புதுக்கோட்டை, நவ 12- புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பள்ளியில் மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதும் அந்தத் தாக்குத லில் பாதிக்கப்பட்ட மாணவர் தற்கொலை செய்து கொண்டதும் அதிர்ச்சியை ஏற் படுத்தி இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூருக் கும் – செங்கிப்பட்டிக்கும் இடையில் உள்ள சிறிய கிராமம் கொப்பம்பட்டி. இங்கு நடுநிலைப் பள்ளிவரை உள்ளது. அதற்கு மேல் படிப்பதற்கு அருகில் உள்ள தெம்மாவூர் உயர்நிலைப் பள்ளிக் கும் மேல்நிலை வகுப்புகளுக்கு கீரனூ ருக்கும் சென்று படிக்க வேண்டும்.
கொப்பம்பட்டி வீரமுத்து – உமா இணையரின் மகன் விஷ்ணுகுமார். (16 வயது) இவர் கீரனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வந்திருக்கிறான். இந்நிலையில் அவர் உயர்ஜாதி என்று சொல்லப்படும் ஒரு பெண்ணுடன் நட்பாகப் பழகி வந்ததாகத் தெரிகிறது. அதாவது தெம்மாவூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் நெய்வேலி என்ற கிராமமும் ஒன்று. அந்தக் கிராமத் தைச் சேர்ந்த அந்தப் பெண். வேறு ஜாதி யைச் சேர்ந்தவர். இருவரும் உயர்நிலை வகுப்பில் தெம்மாவூர் பள்ளியில் படித்த தால் நட்பு ஏற்பட்டிருக்கிறது. அது மேல் நிலைப் பள்ளிக்குச் சென்றபோதும் தொடர்ந்திருக்கிறது.
இந்த நிலையில்தான் கடந்த 3.11.2023 அன்று விஷ்ணுகுமார் காலையில் கீர னூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றபோது சக மாணவர் ஒருவர் உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும் நூலகம் அருகே வா என்று அழைத் திருக்கிறார். அங்கு சென்ற விஷ்ணுகுமார் அழைத்த மாணவர் மற்றும் இன்னும் சில மாணவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார். “எங்க ஜாதிப் பொண்ணுக் கிட்டே பேசுவியா?” என்று கேட்டு தாக்கியிருக்கிறார்கள்.
அப்போது விஷ்ணுகுமார் “நான் அந்தப் பொண்ணுக்கிட்டே ஏற்கெனவே நட்பாகப் பேசியது உண்மைதான். ஆனால் நீங்கள் நினைப்பது போல் எதுவும் கிடையாது. மேலும் ஏற்கெனவே நீங்கள் பேசக் கூடாது என்று சொன்ன தால் நான் பேசுவதே கிடையாது. இதற்கு மேல் நீங்கள் அடித்தால் நான் சாவதைத் தவிர வேறு வழியில்லை” என்று சொல்லி யிருக்கிறார். ஆனாலும் அய்ந்தாறு மாணவர்கள் சேர்ந்து கொண்டு தொடர்ந்து தாக்கியிருக்கிறார்கள்.
அதனால் அவமானப் பட்ட விஷ்ணுகுமார் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டுக்குத் திரும்பி வந்திருக்கிறார். அப்போது அவரது பெற்றோர் கூலி வேலைக்குச் சென்று விட்டதால் ஒரு கடிதத்தை எழுதி அதில் நடந்தவற்றைக் குறிப்பிட்டு வைத்து விட்டு தாயின் சேலையை எடுத்து மின் விசிறியில் தூக்குமாட்டிக் கொண்டு இறந்து விட்டார். மதியத்திற்கு மேல் பெற்றோர் வந்து பார்த்தபோது நடந்தவற்றை அறிந்து பதறித் துடித்து விட்டனர்.
இது குறித்து காவல்துறை முதலில் தற்கொலை என்றும் பின்னர் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. புதுக் கோட்டை மாவட்டத்தில் ஜாதீய வன் மங்கள் தொடர்வதற்கு முற்றுப் புள்ளி வைப்பது அவசரம் அவசியம்.
– ம.மு.கண்ணன்