ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி, சங்பரிவார்கள் என்று பல்வேறு பெயர்களில் காவிகள் இருந்தாலும் அடிப்படையில் அவர்களின் நோக்கமெல்லாம் வேத கால ஆரிய ஆதிக்கக் கலாச்சாரத்தை மேலும் வலுவாகக் காலூன்றச் செய்வதே!
கோயில்களில் உள்ள கடவுளர் பொம்மைகளுக்கே அதாவது சாமி சிலைகளுக்கே பூணூல் போடுவதன் தத்துவம் என்ன?
திருப்பதி ஏழுமலையான் என்று சொல்லப்படும் வெங்கடேச பெருமாளுக்கு மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி 3 கிலோ எடையுள்ள தங்கத்தினாலான பூணூலை அணிவித்தாரே அதன் பொருள் என்ன?
திருப்பரங்குன்றம் முருகன் சிலைக்கு அதே சங்கராச்சாரியார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கத்தினாலான பூணூலைச் சாத்தினாரே!
இதை எல்லாம் பார்த்துக் கொண்டு திருவாளர் ஜீயர்வாள் சும்மா இருந்தால் எப்படி? சிறீரங்கம் ரெங்கநாத சாமி என்ற பொம்மைக்கு ரூ.5 லட்சம் மதிப்புடைய தங்கப் பூணூல் அணிவித்ததுண்டே!
‘அருந்தொண்டாற்றிய அந்தணர்கள்’ நூல் வெளியீட்டு விழாவில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கடவுளுக்கு மேலே பிராமணர்கள் என்று சென்னை நாரதகான சபாவில் பேசவில்லையா?
தேசப் பிதா என்று மதிக்கப்ெபற்ற காந்தியார் நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்ற பார்ப்பனரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது.
ஜெகத்குரு என்றும் பார்ப்பனர்களால் தூக்கிச் சுமக்கப்படும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன செய்தார்?
‘பிரபல வக்கீல் டி.ஆர்.வி. சாஸ்திரியை அழைத்து தடையை நீக்க நடவடிக்கை எடுக்கச் சொன்னார். காஞ்சிப் பெரியவர். சாஸ்திரிதான் நேருவிடம் பேசி தடையை நீக்க உதவினார்’ (‘துக்ளக்’ 12.5.2021 பக்கம் 15).
கடவுளானாலும், காந்தியாரானாலும் பார்ப்பனர்களுக்குப் பயன்படுகிறவரை தான் என்பது புரியவில்லையா?
‘ஹிந்துக்களே ஒன்று சேர்வீர்!’ என்று ஆர்.எஸ்.எஸ்., ஹிந்துத்துவா கூட்டம் அழைக்கிறதே! அதில் உள்ள சூட்சமம் என்ன? ஹிந்து மதத்தில் உள்ள அனைவரும் ஒரே நிலையில் சம மதிப்பில் வைத்து எண்ணப்படுகிறார்களா?
இஸ்லாமியர்களையும், கிறித்தவர்களையும் எதிர்க்கும் – பகைக்கும், சண்டையிடும் கால கட்டத்தில் மட்டும் ஹிந்துக்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டும் – மற்ற நேரத்தில் ஹிந்துக் கோயிலில் பார்ப்பனர் அல்லாத ஹிந்து – உரிய ஆகமப் பயிற்சி பெற்றாலும் அர்ச்சகர் ஆகக் கூடாது – முடியாது என்று உச்சநீதிமன்றம் வரை செல்லுவது ஏன்?
இந்த இடத்தில் தான் தந்தை பெரியார் வருகிறார் – திராவிடர் கழகம் வருகிறது. ஹிந்து மதக் கோயிலில் இன்ெனாரு ஹிந்து அர்ச்சகர் ஆகக் கூடாது – முடியாது என்றால் அதன் பொருள் என்ன? ஹிந்து மதம் என்பது பார்ப்பன மேலாண்மைக்கானது மற்றவர்கள் சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று பிறப்பால் இழிவுபடுத்தப்படுவது தானே!
‘கீழடி’ அகழ் ஆய்வில், சிந்து சமவெளி அகழ் ஆய்வில் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக் கால கட்டத்தில், அங்கு வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் என்று அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்படும்போது – அது திராவிடர் நாகரிகமல்ல – ஆரிய நாகரிகம் என்று உருட்டல் புரட்டல் செய்து ஆகாயம் வரை எகிறிக் குதிப்பானேன்? திராவிடர்களும் இந்தியர்கள்தான், ஹிந்துக்கள் தான் என்று சொல்ல வேண்டியதுதானே!
இப்படிப் பிறவிபேதம், ஜாதிப் பேதங்களை விஷமாகக் கன்னத்தில் அடக்கிக் கொண்டு உதட்டளவில் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று சொல்லுவதெல்லாம் ‘புலிக்குப் பயந்தவர்கள் எல்லாம் எங்கள் மேல் படுத்துக் கொள்ளுங்கள்!’ என்று கூறும் தந்திர உபாயம்தானே!
இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களும் சரி, கிறித்தவர்களும் சரி, வெளிநாடுகளில் இருந்து கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் அல்லவே.
இந்து மதத்தின் ஜாதி வெறியும், தீண்டாமைத் திமிரும்தானே அவர்களை ம(ன)த மாறச் செய்தது!
அமெரிக்கா வரை சென்று இந்து மதத்தை வாய்க்கிழிய பேசிய விவேகானந்தர் பிராமணியத்தைப்பற்றி இப்படி கூறவில்லையா?
‘‘ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் என்று இருந்த உரிமைகளை உடைத்ததற்காக முஸ்லிம் ஆட்சிக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம் வட இந்தியாவில் அய்ந்தில் ஒரு பகுதி மக்கள் முஸ்லீம்களாயினர், வாள்தான் இந்த மாற்றத்தை முழுதும் ஏற்படுத்தியது என்பது சரியல்ல. வாளும், நெருப்புமே இத்தனைப் பேரையும் மாற்றியது என்று கூறுவது பயித்தியக்காரத்தனத்தின் உச்சநிலையாகும்.’’
‘‘20 விழுக்காடிலிருந்து 50 விழுக்காடு சென்னை மாகாண மக்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி விடுவார்கள் – நீங்கள் அவர்களின் குறைகளைக் களையவில்லையானால்! நான் மலபாரில் பார்த்ததைவிட மட்டமான ஒரு விஷயத்தை உலகில் எங்கேனும் யாரேனும் பார்த்திருக்க முடியுமா? உயர்ந்த ஜாதிக்காரர்கள் செல்லும் தெரு வழியே ஏழைப்பறையன் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.’’
‘‘ஆனால் அதே ஏழைப் பறையன் ஒரு விசித்திரமான, ஒரு ஆங்கில கிறிஸ்தவப் பெயரை தனக்குச் சூட்டிக் கொண்டால், பின்னர் அவன் உயர்ஜாதியினர் செல்லும் தெரு வழியே செல்ல அனுமதிக்கப்படுகிறான். இந்த நடைமுறையிலிருந்து இந்த உயர் ஜாதி மலபார் மக்கள் அனைவரும் பயித்தியக்காரர்கள் என்றும், அவர்கள் இல்லங்கள் ஒவ்வொன்றும் பயித்திக்கார விடுதி என்றும் தெரியவில்லையா? இத்தகைய வழக்கங்கள் இன்றும் நடைமுறையில் உள்ளன என்பதற்காக இந்த உயர் ஜாதியினர் வெட்கித்தலைக்குனிய வேண்டும்’’ – இப்படி எல்லாம் பேசி இருப்பவர் விவேகானந்தர் தானே! (ஆதாரம்: ராமகிருஷ்ண தபோவனம் 1983இல் வெளியிட்ட ‘‘The Man Making Message of Vivekananda for the Use of College Students’’ Page 150,151,152, 155,156).
விவேகானந்தர் கூற்றின் சாரம் கீழடி தொல் பொருள் ஆய்வுவரை தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது.
ஜாதி – மதம் – இன பேதம் என்பன ஹிந்துத்துவாவின் மனமும், கண்களும், காதுகளும், கரங்களும், கால்களுமாகும் என்பதை உணர்வீர்!