சுயமரியாதைச் சுடரொளிகள்!-தமிழ்க்கோ

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வரலாற்றுப் பாதை படம் பிடித்து காட்டப்படுகிறது.

கோவை அய்யாமுத்து
(வைக்கம் போராட்டத்தில் பங்கேற்றவர் )

வைக்கம் போராட்டம் இந்தியாவில் நடைபெற்ற மிகப் பெரிய சமூகநீதி போராட்டங்களில் முக்கியமானது. கேரள மாநிலம் வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் தெருக்களில் நடக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி 1924 மார்ச் 30 அன்று போராட்டம் தொடங்கியது. தந்தை பெரியார் தலைமையில் 1924 ஏப்ரல் 13ஆம் தேதி முதல் இந்தப் போராட்டம் தொடர்ந்தது.வைக்கம் போராட்டத்துக்கு இன்று 101 வயது. இந்தப் போராட்டத்தில்  பெரியாரோடு உற்ற துணையாக இருந்தவர் கோவை அய்யாமுத்து. இவர் சுதந்திரப் போராட்ட வீரர். சர்வோதயா இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர். கோயமுத்தூர் மண்டலத்தில் கதர் இயக்கத்தின் தீவிர வெற்றிக்கு பங்காற்றியதால் அவரை கதர் அய்யாமுத்து என்று அந்த காலக் கட்டத்தில் அழைத்தார்கள்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பலமுறை சிறை சென்றார் அய்யாமுத்து. இன்றைய திருப்பூர் மாவட்டம் காங்ேகயத்தை அடுத்த பரஞ்சேர் வழி கிராமத்தில் டிசம்பர் 1898இல் அங்கண்ணன் – மாரம்மாள் இணையருக்கு மகனாக பிறந்தார்.

ராணுவத்தில் பணி

கோவை செயண்ட் அந்தோணியார் பள்ளியிலும், லண்டன் மிஷன் பள்ளியிலும் ஒன்பதாம் வகுப்பு வரை கல்வி பயின்றார்.

முதல் உலகப் போரின்போது ராணுவத்தில் சேர்ந்து அய்ரோப்பியப் படையில் ஈராக்கில் பணியாற்றினார். 1921ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இணையர் பெயர் கோவிந்தம்மாள்.

1921இல் கோவைக்கு வந்த காந்தியார் உரை கேட்டு அய்யாமுத்துவும் அவரின் மனைவியும் காங்கிரசில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு இருவரும் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரசில் இருக்கையிலேயே கோவை அய்யாமுத்து பெரியாருடன் அணுக்கமான உறவு கொண்டிருந்தார்.

வைக்கம் போராட்டம்

1924இல்   வைக்கத்தில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற ஜாதிய வன்கொடுமை ஒழிப்புப் போராட்டத்தில் கோவை அய்யா முத்துவும் பங்கேற்றார்.

ஊர், ஊராகச் சென்று போராட்டத்துக்கு ஆதரவாகப் பேசி நிதி திரட்டினார். பொதுக் கூட்டங்களில் பேசக் கூடாது என திருவாங்கூர் சமஸ்தானத்தாரின் ஆணை அவருக்கு தெரிவிக்கப்பட்டது.

வைக்கம் போராட்டக் குழுவினர் இந்த தடை உத்தரவைமீற முடிவு செய்தனர். இந்த உத்தரவை யார் மீறுவது? என்று ஆலோசித்தனர். ஒரு பேப்பரில் பெயர்களை எழுதிப் போட்டு குலுக்கி எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி எடுக்கப்பட்ட பேப்பரில் அய்யாமுத்து பெயரே வந்தது. அதன்படியே தடையைமீறுவது என்ற தீர்மானத்தில் சிறையின்கீழ் என்ற ஊரில் அரசின் பிற்போக்குத்தனத்தையும் பட்டியலின மக்களின் சம உரிமைக்கான நியாயத்தையும் கோவை அய்யாமுத்து எடுத்துக் கூறினார். காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர். கோவை அய்யாமுத்துவுக்கு ஒரு மாத தண்டனையும் 15 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.  பின்னர் சுசீந்திரம் ஆலயப் பிரவேச போராட்டத்திலும் தீவிர பங்கேற்றார்.

ஆதி திராவிடர் மாணவர்களுக்கு பாடசாலை

கோவை அய்யாமுத்து ஆதி திராவிடர் மாணவர்களுக்குப் பாடசாலை நடத்தினார். இதற்கு அவரது ஜாதியினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். அதைப் புறம்தள்ளி தன் பணியைத் தொடர்ந்தார். ‘உண்மை நாடுவோர் சங்கம்’ ஒன்றை நிறுவி இளைஞர்களை பங்கேற்கச் செய்து பல விஷயங்கள் பற்றி விவாதிக்க செய்தார்.

1932ஆம் ஆண்டில் புஞ்சைபுளியம்பட்டியில் பொதுக் கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீர் இறைக்க ஆதிக்க வர்க்கத்தினர் தடை விதித்து இருந்தனர். இதை அறிந்த அய்யாமுத்து அந்த மக்களின் உரிமை காக்க மனைவியுடன் சென்று போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது காவல்துறையினர் நடத்திய தடியடியில் காயமடைந்தார்.

1932ஆம் ஆண்டு காந்தியைப் பிரிட்டிஷ் அரசு கைது செய்ததை எதிர்த்து நடந்த போராட்டத்தில் அய்யாமுத்துவும் அவரது மனைவி கோவிந்தம்மாளும் கலந்து கொண்டனர். இதில் இருவரும் கைதாகி ஆறு மாதம் தண்டனை பெற்றனர். கோவிந்தம்மாள் வேலூர் சிறையிலும் அய்யாமுத்து கோவை சிறையிலும் அவதிப்பட்டனர்.

கள்ளுக்கடை மறியல்

அய்யாமுத்துவும் அவர் மனைவியும் பல ஊர்களில் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அய்யாமுத்து காந்தியார் அறிவுரைப்படி கதர் இயக்கத்தைக் கோவையில் ஆரம்பித்தனர். கோவையில் கதர் கடையைத் துவங்கி கதர் விற்பனையை மேற்கொண்டார்.

தமிழ்நாடு கதர் சங்கத்தின் தலைவராக விளங்கிய போது அய்யாமுத்து புதிய நூற்புக் கருவிகளை அறிமுகப்படுத்தினார்.

ஈரோட்டில் இருந்து வெளிவந்த ‘குடிஅரசு’ பத்திரிகையைச் சென்னைக்குக் கொண்டு சென்று அங்கிருந்து வெளியிட அய்யாமுத்துவைப் பெரியார் நியமித்தார். இதன் முழு பொறுப்பையும் ஏற்று திறம்பட நிறைவேற்றினார். குடிஅரசு ஏட்டில் உள்ளத்தைச் சுண்டியிழுக்கும் முறையில் கட்டுரைகள் எழுதினார்.

அய்யாமுத்து எழுதிய   ‘மேயோ கூற்று மெய்யா? பொய்யா?’ என்ற  நூல் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் விழிப்புணர்ச்சியையும் ஊட்டியது.

இவரின் ‘எனது நினைவுகள்’ என்ற  தன் வரலாற்று நூல் புகழ் பெற்றது. கதர் இயக்கத்திற்காகக் குடிநூல் என்னும் இதழை நடத்தினார். நச்சுப் பொய்கை, கஞ்சன் போன்ற நாடக நூல்களை எழுதினார். அக்காவும், தங்கையும், இராஜபக்தி, நாம் எங்கே செல்கிறோம் உள்ளிட்ட பல நூல்களையும் எழுதி உள்ளார்.

1972இல் சுதந்திர தின வெள்ளி விழாவில் இந்திரா காந்தி அய்யா முத்துவுக்கு சிறந்த தேச பக்தர்களுக்கான தாமிரப் பத்திரம் வழங்கினார்.

இதய நோயால் பாதிக்கப்பட்டு உடல் நலிவுற்ற அய்யாமுத்து டிசம்பர்  21, 1975இல் மறைந்தார். இவர் மறைந்த அடுத்த வாரமே 27.12.1975 அவருடைய இணையர் கோவிந்தம்மாளும் காலமானார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *