‘மதுரை மாநாடு பக்திக்காக அல்ல, ஓட்டுக்காக’ என்று நாங்கள் கூறி வந்ததை ஒப்புக் கொண்ட பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி!-திராவிடர் கழகத் தலைவர் பேட்டி

viduthalai
5 Min Read

சென்னை, ஜூன் 22 மதுரையில் நடக்கவிருக்கும் முருகன் மாநாடு 2026 தேர்தலுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று மாநில பிஜேபி தலைவர் கூறியுள்ளார் – இதிலிருந்து இம்மாநாடு பக்திக்காக அல்ல. அரசியலுக்காக – ஓட்டுக்காக என்பது அம் பலமாகி விட்டது என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

செய்தியாளர்களிடம் இன்று (22.6.2025) சென்னை பெரியார் திடலில் அவர் கூறியதாவது:

தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய சுயமரியாதை இயக்கப் பணிகளைத் தொடர்வதற்கு, அடித்தளமாகக் கொண்டது சுயமரியாதை இயக்கத்தினுடைய கருத்தியல் போர் வாளான ‘குடிஅரசு’ பத்திரிகையாகும்.  அந்த ‘குடிஅரசு’ பத்திரிகை  1925இல் மே 2 ஆம் தேதி அன்று கடலூர் தவத்திரு ஞானியார் அடிகளைக் கொண்டு தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது தந்தை பெரியார்  அவர்கள் காங்கிரசில் இருந்தார்கள். அங்கு இருக்கும் போதே சுதந்திரமாக ஜாதி பேதம் நீங்கிய, பெண்ணடிமைத்தனம் நீங்கிய ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.   தந்தை பெரியார் வகுப்புரிமைப் பிரச்சினை காரணமாக காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி, தனியே அரசியலுக்கு அப்பாற்பட்ட  சுயமரியாதை இயக்கம் கண்டு அதை அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள்.

சுயமரியாதை இயக்கம் தோன்றியது

சுயமரியாதை இயக்கத்தின் அறிவிப்பு 1925 டிசம்பர் வாக்கிலே இருந்தாலும், நடைமுறையில் அந்த கருத்துப் போர் என்பது அவர் காங்கிரசில் இருக்கும் போதே துவக்கப்பட்டு விட்டது. அப்படிப்பட்ட காலத்தில் அந்த ‘குடிஅரசு’ ஏடு உலகம் முழுவதும் சென்று அடைந்தது. குறிப்பாக தென் கிழக்கு ஆசியாவில் சிங்கப்பூர், மலேசியா, பர்மா மற்றும் இலங்கை இப்படிப்பட்ட பல நாடுகளில் சென்றதன் விளைவாக மிகப் பெரிய சமுகப்புரட்சியை, அமைதிப் புரட்சியை, புத்தகப் புரட்சியை பெரியார் அவர்கள் உருவாக்கினார்கள்.

அப்படிப்பட்ட ஒரு கருத்தியல் கொண்ட புத்தகங்கள் மூலமாகத்தான் எழுச்சி மிகுந்த பிரச்சாரத்தை செய்தார்கள். மாலை நேரங்களில் அவர் பிரச்சாரம், பொதுக் கூட்டம் என்று அமைந்தாலும், வார ஏடு ‘குடிஅரசு’ தடை செய்யப்பட்டது; பிறகு ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’ பிறகு ‘விடுதலை’ இப்படி பல பத்திரிகைகள் மூலமாக மீதி நேரங்களில்  அறிவார்ந்த ஒரு நிலையை  உருவாக்கினார். அப்படிப்பட்ட ஒரு புரட்சிக்கு அடித்தளம் என்கிற காரணத்தினாலே இங்கே பெரியார் எணினி நூலகத்தில் ஒரு காட்சியகத்தை உருவாக்கியிருக்கிறோம்.

தடை செய்யப்பட்ட நூல்கள்

அதிலே இதுவரையில் தடை செய்யப்பட்ட நூல்கள்; உதாரணமாக பகத்சிங் இன்றைக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டப்படக் கூடியவர். அவர் சிறைச்சாலைக்குள் இருந்து எழுதிய நூல், ‘‘நான் ஏன் நாத்திகன்?’’ என்ற நூலாகும்.  தந்தை பெரியார் அவர்கள் தோழர் ஜீவா அவர்களை வைத்து இந்த நூலை தமிழில் மொழிபெயர்க்கச் செய்தார். இதற்காக ஜீவா உள்பட அச்சிட்டவர்கள், வெளியிட்டவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்.

இந்திய அளவில் அறிவுப் புரட்சிக்கு, புத்தகப் புரட்சிக்கு இன்று ஒரு முக்கியமான நாள். தந்தை பெரியார் அவர்கள் 95 ஆண்டு காலம் வாழ்ந்தார்கள். ஆனால் அவருடைய புத்தகத்திற்கு இத்தனை ஆண்டு காலம் என்று காலத்தை நிர்ணயிக்க முடியாது. அது என்றைக்கும் வாழும். புரட்சிகரமான சிந்தனை களால் என்றைக்கும்  நிலைத்து இருக்கும்.

கேள்வி: மதுரையில் நடக்கும் மாநாடு 2026 தேர்தலுக்கு எடுத்துக் காட்டாக இருக்கும் என்று பா.ஜ.க.மாநிலத் தலைவர் கூறியிருக்கிறாரே?

பதில்: இப்படி அவர் சொன்னதற்கு மிகவும் நன்றி.ஏனென்று கேட்டால் இது பக்திக்காக அல்ல, முழுக்க முழுக்க ஓட்டுக்காக என்று இதுவரையில் நாங்கள் சொல்லி வந்தோம். இப்போது அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். எனவே பக்தர்களே ஏமாந்து விடாதீர்கள்.  ‘‘உங்கள் ஓட்டு தான் முக்கியமே தவிர உங்கள் மனதில் இருக்கும் பக்தியைப் பற்றி எங்களுக்கு கவலை  இல்லை’’ என்று வெளிப்படையாகப் பிரகட னம் செய்த பா.ஜ.க. தலைவருக்கு நன்றி!

பயம் எங்கள் அகராதியிலேயே கிடையாது!

கேள்வி: தொகுதி மறுசீரமைப்பு பற்றி இப்போது தி.மு.க. பேசுவது, தேர்தல் பயத்துக் காக என்று முருகன் சொல்லியிருக் கிறாரே?

பதில்: எந்த முருகனைச் சொல்கிறீர்கள். வேல்முருகனா? வேலை இழந்த முருகனா? வள்ளி தெய்வானை முருகனா? இல்லை நீலகிரி நாடாளுமன்றத்தில் தோற்றுப் போய் தாராபுரத்திலும் தோற்றுப்போன முருகனா? என்று முதலில் தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை புதிதாக வந்த முருகனா? அந்த முருகனாக இருந்தால் எங்கள் பதில் இதுதான். பயத்திற்கும் திராவிட இயக்கத்திற்கும் வெகு தூரம். திராவிட இயக்கத்தை கண்டு பயந்து ஓடிப் போனவர்கள் தான் அதிகம். தவிர, பயத்தையே மிரட்டிய இயக்கம், சுயமரியாதை இயக்கம் திராவிட இயக்கம், பெரியார் இயக்கம்! ஆகவே எங்களுக்கு பயம் கிடையாது. ஏனென்றால் மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம்! அவர் போய்விட்டார், இவர் போய்விட்டார் என்று நாக்கில் தேனை தடவிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அனைவரும் திமுக கூட்டணியில் தான் இருக்கிறார்கள். எங்களுக்கு இடப் பிரச்சினை இல்லை, கொள்கைதான் முக்கியம். திமுக தலைமையில் இருக்கிற கூட்டணி, கொள்கைக் கூட்டணி. இன்னொரு கூட்டணி சேருமோ – சேராதோ, நிலைக்குமோ – நிலைக்காதோ, தொடருமோ – தொடராதோ,  இணையுமோ – இணையாதோ என்று இருக்கக்கூடிய   கூட்டணி  அது இன்னும் கருவிலேயே உருவாகவில்லை. கருவிலிருந்து பிள்ளை வரப்போகிறதா? கட்டியை அறுவை சிகிச்சை செய்யப் போகிறார்களா – இல்லை சிதைவு ஏற்படப் போகிறதா? இன்னும் பத்து மாதம் இருக்கிறது ஆகவே இவர்களின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இப்போது இல்லை.

கொள்கையில் சமரசம் என்பதே கிடையாது!

கேள்வி: தந்தை பெரியார் பெண்களுக்காக அரசியல் களத்தில் இல்லாமலேயே போராடியவர் அதேபோல அரசியல் கட்சிகளை எதிர்த்துப் பேசியவர். தற்போது திராவிடர் கழகம் எந்த அளவுக்கு இருக்கிறது?

பதில்: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பயம் எல்லாம் எங்களுக்கு கிடையாது. எங்களுக்கு கொள்கைதான் மிக முக்கியம். இன்றைக்கும் நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டு தான் இருக்கின்றோம். மகளிர் பிரச்சினைகளை முதலில் எடுத்துச் சொல்வது திராவிடர் கழகம் தான். மகளிர் என்ற பெயராலே உயர்ஜாதிப் பெண்களுக்கு முதலில் முன்னுரிமை கொடுப்பது ஏன் என்று கேட்டால் பாலியல் நீதி என்பது  எங்களைப் பொறுத்தவரை பாலியல் நீதி கலந்த சமூக நீதி –  அவ்வளவுதான். பெண்களுக்குக் கொடுத்து விட்டோம் என்று உயர்ஜாதிப் பெண்களுக்கு மட்டுமே கொடுப்பது ஏமாற்று வேலை என்று தொடக்கக் காலத்திலிருந்து சொல்லிக் கொண்டு வருவது திராவிடர் கழகம் தான். இன்னமும் நாங்கள் போராடிக் கொண்டுதான் இருக்கின்றோம். களத்தில் உங்களை காணவில்லை என்று நீங்கள் கேட்கிறீர்கள். அன்றைக்கும் இன்றைக்கும் எங்கள் பணியை மக்களோடு தொடர்பு கொண்டு செய்து கொண்டுதான் இருக்கின்றோம். எங்கள் பத்திரிகைகளை படித்து விட்டு நீங்கள் கேள்விகளை கேளுங்கள். நாங்கள் என்றைக்கும் கொள்கையில் சமரசம் அற்றவர்கள். இவ்வாறு செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *