளென்றும் மதம் என்றும், பழக்க வழக்கமென்றும், சமுகக் கட்டுப்பாடு என்றும் சொல்லிக்கொண்டு வீணாக்கப்பட்டுவருகின்ற ஒரு நிலைமையை பற்றி யோசியாமலும் அதற்குக் காரணங்கண்டுபிடிக்க முயலாமலும், உண்மையான விடுதலைக்கு முயற்சியாமலும் மற்றும் மக்கள் எண்ணத்தையும் முயற்சியையும், உபயோகமற்றக் காரியங்களில் திருப்பிவிட்டுக் கொண்டிருந்தால் அறிவுள்ள யார்தான் சகித்துக்கொண்டிருக்க முடியும்?  இந்த நாட்டுக்கு விடுதலையையோ, ஞானத்தையையோ உண்டாக்க முயற்சிகள் செய்யப்பட்ட காலங்களில் எல்லாம் மதத்தின் பேராலும் வேறு ஏதாவது ஒரு போலியான சூழ்ச்சி விஷயத்தின் பேராலுமே பார்ப்பனர்கள் அவ்வப்போது பார்ப்பனரல்லாத கூலிகளைப் பிடித்து முட்டுக்கட்டை போட்டே வந்திருக்கின்றார்கள்.

அதுபோலவேதான் இந்த சமயமும் உலகமே விழித்தெழுந்து கொண்டிருக்கின்ற இந்த நூற்றாண்டில் இந்தியாவுக்கு மாத்திரம் விழிப்பு ஏற்படுவதற்கு வகையில்லாமல் பார்ப்பனரும் பார்ப்பனியமும் தேசியத்தின் பேரால் முட்டுக்கட்டையாகத்தோன்றி பின்னால் இழுத்துப்பிடித்துக்கொண்டிருக்க நேர்ந்தது மிகவும் வருந்தத்தக்க சம்பவமேயாகும்.  உலகிலுள்ள எல்லா நாட்டாருக்கும் எல்லா சமுகத்தாருக்கும் புதிய புதிய சீர்திருத்தக்காரர்கள் தோன்றி பழைமைகளை உடைத்தெறிந்து காட்டு மிராண்டித்தனத் திலிருந்து ஆச்சரியப்படத்தகுந்த மனிதத் தன்மைக்குக் கொண்டுவந்து எவ்வளவோ முற்போக்குகளை உண்டாக்கி மக்களை மான முடையவர்களாகவும் சுதந்திரமாகவும், அறிவாளிகளாகவும் வாழும்படி செய்துவிட்டார்கள்.

சைனா, ஜப்பான், துருக்கி, பிரஞ்சு, இங்கிலாந்து, ருஷியா, ஜர்மனிமுதலிய ஒவ்வொரு தேசத்திலும் தோன்றிய சீர்திருத்தக்காரர்கள் எல்லாம் முதலில் பழைமையை அழிப்பதிலேயே கண்ணுங்கருத்துமாயிருந்து வந்திருக்க நமது தேசத்தில் மாத்திரம் சீர்திருத்தக்காரராய் விடுதலைக்கு உழைப்பவராகத்தோன்றின திரு. திலகரும், திரு. காந்தியும் முதலியயாவருமே பழைமையைக் காப்பாற்றுவதிலும் புதுமையை உள்ளே நுழைய விடாமல் தடுப்பதிலுமே கண்ணுங்கருத்துமாய் இருந்து விட்டார்கள்.  இன்னும் இருந்தும் வருகின்றார்கள்.

‘லோகமான்யர்’ என்னும் திலகருக்கு வர்ணாசிரம தருமமும்,  கீதையின் தத்துவ உபதேசமும் எவ்வளவு தேசியமாய் இருந்ததோ அதைவிட ஒருபடி அதிகமாகத்தான் திருகாந்தியும் அவற்றை தேசியமாய் உபதேசிக்கின்றார்.  நிலை நிறுத்தவும்பாடுபடுகின்றார் என்பதல்லாமல் மற்றபடி திலகரைவிட காந்தியார் எந்த விதத்தில் மேலானவர் அல்லது சமத்துவத்திற்கு, சமதர்மத்திற்கு அனுகூலமான காரியம் செய்தவர் அல்லது திட்டம் கையில் வைத்திருப்பவர் என்பதை யோசித்தால் உண்மைவிளங்கும்.  திலகர் காலத்திலாவது அவருக்குப் புராண ராஜ்ய தருமத்தைப்பற்றி பேச பயமிருந்தது.  திரு. காந்தி காலத்திலோ புராண தருமம் மிகவும் வலிவும் செல்வாக்கும் பெற்றுவிட்டன.  போதாக்குறைக்கு திரு. மாளவியாவுக்கு விடுதலை ஸ்தாபனத்தில் கௌரவமான உச்சஸ்தானம் கிடைக்கப் பட்டுவிட்டது.

