சென்னை, ஜூன்.24- ‘நீட்’ தேர்வு முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வு தகுதியைப் பற்றியது அல்ல, சந்தையைப் பற்றியது மட்டுமே என்பதை நிரூபிக்கும் மற்றொரு வழக்கு. அதனால்தான் நாங்கள் சத்தமாகவும் தெளிவாகவும் சொல்கிறோம், நீட் என்பது சுத்தமானது அல்ல, அதற்கு எங்களிடம் எல்லா காரணங்களும் உள்ளன.
தரம், தரம் என்றார்கள். நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது. நீட் எனும் தேர்வுமுறையே ஒரு ஊழல். அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும், முறைகேடு களும்தான்.
‘நீட்’ முதல் கோணல் முற்றும் கோணல்
‘நீட்’ முதல் கோணல் முற்றிலும் கோணல். ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜனதா மாநாடுகளில் காட்சிப் பொருளாக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை.
இவ்வாறு அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இதுதான் நீட் தேர்வின் தராதரம்
உயரதிகாரிகளே பணம் வாங்கிக் கொண்டு மதிப்பெண் போட்ட விவகாரம்
மும்பை, ஜூன் 24 நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தேர்வில் அதிக மதிப்பெண் போடுவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை சிபிஅய் கைது செய்துள்ளது.
நீட் தேர்வு விவகாரம் ஆரம்பம் முதலே பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வரும் நிலையில் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களை குறிவைத்து ஒரு மோசடி கும்பல் செயல்பட்டு வந்துள்ளது சிபிஅய் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பல் மருத்துவர் ஒருவரை கைது செய்துள்ள சிபிஅய் அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில், 90 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு அதிக மதிப்பெண் பெற்றுத்தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அதிக மதிப்பெண்கள்
தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் உதவியுடன் தேர்வில் அதிக மதிப்பெண் போடுவதாகவும் தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் அந்த மாணவர்களின் திருத்தப்பட்ட அதிக மதிப்பெண்கள் என்ன என்பதை தெரிவிப்பதாகவும் கூறி மாணவர்களின் பெற்றோர்களை மோசடி நபர்கள் நம்பவைத்துள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது வெளியான நிலையில் இதுதொடர்பாக மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்றும் தேசிய தேர்வு நிறுவனம் (NTA)-விடமும் விசாரணை மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது.