ஒன்றிய அரசு 2027ஆம் ஆண்டுக்குள் இலக்கு நிர்ணயம்! ‘100 சதவீதம் எழுத்தறிவை’ தமிழ்நாடு இந்த ஆண்டே பூர்த்தி செய்கிறது! பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டு!

Viduthalai

சென்னை, ஜூன் 21- ஒன்றிய அரசு 2027ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் 100 சத வீதம் எழுத்தறிவை பெற இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், அந்த இலக்கை இந்த ஆண்டுக்குள் தமிழ்நாடு பெற இருக்கிறது. இதன் மூலம் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக திகழ்கிறது.

முழுமையான எழுத்தறிவு

பள்ளிகளில் இடைநிற்றல் இல்லை என்ற வகையில் அனைவரும் எழுத்தறிவு பெறும் வகையில் மாணவ-மாணவிகள் கல்வியை பெறுகின்றனர். மேலும் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் எழுதவும், படிக்கவும் தெரியாதவர்களுக்கு அடிப்படைக் கல்வியை வழங்குவதை நோக்கமாக கொண்டு எழுத்தறிவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்கீழ் மாநிலங்களில் எழுத்தறிவு பெறாதவர்களை அடை யாளம் கண்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி எழுத்தறிவு பெறச் செய்கிறார்கள். இதுவரை முழு மையாக அதாவது 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கோவா, லடாக், மிசோரம் ஆகியவை இருந்தாலும், அவையெல்லாம் சிறிய மாநிலங்களாகவே உள்ளன.

ஆனால் பெரிய மாநிலங்களில் எந்த மாநிலமும் முழுமையான எழுத்தறிவு பெறவில்லை. அந்த குறையை தமிழ்நாடு இந்த ஆண்டு இறுதிக்குள் பூர்த்தி செய்ய இருக்கிறது. அதற்கேற்றாற்போல், ஒன்றிய – மாநில அரசுகளின் நிதியுதவியுடன் மாநிலம் முழுவதும் 30,190 மய்யங்க ளில் தன்னார்வலர்கள் பயிற்சி கொடுக்கிறார்கள்.

இந்த ஆண்டு இறுதிக்குள்…

100 சதவீதம் என்பதில் 5 சதவீதத்தை ஒன்றிய அரசு தளர்வு செய்துள்ளது. ஏனென்றால். மிகவும் வயதானவர்கள், தன்னிச்சையாக செயல்பட முடியாத வர்களால் எழுத்தறிவை பெற முடி யாது என்பதால், 95 சதவீதத்தை அடைந்தாலே அது முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கருதலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் தமிழ்நாடு அந்த இலக்கை ஏற்கெனவே கடந்துவிட்டாலும், முழு இலக்கை எட்டுவதற்கான பயணத்தில் தற்போதுள்ளது. இதில் தென் மாவட்டங்கள் 100 சதவீதத்தை பூர்த்தி செய்து விட்டன.

மீதமுள்ள மாவட்டங்களிலும் வருகிற நவம்பர் மாதத்தில் நடத்தப்படக்கூடிய எழுத்தறிவு தேர்வு மூலம் 100 சதவீதம் என்ற இலக்கு பூர்த்தியாகி விடும் என்றும், முன்னதாக கடந்த 15ஆம் தேதி நடத்தப்பட்ட எழுத்தறிவுத் தேர்வில் 50 வயதுக்கு மேற்பட்ட 1,09,738 ஆண்களும், 4,28,131 பெண்களும் என மொத்தம் 5,37,869 பேர் கலந்துகொண்டு எழுதி சான்றிதழ் பெற்று, எழுத்தறிவை பெற்றவர்களாக மாறி உள்ளனர் என்றும், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 20,56,719 பேர் எழுத்தறிவு சான்றிதழ் பெற்றிருக்கின்றனர் என்றும், முதலமைச்சரின் சீரிய முயற்சியால் இது சாத்தியப்பட்டு உள்ளது என்றும் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் நாகராஜ முருகன் தெரிவித்தார்.

சாதனை சிகரம்

நவம்பர் மாதத்தில் 10 லட்சம் பேருக்கு இந்த எழுத்தறிவுத் தேர்வை தமிழ்நாடு அரசின் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் நடத்த இருக்கிறது. மத்திய அரசு 2027ஆம் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்களிலும் 100 சதவீதம் எழுத்தறிவை பெற இலக்கு நிர்ணயித்த நிலையில், தமிழ்நாடு அதற்கு முன்னதாகவே பெற்று சாதனை சிகரத்தை எட்ட இருப்பதோடு, மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாகவும் திகழ இருக்கிறது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *