சென்னை, ஜூன் 21- ரேசன் கடைகளில் முன்னுரிமை அட்டைதாரர்கள் ஏற்கெனவே 2 முறை கைவிரல் ரேகை பதிவு செய்து வந்த நிலையில், இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு செய்தாலே பொருட்களை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
2 முறை கைவிரல்
ரேகை பதிவு
ரேகை பதிவு
தமிழ்நாட்டில் உள்ள ரேசன் அட்டைகளில் பொருட்கள் வினியோகம் செய்யும்போது ஒன்றிய அரசு திட்ட அரிசிக்கு ஒரு முறையும், மாநில அரசு திட்ட பொருட்களுக்கு ஒரு முறையும் என மொத்தம் 2 முறை ரேசன் அட்டைதாரர்கள் கைவிரல் ரேகை பதிவு வைக்கவேண்டும். இதனால், பொருட்கள் வினியோகம் செய்வதில் பெரு மளவில் காலவிரயம் ஏற்பட்டு வந்தது.
ரேசன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு அட்டைதாரர்கள் அதிக நேரம் காத்திருப்பதை கருத் தில் கொண்டு கால விர யத்தை குறைக்க தமிர்ழநாடு அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் முக்கியமான ஒரு நடவடிக்கையாக முன்னுரிமை ரேசன் அட்டைகள் (பி.எச். எச்.) மற்றும் முன்னுரிமை ரேசன் அட்டைகள் – அந்தியோதயா அன்னயோஜனா (பி.எச்.எச்.-ஏ.ஏ.ஒய்.) ஆகிய ரேசன் அட்டைகளுக்கு இனி பொருட்களை வழங்க ஒரே ஒரு முறையே கைவிரல் ரேகை அல்லது கண் கருவிழி பதிவு செய்தால் போதும் என்ற வகையில் மின்னணு விற்பனை எந்திரத்தில் (பி.ஓ.எஸ்.) மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
நேரம் விரையம் குறைவு
இதன் மூலம் அனைத்து பொருட்களும் குறைந்த நேரத்தில் வழங்கப்படுவதால் ரேசன் அட்டைதாரர்கள் காத்திருக்கும் நேரம் கணிசமாக குறைந்துள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சிந்தாதிரிப் பேட்டை ரேசன்கடை ஊழியர் கூறும்போது, “முன்பெல்லாம் முன்னுரிமை அட்டைதாரர்களுக்கு 2 முறை கைவிரல் ரேகை பதிவு செய்வதால் நேரம் விரையம் ஆகும். ஆனால், தற்போது அது ஒருமுறை வைத்தாலே ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு திட்ட பொருட்களை வழங்க முடியும் என்பதால் பொருட்களை எளிதாகவும், உடனடியாகவும் வழங்க முடிகிறது. இதனால் வழக்கத்தை விட சுமார் 20 முதல் 25 ரேசன் அட்டைகளுக்கு கூடுதலாக பொருட்களை வழங்க முடிகிறது” என்றார்.
தாம்பரத்தை சேர்ந்த ஒரு பெண் கூறும்போது, “நான் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள எனது மாமனார் வீட்டுக்கு வந்துள்ளதால் இங்கு வந்து ரேசன் பொருட்கள் வாங்கினேன். முன்னுரிமை அட்டைகளுக்கு ஒருமுறை கை விரல் ரேகை பதிவு செய்தால் போதும் என்பதால் கடையில் கூட்டம் இல்லை. அதனால் உடனடியாக பொருட்களை வாங்கிச் செல்ல முடிகிறது” என்றார்.