ஆகவே, விடுதலைக்குத் தேசிய திட்டம் வகுக்க வேண்டியது திருவாளர்கள் மாளவியா, இராஜ கோபாலாச்சாரி, சத்தியமூர்த்தி போன்றவர்களாகவும், அதை வெளிப்படுத்த வேண்டியது காங்கிரசாகவும், நிறைவேற்றிவைக்க வேண்டியது திரு. காந்தியாகவும் ஏற்பட்டுவிட்டது.  வாலிபர்களைமயக்க திரு. ஜவஹர்லாலை விட்டு ஏதாவது சொல்லச்செய்து விடவேண்டியது என்கின்ற இந்த முறையில் வருணாசிரமமும், இந்து மதமும், புராண தர்மமும் அரசியலின் பேரால், விடுதலையின் பேரால் இந்த நாட்டில் இந்தக்காலத்தில் தாண்டவமாடுவதானது மக்களின் எவ்வளவு பாமரத் தன்மையைக் காட்டுகின்றது என்பதற்காகத்தான் இவைகளை எடுத்துக் காட்டுகின்றோம்.

இந்தக்காரணங்களால் தான் தேசிய இயக்கம் என்கின்ற போர்வையைப் போர்த்துக் கொண்டிருக்கும் வருணாசிரம பார்ப்பனிய முதலாளித் தத்துவக் கொள்கைகளைக் கொண்ட காந்தீயத்தை வெட்டிப்புதைக்கும் வேலையை இப்போது சுயமரியாதை இயக்கம் கைக்கொண்டு வேலை செய்ய வேண்டியதாகி விட்டது.  இதைச் செய்யாமல் சுயமரியாதை இயக்கம் மற்றத் துறைகளில் செய்யும் வேலைகள் எல்லாம் நதிக்கரையில் ஆற்றோரத்தில் கட்டுகின்ற கட்டிடங்களைப் போலத்தான் முடியும்.  ஏனெனில் சமய சமுகத் துறையில் சுயமரியாதை இயக்கம் எவ்வளவு வேலை செய்து வைத்திருந்தாலும் பார்ப்பனிய காந்தியரசியல் ஆதிக்கம் வரும்போது ஒரே அடியில் அவை கவிழ்க் கப்பட்டதாகி விடும்.  பெருவெள்ளம் வந்தால் நதிக்கரையில் இருக்கும் வீடுகளுக்கு எப்படி ஆபத்தோ அது போலவே ஆகிவிடும்.  இந்தக் காரணத்தால் தான் அரசியல் என்பதுடனும், காந்தீயம் என்பதுடனும் போராட வேண்டியிருக்கின்றதே யொழிய வேறில்லை.

இதைப்பற்றி தப்பர்த்தம் கொள்கின்றவர்களுக்கு மாத்திரம் திரு காந்தியார் உரைத்த ஒரேயொரு விஷயத்தை மாத்திரம் எடுத்துக் காட்டிவிட்டு இதைமுடிக்கின்றோம்.

அதாவது, ‘மனித சமுகத்தில் வீதி கூட்டுவது ஒருவனது தர்மம் என்றும் கணக்கு எழுதுவது மற்றொருவனது தர்மம் என்றும் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கின்றது. இதில் குப்பை அள்ளுவது இழிவு கணக்கு எழுதுவது மேன்மை என்று கருதப்பட்டாலும் குப்பை அள்ளுகின்றவன் தனது தருமத்தை விட்டு விட்டு மற்றவன் தருமத்தில் பிரவேசிக்க நினைத்தாலும் அவன் தருமமிழந்தவனாகிறான்.  இவனால் சமுகத்திற்கும் கேடு விளையும்’

என்பதே திரு. காந்தியவர்களின் சமுக சீர் திருத்தமும் அரசியலில் அவர் ஏற்றுக் கொண்ட ஜவாப்த்தாரித்தனமுமாகும்.  இதுவே சுயராஜ்ஜியத்தில் ஜீவாகார உரிமைத் திட்டமுமாகும்.  மற்ற விஷயங் களைப்பற்றி மறுமுறை எழுதுவோம்.

– குடிஅரசு – தலையங்கம் – 16.08.1931

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *