யாருக்குப் போகும் நிதி? சூட்சுமத்தைப் புரிந்துகொள்வீர்

5 Min Read

140 கோடி மக்கள் தொகையில் வெறும் 24,821 பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருதத்திற்கு 2,533 கோடி ரூபாய்!
தென்னக மக்களின் மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியாவிற்கு 147 கோடி ரூபாய்!
யாருக்குப் போகும் நிதி? சூட்சுமத்தைப் புரிந்துகொள்வீர்
தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரக் களம் காண்போம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

இந்தியாவில் 140 கோடி உள்ள மக்கள் தொகையில் வெறும் 24,821 பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருதத்திற்கு 2,533 கோடி ரூபாய்! மக்கள் மொழியாக உள்ள தமிழ், தெலுங்கு, கருநாடகம், ஒடிசாவிற்கு 147 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.  தமிழ்நாடு முழுவதும் திண்ணைப் பிரச்சாரமாகத் தொடங்கி, தெருமுனை மற்றும் மேடைப் பிரச்சாரமாகச் செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அண்மையில் வெளிவந்த ஒரு தகவல்படி, ஒன்றிய அரசு மிகுந்த ஓரவஞ்சனையுடன்,

மக்களால் புழங்கப்படாத சமஸ்கிருதம் என்ற வடமொழிக்கு மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 2,533 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

தென்னகத்தைச் சேர்ந்த மற்ற செம்மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா மக்கள் மொழியாக உள்ள நிலையிலும் மொத்தமே, வெறும் 147 கோடி ரூபாய் அளவே ஒதுக்கப்பட்டது.

ஹிந்தி, சிந்தி, உருது ஆகிய மொழிகளுக்கு 1,318 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும் வடக்கு – தெற்கு பாகுபாடு!

இது நமது முதலமைச்சர் தொடங்கி, பல நியாய உணர்வாளர்கள் அத்துணை பேரின் வன்மையான கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது.

சமஸ்கிருதத் திணிப்புக்கான
செயல் திட்டம்!

இதற்கு இன்னமும் சமஸ்கிருதத் திணிப்பாளர்களான ஒன்றிய அரசின் சார்பில், எந்த அமைச்சரிடமிருந்தும் பதில் இல்லை!

மக்கள் வரிப் பணத்தில் செய்யப்படும் நிதி விநியோகம் மாற்றாந்தாய் மனப்பான்மையில் இப்படி அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். கொள்கையை நடைமுறைப்படுத்தவும், தங்களது பெருமைமிகு தாய்மொழி, முக்கிய மொழி, சமஸ்கிருதம்தான் என்று பட்டாங்கமாய்த் தொடர்ந்து ஆண்டுதோறும் இந்த இரட்டை அளவுகோலைப் பயன்படுத்தி வருவதன் ரகசியம் என்ன தெரியுமா?

அறிஞர் அண்ணாதான் கொள்கை எதிரிகளின் சூழ்ச்சி களை விளக்கிட, ‘‘சூட்சுமம் புரிகிறதா தம்பி?’’ என்ற தலைப்பிட்டு கட்டுரைகள், அறிக்கைகள் எழுதுவார்.

அதனை இப்போது நாம் பயன்படுத்தி, ‘‘சூட்சுமம் புரிகிறதா நாட்டோரே’’ என்று விளக்கிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது!

ஆரியக் கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும், பரப்பவும், வர்ணாசிரமத்தின் வாரிசாகவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 1925 இல் உருவாக்கப்பட்டது.

வேதக் கலாச்சாரம் பரப்புதலும், சமஸ்கிருத மொழிப் பாதுகாப்பும், ஜாதி தர்மத்தை போற்றும் அதனையொட்டிய ஸநாதன சடங்காச்சாரங்களும், சம்பிரதாயங்களும் என்ற பெயரால், பார்ப்பன உயர்ஜாதி ஆதிக்கத்தை உச்சியில் வைத்து, மற்றவர்களைத் தாழ்வுபடுத்துவதுமே அதன் உள்ளார்ந்த இலக்கு.

தமிழ் நீஷ பாைஷ –
சமஸ்கிருதம் தேவபாைஷயா?

இல்லையானால், செம்மொழி தமிழை – உலக நாடுகள் பலவற்றில் அரசு ஆட்சி மொழியாகவே உள்ள மக்கள் மொழியான தமிழ் மொழியை – ‘நீஷ’ பாைஷ, தீட்டாகிவிடும் பாைஷ, சமஸ்கிருதம்தான் தேவ பாைஷ (கடவுள் மொழி) என்ற பேதத்தினை ஏற்படுத்தி, மொழியிலும் பிரிவினை வேற்றுமைபடுத்தி, உயர்வு – தாழ்வைக் கற்பித்துக் கொண்டிருப்பார்களா?

முதலில் சமஸ்கிருதத்தைப் படிக்கவே வர்ண முறைப்படி கீழ் ஜாதியினருக்கு உரிமையே இல்லை – அனைத்து ஜாதி பெண்களுக்கும் உரிமை இல்லை என்றிருந்த நிலைப்பாட்டின் காரணமாக, செத்துப் போன சமஸ்கிருதத்திற்கும், செத்துக் கொண்டிருக்கும் பார்ப்பனிய – ஆரியக் கலாச்சாரத்திற்கும் புத்துயிர் கொடுக்கவே இப்போது ‘‘எல்லோரும் சமஸ்கிருதம் படி யுங்கள்’’ என்று, அந்தப் பழங்கட்டுக்களை அவர்களே உடைத்தனர்.

யாருக்குப் போகும் நிதி?

அப் பிரச்சார பணிக்காகவும், குறிப்பாக கல்வி நிலையங்களிலும், மற்ற மற்ற துறைகளிலும் செத்த மொழிக்கு உயிரூட்டி, சிம்மாசனத்தில் அமர வைக்க வுமே, ஆர்.எஸ்.எஸ்., 11 துணை அமைப்புகளை உரு வாக்கி வைத்துள்ளது.

  1. அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத்
  2. வித்யா பாரதி – அகில பாரதிய ஷிக்‌ஷா சன்ஸ்தான்
  3. சிக்‌ஷா சன்ஸ்கிருதி உத்தன் நியாஸ்
  4. அகில பாரதிய இதிகாஸ் சங்களன் யோஜனா
  5. சமஸ்கிருத பாரதி
  6. விஞ்ஞான் பாரதி
  7. அகில பாரதிய சாகித்ய பரிஷத்
  8. சிக்‌ஷா பச்சாவோ அந்தோலன்
  9. அகில பாரதீய ராஷ்டிரிய ைஷக் ஷிக் மகாசங்
  10. சன்ஸ்கார் பாரதி
  11. பாரதிய சிக்‌ஷன் மண்டல்

விபீடணப் பட்டாளங்களுக்குத்
தாரை வார்க்கும் ஏற்பாடு?

ஒன்றிய அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒதுக்கும் நிதிகளை கோடிக் கணக்கில் மேற்கண்ட அதன் பிரிவுகளுக்கே மடைமாற்றம் செய்து, அவற்றை வளர்ப்பதற்கும், சமஸ்கிருத கல்வி வளர்ச்சி, பல்லாயிரம் ஆசிரியர் நியமனங்களுக்கும் – பார்ப்பனரல்லாதார் சமஸ்கிருத சரணாகதி விபீடணப் பட்டாளங்களுக்கும் தாரை வார்க்கும் ஏற்பாடுதான் இது!

மக்கள் வரிப்பணம் எப்படி மிக லாவகமாக ஒதுக்கப்படுகிறது பார்த்தீர்களா, இது நியாயம்தானா?

சமஸ்கிருதம் பேசுவோர் எவ்வளவு பேர்?

2011 ஆம் ஆண்டு, நாடு முழுவதும் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ் பேசுவோர் எண்ணிக்கை 7.9 கோடி பேர்.

அதேநேரம், சமஸ்கிருதம் பேசுவோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

வெறும் 24,821 பேர் மட்டுமே!

இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடி!

(சதவிகித அடிப்படையில் ஒரு விழுக்காடுகூட இல்லை. 0.00001773 மட்டுமே)

சமஸ்கிருதம், கோடியிலும் கடை கடை கடை….

அதற்குத்தான் மோடி தலைமையில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., கோடி, கோடியாக அள்ளி, அள்ளிக் கொடுக்கிறது! மற்ற செம்மொழிகளுக்குக் கிள்ளிக் கிள்ளியும் தர மறுக்கிறது!

பிரச்சாரக் களம் காண்போம்!

தமிழ்ப் பாசம், நேசப் பேச்செல்லாம் வெறும் மேடை வஜனங்கள்தான் என்ற சூட்சமம் புரிகிறதா?

தமிழ்ப் பெருமை பேசும் இவர்கள், தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் மட்டுமே மந்திரம் ஓதப்பட வேண்டும் என்று கேட்பார்களா? போராடுவார்களா?

தமிழ்நாடு முழுவதும் இதனை திண்ணைப் பிரச்சாரமாகத் தொடங்கி, தெருமுனை மற்றும் மேடைப் பிரச்சாரமாகச் செய்யவேண்டும்.

தமிழுக்காக உருகிய பார்ப்பன தாசர்களே, ஆரியக் கூலிகளே, உங்கள் பதில் என்ன?

 

சென்னை   தலைவர்,

26.6.2025  திராவிடர் கழகம்

குறிப்பு: மேற்கண்ட அறிக்கை – துண்டறிக்கை யாக தலைமை நிலையத்தில் கிடைக்கும். வாங்கிப் பரப்புவீர்!

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *