தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச 3 சென்ட் வீட்டு மனை! யார் யாருக்கு கிடைக்கும்?

viduthalai
2 Min Read

சென்னை, ஜூன் 19- தமிழ்நாடு அரசு ஏழை குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட நாட்களாக வசித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படுகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் பல ஏழை குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் நாட்களில் சென்னை போன்ற பெருநகரங்களிலும், பிற மாநகராட்சிகளிலும் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் எந்தவித ஆட்சேபனையும் இல்லாத புறம்போக்கு பகுதியில் வசித்து வரும் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. புறம்போக்கு நிலங்களுக்கான பட்டாவை பெற அந்த இடத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்திருக்க வேண்டும். மேலும் அந்த இடத்தில் எந்தவித ஆட்சேபனையும் இருக்கக் கூடாது.

தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 3 சென்ட் நிலம் ஏழை குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும். நகர்ப்புறங்களில் 1.25 முதல் 1.5 சென்ட் வரை, கிராமப்புறங்களில் 2 முதல் 2.5  சென்ட் வரை வழங்கப்படுகிறது.

அரசு புறம்போக்கு அல்லது நத்தம் நிலங்களில் இந்த புறம்போக்கு இடங்கள் இருக்க வேண்டும். அதே சமயம் இந்த இடங்களில் நீர்நிலைகளோ, கோவில் நிலமோ, கால்வாய் போகும் இடமோ இருந்தால் பட்டா வழங்கப்படாது. இது போன்ற இடங்களில் வசிப்பவர்களுக்கு அரசின் சார்பில் மாற்று இடம் ஒதுக்கப்படும்.

பட்டாவிற்கு விண்ணப்பித்தவுடன் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்வார்கள். அந்த இடத்திற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லாத பட்சத்தில் பட்டா வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த புறம்போக்கு நிலங்களுக்கான பட்டா பெற்ற பெற்ற பின்னர் அதனை விற்கவோ, அடகு வைக்கவோ முடியாது.

பட்டா வழங்கப்பட்டாலும் அரசின் விதிகளின் கீழ் தான் பயன்படுத்த வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் 3 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இலவசமாக பட்டா வழங்கப்படும். புறம்போக்கு இடத்தில் 10 ஆண்டுகள் இருந்ததற்கான சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *