சென்னை, ஜூன் 19- தமிழ்நாட்டில் மொத்தம் 4 ஆயிரத்து 777 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் அமைக்கும் போது, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் இருந்து நகர் பகுதியாக இருந்தால் 50 மீட்டரும், கிராமப்புறங்களில் 100 மீட்டர் தூரமும் இருக்க வேண்டும்.
ஆனால், இந்த விதிகளை மீறி பல கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இது குறித்து பொதுமக்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு தீர்வு காணலாம்.
அதே போல் சில இடங்களில் கடைகள் வந்த பிறகு வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை வந்திருக்கும். இந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு அதற்கான விதியில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி கடை வந்த பிறகு கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு இருந்தாலும், அந்த கடைகள் மீது புகார்கள் வந்தால் அதனை ஆட்சியர் பரிசீலனை செய்து 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.