தமிழ்நாட்டில் பகுத்தறிவுச் சுற்றுலா மலேசிய திராவிடர் கழகத் தோழர்கள் சென்னை பெரியார் திடலுக்கு வருகை-தொகுப்பு: வீ.குமரேசன்

viduthalai
12 Min Read

தந்தை பெரியார் முதன் முதலாக வெளிநாட்டுப் பயணம் சென்றது மலேயா நாட்டுக்குத்தான். 1929 ஆண்டு டிசம்பர் 16இல் நாகப்பட்டினத்திலிருந்து கடல் பயணமாக பினாங்கு துறைமுகத்திற்கு வந்திறங்கினார். உடன் அன்னை நாகம்மையார் மற்றும் சுயமரியாதை இயக்கத் தோழர்கள் சிலர் சென்றிருந்தனர். சுயமரியாதை இயக்கம் பற்றியும், ‘குடிஅரசு’ ஏடு மலேயாவுக்கும் சென்று கொண்டிருந்த நிலையில் தந்தை பெரியார் பற்றியும், சுயமரியாதை இயக்கப் பணிகள்பற்றியும் மலேயா வாழ் புலம் பெயர் தமிழர்களும், வணிக நோக்கத்தில் மலேயா சென்றிருந்த தமிழர்களும் அறிந்திருந்தனர்.

பெரியாரின் முதல் வெளிநாட்டுப் பயணம்

தந்தை பெரியாரின் வருகைக்கு எதிர்ப்பு கிளம்பியிருந்த நிலையில் வணிகத் தமிழர்களும், மற்ற தமிழர்களும் பெரியாருக்கு வெகு விமரிசையாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பினைப் பார்த்த எதிர்ப்பாளர்கள் தாங்கள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்தனர்.  வரவேற்பைப் பெற்றபின்னர் மலேயா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். கூட்டத்திற்கு மக்களை அழைத்துப் பேசியதுடன் புலம் பெயர் தமிழர்கள் – ரப்பர் தோட்டத்தில் தொழிலாளர்களாக வாழ்ந்து வந்த தமிழர்களை அவர்களின் வாழ்விடம் தேடி மலைப் பகுதிகளுக்குச் சென்று சந்தித்து உரையாடினார்.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களுக்கு மலேசியாவிலிருந்து வருகை தந்த மலேசிய திராவிடர் கழக பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர்.

மலேயா ரப்பர் தோட்டத்தில் உழைத்த தமிழர்கள் தங்களது வருவாயின் பெரும் பகுதியை குடிப் பழக்க வழக்கங்களுக்குச் செலவழித்து வறுமை நிலையில்தான் வாழ்ந்து வந்தனர். அவர்தம் குடும்பத்துப் பிள்ளைகள் கல்வி கற்கும் ஆர்வம் ஏதுமின்றி தொழிலாளர்களாகவே உழைத்து வந்தனர்.

தொழிலாளர்களைச் சந்தித்த பெரியார் அவர்களுக்கு சுயமரியாதை உணர்வின் அவசியம் குறித்து உரையாடி யதுடன், பகுத்தறிவுச் செயலுடன் வாழ்ந்திட அறிவுறுத்தினார். மனிதருக்கு அடிப்படைத் தேவை ‘கல்வி’ என்பதை வலியுறுத்தி அவர்தம் குழந்தைகளை பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பிடச் சொன்னார். கால்நடையாகவே சென்று பல இடங்களில் வாழ்ந்து வந்தபுலம் பெயர் தமிழ்த் தொழிலாளர்களை சந்தித்துப் பேசினார். வாழ்வாதாரம் வேண்டிய மலேயா வாழ்த் தமிழர்கள் அந்த நாட்டையே தங்களது நிரந்தர வாழ்விடமாக கொள்ள வேண்டும். தமிழ் நாட்டிற்கு திரும்பிடக் கூடாது. அந்தநாட்டு மண்ணுக்கு – ஆட்சியினருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்! அந்த நாட்டில் நிரந்தரமான குடி மக்களாக மாறிட வேண்டும் – இப்படி புலம் பெயர் தமிழர்களின் வாழ்க்கை, அவர்தம் முன்னேற்றம் குறித்து தொலைநோக்குடன் கூடிய அக்கறை காட்டிப் பேசியது அந்த மக்களிடம் மாபெரும் விழிப்புணர்ச்சியினை ஊட்டியது. பெரியார் ஒரு மாத காலம் மலேயாவின் பல பகுதிகளுக்கும், சிங்கப்பூருக்கும் சென்று வந்தார்.

மலேசியாவுக்கு இரண்டாம் பயணம்

பெரியார் மீண்டும் 1954இல் மலேயா செல்கிறார். உடன் அன்னை மணியம்மையார் சென்றார். அன்றைய பர்மா நாட்டில் (இன்றைய மியன்மார்) ரங்கூன் நகரில் நடைபெற்ற உலக புத்த மாநாட்டில் பங்கேற்று விட்டு திரும்பும் வழியில் பினாங்குத் தீவிற்கு வந்திறங்கினார். 25 ஆண்டுகள் கழித்து – ஒரு தலைமுறைக் காலம் கழித்து மலேசியாவில் பயணம் செய்து மீண்டும் தமிழ் மக்களைச் சந்தித்தார். தமிழர்தம் வாழ்வி்ல பெரும் முன்னேற்றம் நடைபெற்றன.  நேரில் பார்த்தார். ரப்பர் தோட்டத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்களின் பிள்ளைகள் படித்து நல்ல நிலைமையில் வாழ்வதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தார். 25 ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்த தமிழ் மக்கள் தந்தை பெரியாரின் அறிவுரையால் தாம் அடைந்த முன்னேற்றத்தை அவரிடமே எடுத்துச் சொல்லி நன்றிப் பெருக்குடன் மகிழ்ந்தனர். மலேசிய நாட்டிற்கு தந்தை பெரியாரின் இரண்டு முறை வருகையும், சுயமரியாதை இயக்கம், ‘குடிஅரசு’ ஏடு ஏற்படுத்திய தாக்கங்களும் ஒரு மாபெரும் புரட்சியை அமைதியாக நடத்தின.

திராவிடர் கழகம்

96ஆம் ஆண்டில் பெரியார் பதி்ப்பகங்கள்: கருத்தரங்கமும், கண்காட்சியும் நிகழ்ச்சியில் மலேசிய திராவிடர் கழக பொறுப்பாளர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.

மலேசிய திராவிடர் கழகம் தோற்றம்

தந்தை பெரியாரின் கொள்கை வழி வாழ்ந்த தமிழர் வழித் தோன்றல்கள் தமக்கு அமைப்பு வேண்டும் என்பதைஉணர்ந்து 1947இல் மலேசிய திராவிடர் கழகத்தை தோற்றுவித்தனர். அதே காலக் கட்டத்தில் மலேசிய இந்திய காங்கிரஸ்  என்ற அரசியல் கட்சியும் உருவாகியது. மலேசிய திராவிடர் கழகம் சமூக இணக்கம் வேண்டி, வலிமையாக மலேசியா நாட்டு அரசியல் நிலைமைகளை முடிவு செய்கின்ற வகையில் மக்கள் இயக்கமாக விளங்கியது. சரியான கட்சிக் கட்டமைப்புடன் தேசிய நிலையில், மாநில அளவில் மற்றும் கிளைக் கழகங்கள் என அனைத்து நிலையிலும் மலேசியா நாடு முழுவதும் பரவி ஒற்றுமை உணர்வினை பறைசாற்றியது. தற்சமயம் 80ஆம் ஆண்டை நோக்கி பீடு நடைபோடுகிறது. மலேசிய திராவிடர் கழகத்தின் வளர்ச்சிக்கு திருச்சுடர் கே.ஆர். ராமசாமி உள்ளிட்ட பல தலைவர்கள் வலு சேர்த்தார்கள். அப்படிப்பட்ட மலேசிய திராவிடர் கழகத்தின் பேராக் மாநிலத்தில் உள்ள சுங்கைசிப்புட் கிளையினைச் சார்ந்த 12 தோழர்கள் பகுத்தறிவு சுற்றுலாவில் தமிழ்நாட்டிற்கு ஒரு வார கால பயணமாக வந்திருந்தனர்.

பகுத்தறிவுச் சுற்றுலா

மலேசியா கோலம்பூரிலிருந்து விமானப் பயணத்தில் ஜூன் 16ஆம் நாள் மலைக்கோட்டை மாநகரமாம் திருச்சிக்கு வந்தனர். மலேசியத் தோழர்கள் வருகை குறித்து மலேசியா திராவிடர் கழகம் முன்னமே தகவல் தெரிவித்திருந்த நிலையில் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர்  வீ. அன்புராஜ் பெரியார் இயக்கத்தின் நிறுவனங்களை வருகை தருகின்ற தோழர்கள் பார்வையிடும் வகையில் திட்டமிட்டிருந்தார்.

‘பெரியார் உலகம்’ பார்வையிடல்

சுற்றுலா வந்த தோழர்கள் திருச்சியில் முதன் முதலாக திருச்சி  – சென்னை நெடுஞ்சாலையில் சிறுகனூரில் அமையப் பெற்று வரும் ‘பெரியார் உலகத்தை’ பார்வையிட்டனர். பரந்து பட்ட 27 ஏக்கர் பரப்பில் அடிப்படைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வகையில் 95 அடி உயரத்தில் 60 அடி பீடத்தில் அமையப் பெறவுள்ள தந்தை பெரியாரின் மாபெரும் சிலை மற்றும் சுற்றி அமைந்திடவுள்ள நூலகம், ஆய்வு மய்யம், கலந்துரையாடும் ஆய்வரங்கம், குழந்தைகள் பூங்கா, அறிவியல் பூங்கா என்று அமைந்திட உள்ள கட்டமைப்பு குறித்து தோழர்களுக்கு விளக்கம் சொல்லப்பட்டது. ‘பெரியார் உலகம்’ நிறைவு பெறும் நிலையில், உலக மக்களின் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் இருக்கும் என்பதை உணர்ந்து தோழர்கள் பெரு மகிழ்ச்சி பெற்றனர்.

திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம்

மலேசிய திராவிடர் கழகத்தின் பேராக் மாநிலச் செயலாளர்  இரா. கோபி தலைமையில் வந்திருந்த மலேசியத் தோழர்கள் அடுத்து திருச்சி கலைஞர் கருணாநிதி நகர் பகுதியில் அமைந்துள்ள பெரியார்  நூற்றாண்டு கல்வி வளாகத்திற்கு வந்தனர். வருகை தந்த தோழர்களை கல்வி நிலையங்களின் செயலாளர்\தாளாளர்  வீ.அன்புராஜ் வரவேற்றார். கல்வி வளாகத்தில் அமைந்துள்ள பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, நாகம்மையார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, பெரியார் மழலையர் பள்ளி, பெரியார் நூற்றாண்டு மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப் பள்ளி, மணியம்மையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியார் மருந்தியல் கல்லூரி, நாகம்மையார் குழந்தைகள் இல்லம், கைவல்யம் முதியோர் இல்லம் என பல தரப்பட்ட நிறுவனங்களை பார்வையிட்டனர். தந்தை பெரியார் தனது குடும்பச் சொத்துடன், பொது மக்களிடம் சிறு சிறு தொகையாக நன்கொடை பெற்ற தொகையைக் கொண்டு தந்தை பெரியாரும் அவருக்குப் பின்னர் அன்னை மணியம்மையாரும் இன்றைக்கு இயக்கத்தை தலைமையேற்று நடத்திடும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி   அவர்களும் மக்களுக்கு கல்விச் சேவையை வழங்கி வரும் நிறுவனங்களின் பணிகளை பார்த்தனர். கடந்த  2024 –2025 கல்வி  ஆண்டில் பத்தாம் வகுப்பு,  பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருச்சி கல்வி வளாகப் பள்ளிகள் மற்றும் பெரியார் அறக்கட்டளை நடத்திடும்   ஜெயங்கொண்டம், வெட்டிக்காடு பள்ளிகளில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் வெற்றி (100 விழுக்காடு) பெற்றனர். இந்த செய்தி அறிந்த  மலேசிய தோழர்கள் பெரியார் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின்  திறன்மிகு செயல்பாட்டினை அறிந்து கொண்டனர். அனைவருக்கும்  கல்வி – குறிப்பாகப் பெண்களுக்கு கல்வி என்பதை பிரச்சாரத்தோடு, கல்விச் சேவை வழங்கி வருவதை நேரில் பார்த்து மகிழ்ந்தனர். நண்பகல்  உணவினை கல்வி வளாகத்திலேயே அருந்தி விட்டு  திருச்சியில் பிற சுற்றுலா இடங்களைப் பார்க்க சென்றனர்.

தஞ்சாவூர் பெரியார் மணியம்மை
பல்கலைக் கழகத்துக்கு வருகை

திருச்சியிலிருந்து கிளம்பிய மலேசியத் தோழர்கள் கன்னியாகுமரி மதுரை என பார்த்துவிட்டு தஞ்சைக்கு ஜூன் 19ஆம் நாள் வந்தனர். முதலிடமாக, வல்லத்தில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தினை (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) பார்வையிட்டனர். பல்கலைக் கழகத்தில் உயர் நிலைக் கல்வியான கலை மற்றும் அறிவியல் புலன்கள், பொறியியல் கட்டடக் கலை, மேலாண்மை, செயற்கை நுண்ணறிவு மற்றும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், பெரியார் அறிவு மய்யத்தில் அமையப் பெற்றுள்ள டாக்டர் அர்ஜுன் சிங் நூலகம் என அனைத்துப் புலன்களையும், சமுதாய வளர்ச்சிக்கு நடைபெறும் பணிகளையும் பார்வையிட்டனர். கல்வி புகட்டும் பல்கலைக் கழகமாக மட்டுமில்லாமல், சுற்றுப்புற கிராம மக்களின் மேம்பாட்டுக்கான வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருவதால் ‘மக்கள் பல்கலைக் கழகம்’ என விளங்குவது குறித்து பெருமிதம் கொண்டனர். தந்தை பெரியாரின் பெருங் கனவை இயக்க அளவில் நடைமுறைப்படுத்தி வரும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் செயல்பாட்டை, பெரியார் அடிச்சுவட்டில் பயணப்பட்டு வருவதை கண்டு மனம் மகிழ்ந்தனர். அருகில் அமைந்துள்ள பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியையும் பார்வையிட்டனர். சுற்றுப்புற கிராமங்களிலிருந்து வரும் சமூகத்தின் அடித்தட்டு குடும்பப் பிள்ளைகளுக்கு தொழில் சார்ந்த கல்வியினை பாலிடெக்னிக் கல்லூரி வழங்கி வருவது மலேசியத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தது.  மலேசிய தோழர்களுக்கு பல்கலைக் கழக வளாகத்திலேயே நண்பகல் உணவுக்கு  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சென்னை பெரியார் திடல்

பல்கலைக் கழக வளாகத்திலிருந்து கிளம்பி, தஞ்சை கும்பகோணம், புதுச்சேரி, மாமல்லபுரம், காஞ்சிபுரம் என பல இடங்களுக்குச் சென்று விட்டு 22.6.2025 அன்று சென்னை – பெரியார் திடலுக்கு காலை 10 மணியளவில் வருகை தந்தனர். வருகை தந்த தோழர்களை பெரியார் திடல் மேலாளர் ப. சீத்தாராமன் வரவேற்றார். பெரியார் நினைவகம், பெரியார் பகுத்தறிவு நூலகம் & ஆய்வகம், பெரியார் சுயமரியாதை நிலையம், விடுதலை அச்சகம், பெரியார் நூல் நிலையம், இவை அனைத்தையும் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் சுற்றிக் காண்பித்து விளக்கமளித்தார். உடன் தலைமையிடத் தோழர்கள், சோ. சுரேஷ், கலைமணி மற்றும் பெரியார் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் உடுமலை ஆகியோர் உடனிருந்து உதவினர். விடுதலை செய்திப் பிரிவுக்குச் சென்று கழகத்தின் துணைத் தலைவர், விடுதலையின் பொறுப்பாசிரியர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களைச் சந்தித்தனர். ‘விடுதலை’ ஏடு பற்றிய செய்திகளை கவிஞர்  சுருக்கமாக எடுத்துரைத்தார்.

தமிழர் தலைவருடன் சந்திப்பு

பகுத்தறிவு சுற்றுலா வந்த மலேசிய திராவிடர் கழகத் தோழர்கள் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை பெரியார் அருங்காட்சியகத்தில் சந்தித் தனர். மலேசிய திராவிடர் கழகத்தின்  தேசியத் தலைவர்   பாரதிசாமிக்கண்ணு (சிலாங்கூர்) தேசிய பொதுச் செயலாளர்  பொன்வாசகம் பொன்னம்பலம் (சிலாங்கூர்) சார்பாக தமிழர் தலைவருக்கு சால்வை அணிவித்து மலேசியாவிலிருந்து கொண்டு வந்த நினைவுப் பரிசினையும் வழங்கினர்.

தமிழர் தலைவரின் நெறி சார்ந்த உரை

மலேசியத் தோழர்களுடன் தமிழர் தலைவர் கலந்துரை யாடுகையில் கூறியதாவது:

மலேசிய திராவிடர் கழகம் தந்தை பெரியாரின் கொள்கை வழி நடந்திடும் பாரம்பரியம் மிக்க அமைப்பு. தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழாவினை நிறைவு செய்திட்ட வேளையில் மலேசிய திராவிடர்கழகம் 80ஆம் ஆண்டை நோக்கிச் செல்கிறது. மலேசிய நாட்டின் அரசியல் தலைவர்களுடன், மிகவும் அணுக்கமாவும், ஆதரவாகவும் இருந்தார்கள். மலேசிய திராவிடர் கழகத்தின் முன்னோடித் தலைவர்கள். பின்னாளில்  தங்களுக்குள் ஏற்பட்ட தன் முனைப்பு காரணமாக   பிரிந்து சென்று பல அமைப்புகளை ஏற்படுத்தினர். இது தலைவர்களிடம் ஏற்பட்ட பிளவு. பெரியார் கொள்கையில் ஏற்பட்ட பிரிவினை அல்ல. பிரிந்து சென்ற அனைவருமே பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுக் கொள்கையில் பற்றுக் கொண்டு செயல்படுபவர்கள்தான். இன்றைய   நிலையில் அமைப்புகள் ஒன்றுபட வேண்டும் என்பதாக அல்லாமல், அமைப்புகள் ஒன்று சேர்ந்த பெரியார் கொள்கை கூட்டமைப்பாக இணக்கமாக செயல்பட வேண்டும். அனைத்து அமைப்பினையும் ஒருங்கிணைப்பு செய்யப்பட வேண்டும் என்பதை திராவிடர் கழகத்தின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம். தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைக் கடைப்பிடிப்பில் உயர்வு பெற்றவர்கள் அந்தக் கொள்கைகளை அடுத்த தலைமுறையினருக்கு, இளந் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லி அவர்களைப் பண்படுத்திட வேண்டும்.

சுற்றுலா வந்துள்ள தோழர்கள் அனைவரும் இந்த செய்தியினை மலேசிய திராவிடர் கழகத்தின் தோழர்கள் அனைவருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். தொடர்ந்து எங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டுகிறேன். இயக்கச் செய்திகள்  நாங்கள் வெளியிட்டு வரும் உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான ‘விடுதலை’ ஏட்டில் வருவது அனை வருக்கும் தெரிய வரும். வருகை தந்ததற்கு வாழ்த்துகள்.

இவ்வாறு தமிழர் தலைவர் மலேசியத் தோழர்களிடம் உரையாற்றினார்.

குடிஅரசு பதிப்பகக் கண்காட்சி

மலேசியத் தோழர்கள் வருகை தந்த அன்று காலையில் பெரியார் எணினி நூலகத்தில் குடிஅரசு பதிப்பகக் கண்காட்சி திறப்பும், 96ஆம் ஆண்டு காணும் பெரியார் பதிப்பகங்கள் நிகழ்ச்சி மாலையிலும், நடைபெற்றன.

கண்காட்சியினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் மலேசிய திராவிடர் கழகத் தோழர்கள் அனைவரும் பங்கேற்றனர். 1929 முதல் ‘குடிஅரசு’ பதிப்பகம் தொடங்கி பல்வேறு நிலைகளில் பெயர் மாற்றம் பெற்று, இன்றைக்கு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், திராவிடர் கழக (இயக்கம்) வெளியீடு, பெரியார் பிஞ்சு புத்தக வெளியீடு என்று பதிப்பகத் துறையில் பெரியார் கொள்கைகளை பரப்பிடும் செயல் நடைபெற்று வருகிறது. கண்காட்சியில் பெரியார் பதிப்பகங்களின் சார்பாக வெளியிடப்பட்ட பல புத்தகங்களின், ஏடுகளின் முதல் வெளியீடுகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் கண்காட்சியினை பற்றி தோழர்களுக்கு விளக்கம் அளித்தார். பெரியார் இயக்கத்தின் சார்பாக மலேசியத் தோழர்களுக்கு நண்பகல் உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

96ஆம் ஆண்டு பெரியார் பதிப்பகங்கள் விழா

மாலையில் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நடைபெற்ற பெரியார் பதிப்பகங்களின் 96ஆம் ஆண்டு விழாவில் பகுத்தறிவுச் சுற்றுலா வந்த மலேசிய தோழர்களுக்கு தமிழர் தலைவர் சால்வை அணவித்து வாழ்த்தினார். ‘தந்தை பெரியார் வாழ்க்கை குறிப்புகள், புத்தகத்தை ஒவ்வொரு தோழருக்கும் நினைவுப் பரிசாக ஆசிரியர் அவர்கள் வழங்கினார். சுற்றுலா வந்தோர் சார்பாக சுற்றுலாவை வழி நடத்தி அழைத்து வந்த  மலேசிய திராவிடர் கழகத்தின் பேராக் மாநிலச் செயலாளர்  இரா. கோபி ஏற்புரை ஆற்றினார்.

தந்தை பெரியாரின் புத்தகப் புரட்சி

விழாவில் தமிழர் தலைவர் எழுதிய ‘96ஆம் ஆண்டு கால பதிப்பகத் தொண்டு – வரலாறும் சாதனைகளும்’ புத்தக வெளியீட்டின் பொழுது அதன் முதல் பிரதியை  இரா. கோபி பெற்றுக் கொண்டார்.

தனது ஏற்புரையில் தங்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பிற்கு நன்றி தெரிவித்தார். தமிழர் தலைவர் தங்களுக்கு அளித்தஅறிவுரையை நிச்சயம் செயல்படுத்திடுவதாக உறுதி அளித்தார். மலேசியாவில் தமிழர்களை ஒன்றிணைக்கும் பணியில் மலேசிய திராவிடர் கழகம் முழுமையாகப் பணியாற்றும் எனக் கூறினார்.

தங்களுடைய ஒரு வார கால சுற்றுலாவில் பல்வேறு கட்டங்களில் திராவிடர் கழகம் அளித்த ஆதரவு, வரவேற்பு, தமிழர் தலைவர் அளித்த ஆலோசனை உரைகள் அனைத்தும் பயனுள்ள வகையில் அமைந்தன என்று கூறி அனைவரும் விடை பெற்றுச் சென்றனர்.

தமிழ்நாடு பகுத்தறிவு சுற்றுலாவில் பங்கேற்ேறார்

இரா. கோபி – ம.தி.க. பேராக் மாநில செயலாளர், க. ஏலன்- ம.தி.க. சுங்கை சிப்புட் கிளை தலைவர்,  ஆ. மணிவேலு – ம.தி.க. சுங்கை சிப்புட் கிளை துணைத்தலைவர்,  அஞ்சலை தேவி- ம.தி.க. சுங்கை சிப்புட் கிளை மகளிர் தலைவர்,  ஞா. கிலேடிஸ்- ம.தி.க. ஈப்போ கிளை மகளிர் செயலாளர், ம. இரவீந்திரன் – ம.தி.க. சுங்கை சிப்புட் கிளை செயலாளர், மா. முருகன்- ம.தி.க. சுங்கை சிப்புட் கிளை செயலவை உறுப்பினர், இரா கணேசன்- ம.தி.க. சுங்கை சிப்புட் கிளை செயலவை உறுப்பினர்,  மு. இரவிச்சந்திரன்- ம.தி.க. சுங்கை சிப்புட் கிளை செயலவை உறுப்பினர், ம. அகஸ்டின்- ம.தி.க. சுங்கை சிப்புட் கிளை செயலவை உறுப்பினர்,  க. வேதமாணிக்கம்- ம.தி.க. சுங்கை சிப்புட் கிளை கணக்காயர், இரா. ரவி – ம.தி.க. சுங்கை சிப்புட் கிளை கணக்காயர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *