சாமியாரின் யோக்கியதை சந்தி சிரிக்கிறது! நகைக்காக பெண்ணைக் கொன்று உடலை கால்வாயில் வீசிய சாமியார் கைது உடந்தையாக இருந்த மேலும் 3 பேரும் பிடிபட்டனர்

Viduthalai

நெல்லை, ஜூன் 17– 8 மாதங்களுக்கு முன் இளம்பெண் காணாமல் போன வழக்கில் துப்பு துலங்கியது. அவரை நகைக்காக கொன்று உடலை கால்வாயில் வீசிய சாமியார் உள்பட 4 பேர் கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோயிலுக்குச் சென்றவர்…

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பழவூரை அடுத்த மாடன்பிள்ளைதர்மம் கிராமத்தைச்சேர்ந்தவர் சிவலிங்க துரை. இவருடைய மகள் கயல்விழி (வயது 28). இவருக்கு திருமணமாகி, கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.

கடந்த 5.10.2024 அன்று கயல்விழி கோயிலுக்கு சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி சென்றார். பின்னர் அவர் திரும்பி வராமல் காணாமல் போனார். இது குறித்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கடந்த 8 மாதங்களாக துப்பு துலங்காத இந்த வழக்கில், தனிப்படை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கயல்விழியிடம் அலைபேசியில் பேசியவர்களின் விவரங்களை சேகரித்து விசாரித்தனர்.

இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த சாமியாரான சிவசாமியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.இதில், சிவசாமி நகைக்காக கயல்விழியை கூட்டாளிகளுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை கால்வாயில் வீசிய அதிர்ச்சி தகவல் வெளியானது.

மாந்திரீக பூஜை

கணவரை பிரிந்து வாழ்ந்த கயல்விழியை மீண்டும் கணவருடன் சேர்த்து வாழ வைப்பதாக சாமியார் சிவசாமி கூறினார். இதற்காக அவர் மாந்திரீக பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறி, கயல்விழியிடம் பலமுறை பணம் பெற்றுள்ளார். இவ்வாறு மொத்தம் ரூ.5 லட்சம் வரையிலும் அவர் பணம் வாங்கியுள்ளார்.

ஆனாலும் கயல்விழி கணவருடன் சேர்ந்து வாழாததால் தனது பணத்தை திருப்பித் தருமாறு சிவசாமியிடம் அடிக்கடி கேட்டு வந்தார். எனவே, கயல்விழியை கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்யவும், அவரது நகைகளை பறிக்கவும் திட்டம் தீட்டினார்.

கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை

சம்பவத்தன்று கயல்விழியை சுசீந்திரத்துக்கு வரவழைத்தனர். அங்கு சிவசாமி, அவருடைய சகோதரி மகனான தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாயாண்டி ராஜா,வீரவநல்லூரைச் சேர்ந்த கண்ணன், கொட்டாரத்தைச் சேர்ந்த சிவனேஸ்வரி ஆகிய 4 பேரும் காரில் தயாராக இருந்தனர். அவர்கள் கயல்விழிக்கு பணம் தருவதாக கூறி காரில் ஏற்றி அழைத்து சென்றனர்.

பின்னர் காரில் வைத்தே 4 பேரும் சேர்ந்து கயல்விழியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் அணிந்திருந்த 7 பவுன் நகைகளை எடுத்து கொண்டனர். தொடர்ந்து மணிமுத்தாறு 80 அடி கால் வாயில் கயல்விழியின் உடலை வீசிச்சென்றது தெரியவந்தது.

சாமியார் உள்பட 4 பேர் கைது

இதையடுத்து  சாமியார் சிவசாமி, மாயாண்டி ராஜா, கண்ணன், சிவனேஸ்வரி ஆகிய 4 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் கால்வாயில் வீசப்பட்ட கயல்விழியின் எலும்புக்கூடு மற்றும் ஆடைகள் கண்டெடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. கைதான 4 பேரிடம் இருந்து 7 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *