கோவை இராமகிருட்டிணனின் 75 ஆம் ஆண்டு பவள விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்

viduthalai
12 Min Read

இராமகிருட்டிணன் வாழ்நாள் போராளி – அவர் நடத்துகின்ற போராட்டங்கள் என்பவை பதவிக்காகவோ, பெருமைக்காகவோ, புகழுக்காகவோ அல்ல; கொள்கைக்காக!
போராட்டம் எங்களுக்கு ரத்தவோட்டம்தான்!
அந்த ரத்தவோட்டம் பெற்ற, கொள்கை உறவுக்காரருக்குத்தான் இன்றைக்கு 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் – பாராட்டு விழா!

Contents
கோவை இராமகிருட்டிணன் 75 ஆம் ஆண்டு பவள விழா – தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்பு‘பிராமணர்’கள் புன்சிரிப்பை எதிர்பார்ப்பதா? விடுதலையை எதிர்பார்ப்பதா?புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் – ‘‘தமிழ் மொழி வார விழா!’’‘‘பிராமணனுக்குப் பிச்சை எடுப்பதுதான் அவனுடைய குலதர்மம்!’’சங்கராச்சாரியாரின் ‘‘தெய்வத்தின் குரலில்…’’நமக்கு எல்லா மனிதர்களும் சமமானவர்கள்தான்!‘‘சமூகநீதி நாள்’’,  ‘‘சமத்துவ நாள்’’ என்று அறிவித்தார்!‘‘அனைவருக்கும் அனைத்தும்’’, ‘‘எல்லோருக்கும் எல்லாம்!’’நம்முடைய மேடையைத் தவிர, வேறு எந்த இடத்திலும் ‘பார்ப்பான்’ என்ற  வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார்கள்!எங்கள் தாய்மார்களையெல்லாம் ‘‘பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள்!’’ என்றீர்கள்!என்மீது அன்பு காட்டிய ஒரு குடும்பத்துப் பிள்ளை இராமகிருட்டிணன்!என்றைக்கும் தலைமையை மீறியது கிடையாது இராமகிருட்டிணன்!‘‘எங்களை வழி நடத்துங்கள்’’ என்று சொன்னார்!பார்ப்பனர்களை ஏமாற வைத்த ஒரே ஒருவர், பேரறிஞர் அண்ணா அவர்கள்தான்!டி.ஜி.பி. சிறீபாலின் வேண்டுகோள்!இராமகிருட்டிணன் வாழ்நாள் போராளி!‘‘போராட்டம் எங்களுக்கு ரத்தவோட்டம்’’மூளை மாற்று அறுவைச் சிகிச்சை மட்டும்தான் மீதமிருக்கிறது!மூளையில் போடப்பட்டிருக்கும் விலங்கை உடைக்கின்ற இயக்கம்தான் பெரியாருடைய இயக்கம்!இளைய தலைமுறையினரைப் பார்த்து எதிரிகள் குலை நடுங்குகிறார்கள்.‘‘திராவிடம் வெல்லும்! அதனை வரலாறு என்றைக்கும் சொல்லும்!’’‘‘மானமிகு’’ என்பது ஒருமுறை வந்தால், கல்லறை செல்லும் வரையில் அதனைப் பிரிக்க முடியாது!போர்க் கருவிகளில் ஒன்றுதான் இராமகிருட்டிணன் போன்றவர்கள்!

கோவை, ஜூன் 11 இராமகிருட்டிணன் அவர்கள் வாழ்நாள் போராளி. அவர் நடத்துகின்ற போராட்டங்கள் என்பவை கொள்கைக்காக. பதவிக்காகவோ, பெருமைக்காகவோ, புகழுக்காகவோ அல்ல. போராட்டம் எங்களுக்கு ரத்தவோட்டம்தான் – அந்தக் குருதி, அந்த ரத்தவோட்டம் பெற்ற, கொள்கை உறவுக்காரருக்குத்தான்  இன்றைக்கு 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் – பாராட்டு விழாக் கூட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.

கோவை இராமகிருட்டிணன் 75 ஆம் ஆண்டு பவள விழா – தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்பு

கடந்த 4.5.2025 அன்று கோவையில் நடைபெற்ற கோவை இராமகிருட்டிணன் 75 ஆம் ஆண்டு பவள விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்..

அவரது வாழ்த்துரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

சர்க்காரின் குற்றங்களை எடுத்துச் சொல்லும் போதும், சர்க்காரை கடினமான வார்த்தைகளால் திட்டும்போதும், அதற்காக ஜெயிலுக்குப் போகும் போதும், “நாயக்கர் வெகு தைரியசாலி”, “உண்மையான தேசபக்தர்”,  “வீரர்” என்கிற பெயர் பெற்றார்.

ஆனால், அவர் ‘பிராமணர்’கள் குற்றத்தை எடுத்துச் சொல்லும்போதும், அதற்கேற்ற  கடின பதங்களை உபயோகிக்கும்போதும் “பிராமண துவேஷி” ஆகிவிடுகிறார். ‘கடினபதங்கள்’ என்றால் என்ன? பதங்களைப் பார்த்தால் போதுமா? குற்றங்களையும் குற்றம் செய்யும் ஆட்களையும் பார்க்க வேண்டாமா? குதிரையை அடிப்பதானால், கொறடாவை மேலே படும்படி வீசினால் போதும்; எருமையை அடிப்பதானால், பெரிய தடி எடுத்துத்தான் ஓங்கி அடிக்க வேண்டும்; யானையை அடிப்பதாய் இருந்தால், கூர்மையான இரும்புத்தடி (அங்குசம்) கொண்டு குத்த வேண்டும்.

‘பிராமணர்’கள் புன்சிரிப்பை எதிர்பார்ப்பதா? விடுதலையை எதிர்பார்ப்பதா?

இவற்றை அறியாமல் பேசுவதில் என்ன பலன்? ‘பிராமணர்’களிடம் நமக்குத் துவேஷமில்லை. அவர்கள் சூழ்ச்சிக்கு நமது நாட்டில் யோக்கியதை இருக்கும் வரை நமக்கு விடுதலையில்லை என்பது நமது  துணிபு. ஆகவே, இவ்விரண்டில் ‘பிராமணர்’கள் புன்சிரிப்பை எதிர்பார்ப்பதா? விடுதலையை எதிர்பார்ப்பதா?’’ என்று தந்தை பெரியார் எழுதியிருக்கிறார்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் – ‘‘தமிழ் மொழி வார விழா!’’

நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் – ‘‘தமிழ் மொழி வார விழா’’ என கொண்டாடப்படும் (ஏப்.29 முதல் மே 5 ஆம் தேதிவரை) என்று அறிவித்தார். அந்த ஒரு வாரத்தில்தான் நம்முடைய இராமகிருட்டிணன் அவர்களுடைய பிறந்த நாளும் வருகிறது. ஆகவே, தமிழ் வார விழா கொண்டாட்டத்தோடு – இராமகிருட்டிணன் பிறந்த நாளையும் கொண்டாடுகிறோம்.

ஒன்றியத்தில் நிதியமைச்சராக இருக்கக்கூடிய ஒரு பார்ப்பன அம்மையார் சொல்கிறார், ‘‘தமிழைப் படித்தால் பிச்சைதான் எடுக்கவேண்டும்’’ என்கிறார்.

அதைக் கேட்டு, உணர்ச்சியற்ற பிண்டங்களாக நாம் இருக்க முடியுமா?

பிச்சை எடுப்பது யார் வேலை?

‘‘பிராமணனுக்குப்
பிச்சை எடுப்பதுதான் அவனுடைய குலதர்மம்!’’

யாருக்காவது சந்தேகம் இருந்தால், மனு தர்மத்தை எடுத்துப் பாருங்கள். ‘‘பிராமணனுக்குப் பிச்சை எடுப்பதுதான் அவனுடைய குலதர்மம்’’ என்கிறது மனுதர்மம். இதை யாராவது மறுக்க முடியுமா? நாங்கள் ஆதாரத்தோடு சொல்கிறோம்.

இன்னுங்கேட்டால், இதில் சந்தேகம் இருப்பவர்கள், கும்பகோணத்திற்குச் சென்று பாருங்கள்; அங்கே ஒரு தெருவிற்குப் பெயரே ‘‘பிச்சை பிராமணர் தெரு’’ என்பதாகும்.

சங்கராச்சாரியாரின்
‘‘தெய்வத்தின் குரலில்…’’

சங்கராச்சாரியாரின் ‘‘தெய்வத்தின் குரல்’’ புத்தகத்தைப் படியுங்கள் – அதில் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், ‘‘நல்ல பிராமணன் என்றால், அவன் பிச்சை எடுத்துத்தான் பிழைக்கவேண்டும்’’ என்கிறார்.

‘‘கார்ப்பரேட் பிராமின், இஸ் நாட் எ குட் பிராமின்’’ என்கிறார் அவர்.

நமக்கு எல்லா மனிதர்களும் சமமானவர்கள்தான்!

கார்ப்பரேட் முதலாளிகள் எல்லாம் பிராமணர்கள் அல்ல என்று நாம் சொல்லவில்லை, சங்கராச்சாரியாரே சொல்லியிருக்கிறார். பார்ப்பனர்கள்மீது நமக்கு வெறுப்பில்லை. நமக்கு எல்லா மனிதர்களும் சமமான வர்கள்தான்.

சமத்துவம், சுதந்திரம், சுயமரியாதை, பகுத்தறிவு இவற்றில் மனிதர்களுக்குள் வேறுபாடு இல்லை.

‘‘சமூகநீதி நாள்’’,  ‘‘சமத்துவ நாள்’’ என்று அறிவித்தார்!

நம்முடைய முதலமைச்சர் அவர்கள், பெரியாரு டைய பிறந்த நாளை, ‘‘சமூகநீதி நாள்’’ என்று பிரகட னப்படுத்தினார். அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை, ‘‘சமத்துவ நாள்’’ என்று அறிவித்தார்.

அதனால்தான், திராவிட மாடல் ஆட்சியின்மீது அவாளுக்குக் கோபம். ஆகவே, இந்த ஆட்சிக்கு எப்படி யாவது குழிதோண்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள்; முன்னால் முடியவில்லை என்றால், பின்னால் இருந்து அழிக்கலாமா? என்று கூலிப்பட்டாளங்களை வைத்து முயற்சி செய்கிறார்கள்.

எதை எதையெல்லாமோ சொல்லி, இந்த ஆட்சியை அசைத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

அவர்களுக்கு நாங்கள் சொல்கிறோம், இந்த இயக்கத்தை உங்களால் அசைத்துக்கூடப் பார்க்க முடியாது.

‘‘அனைவருக்கும் அனைத்தும்’’, ‘‘எல்லோருக்கும் எல்லாம்!’’

பெரியார் பிறந்த நாளான ‘‘சமூகநீதி நாளில்’’ எல்லோரையும் உறுதிமொழி எடுக்கச் சொல்கிறார். அந்த உறுதிமொழியில், பெரியாருடைய வார்த்தையை எடுத்துப் பயன்படுத்துகிறார்.

‘‘அனைவருக்கும் அனைத்தும்’’, ‘‘எல்லோருக்கும் எல்லாம்’’ என்பது முதலமைச்சரின் முழக்கமாக அமைந்துள்ளது.

அனைவருக்கும் அனைத்தும் என்றால், என்ன அர்த்தம்?

நூறில், மூன்று பேராக உள்ளவர்களுக்கு, பார்ப்பனர்க ளுக்கு கொடுக்கக் கூடாது என்று அவர் சொல்ல வில்லை.

கல்வியோ, உத்தியோகமோ பார்ப்பனர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்று சொல்லவில்லை.

இராமகிருட்டிணன் ஏற்புரையில் இங்கே சொன்னாரே, துண்டறிக்கை அச்சடித்தோம்; ‘‘ஜாதி ஒழியவேண்டும் என்றால், பார்ப்பானை, பிராமணன் என்று அழையாதே!’’ என்று.

நம்முடைய மேடையைத் தவிர,
வேறு எந்த இடத்திலும் ‘பார்ப்பான்’ என்ற  வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார்கள்!

பெரியார் எழுத்துகளை நாட்டுடைமை என்றாக்கி விட்டால்,  அவருடைய எழுத்துகளை அப்படியே பயன்படுத்துவதற்கு, பார்ப்பான் என்று குறிப்பிடு வதற்குக் கூட பயப்படுவார்கள்; இன்றைக்கு இந்தக் கூட்டத்தைத் தவிர, நம்முடைய மேடையை தவிர, வேறு எந்த இடத்திலும் பார்ப்பான் என்ற  வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார்கள். இலக்கியத்தில் இருப்பதும் பார்ப்பனர் என்ற வார்த்தைதான். அது ஒன்றும் கொச்சையான வார்த்தையல்ல. பார்ப்பான் என்று சொல்லக்கூடாது; ‘பிராமணன்’ என்று சொல்லுங்கள் என்கிறார்கள்.

‘‘பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே!’’

‘‘மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்’’ (குறள் 134)

திருவள்ளுவர் காலத்தில் பார்ப்பான். சங்க இலக்கியத்திலும் அந்தச் சொல் இருக்கிறது. நாம் ஒன்றும் அவர்களைக் கொச்சைப்படுத்தவில்லை.

எங்கள் தாய்மார்களையெல்லாம் ‘‘பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள்!’’ என்றீர்கள்!

பார்ப்பான் என்று சொன்னால், நீங்கள் சங்க டப்படுகிறீர்களே, மனுதர்மத்தை உருவாக்கி, அந்த மனுதர்மத்தைச் சட்டமாக்கி, அந்த சட்டம்தான் எங்களுக்கு என்று சொல்லி, எங்கள் தாய்மார்களை யெல்லாம் ‘‘பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள்’’ என்று சொல்லி, ‘‘தேவடியாள் பிள்ளைகள்’’ என்று எங்களைச் சொல்லி, எங்கள் இனத்தவர் கட்டிய கோவிலில், ஒரு துரும்பைக் கூட அசைக்காமல், நீங்கள் ஒரு சிறிய மணியைத் தூக்கிக் கொண்டு ஆட்டுகின்ற அளவிற்கு வந்து, கொடுமை செய்துகொண்டு, ஜாதியினுடைய உச்சத்தில் இருக்கின்றீர்கள் என்று சொன்னால், அதனை எதிர்ப்பதற்கு இன்னமும் எங்களுக்குப் பணி இருக்கிறது.

இன்னமும் இராமகிருட்டிணன் போன்றவர்களுக்கு, எங்களுக்கெல்லாம் அந்தப் பணி இருக்கிறது. அந்தப் பணி தொடரும். அதற்கு எங்களை உற்சாகப்படுத்த வேண்டும்.

களத்திற்குப் போய்விட்டு வந்த வீரர்களை நாங்கள் தட்டிக் கொடுப்பதைப்போல, வேகமாக ஓடுகின்ற குதிரைக்கு – அதற்கு அணைப்புகள் கொடுப்பதைப்போல இதுபோன்ற பிறந்த நாள் விழாக்கள் அமைந்திருக்கின்றன.

எனவே, இதுபோன்ற பிறந்த நாள் விழாக்கள் என்பன சாதாரணமானவையல்ல.

என்னுடைய பிறந்த நாளன்று, யாரையும் நான் சந்திப்பதில்லை என்பது வழமையான ஒன்றுதான்.  ஆனால்,  என்னுடைய பிறந்த நாளை எப்படியோ தெரிந்துகொண்ட தோழர் இராமகிருட்டிணன் அவர்கள், என்னுடைய 48 ஆம் ஆண்டுக்கு, ‘‘ஆசிரியருடைய 48 ஆம் ஆண்டு பிறந்த நாள் – அவரை வாழ்த்தவேண்டும்’’ என்று சொல்லி, ஒரு விளம்பரம் போன்று தயார் செய்து, ‘விடுதலை’யில் வெளியிடும்படி, விடுதலை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

நான் ஏற்கெனவே ‘விடுதலை’ அலுவலகத்தில் இருப்பவர்களிடம், என்னுடைய பிறந்த நாள் செய்தி ஏதாவது வந்தால், என்னைக் கேட்காமல் வெளியிடக் கூடாது என்று சொல்லியிருக்கிறேன்.

அதன்படியே இவரிடம், அந்த விளம்பரத்தை ‘விடுதலை’யில் வெளியிட முடியாது என்று  சொல்லி விட்டார்கள்.

என்மீது அன்பு காட்டிய ஒரு குடும்பத்துப் பிள்ளை இராமகிருட்டிணன்!

பிறகு இவர் என்ன செய்திருக்கிறார் என்றால், ‘முரசொலி’யில் வெளியிடும்படி கொடுத்துவிட்டார்.

‘முரசொலி’யிலும் அந்த விளம்பரம் வெளிவந்து, எல்லோரும் என்னுடைய இல்லத்திற்கு வந்தி ருக்கின்றார்கள். ஆனால், என்னுடைய இல்லம் பூட்டியிருந்ததைப் பார்த்திருக்கிறார்கள்.

அந்த அளவிற்கு, அவ்வளவு அன்பு என்மீது காட்டிய ஒரு குடும்பத்துப் பிள்ளை இராமகிருட்டிணன் அவர்கள்.

என்றைக்கும் தலைமையை மீறியது கிடையாது இராமகிருட்டிணன்!

தலைமைக்குத் தொண்டர்கள் கட்டுப்படவேண்டும். அவர் என்றைக்கும் தலைமையை மீறியது கிடையாது.

மாறுபட்டிருந்ததால், வேறுபட்டிருக்கலாம். வேறு பாடு வேறு; மாறுபாடு வேறு.

கழகத்தில் இருந்து பிரிந்தவர்களையெல்லாம் எண்ணிப் பாருங்கள் – அண்ணா பிரிந்துவிட்டார், இனிமேல் திராவிடர் கழகமே தீர்ந்து போயிற்று என்று சொன்னார்கள்.

தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அண்ணா அவர்கள் எங்கே சென்றார்?

எல்லோரும் நினைத்தார்கள், ராஜ்பவன் செல்கிறாரோ என்று நினைத்தார்கள்.

‘‘எங்களை வழி நடத்துங்கள்’’ என்று சொன்னார்!

ராஜ்பவன் எங்களுக்கு முக்கியமல்ல; திருச்சியில் உள்ள பெரியார் மாளிகைதான் முக்கியம் என்று, நாவல ரோடு, கலைஞரோடு, அன்பில் தர்மலிங்கத்தோடு, அண்ணா அவர்கள், பெரியாரைச் சந்தித்து, ‘‘எங்களை வழி நடத்துங்கள்’’ என்று சொன்னார்.

கழகத்திலிருந்து  பிரிந்து 18 ஆண்டுகாலம் ஆயிற்று. அவர்களைப்பற்றி என்னென்னவோ சொன்னார்கள்.

பார்ப்பனர்களை ஏமாற வைத்த
ஒரே ஒருவர், பேரறிஞர் அண்ணா அவர்கள்தான்!

வேறு எவருக்கும் இல்லாத சிறப்பு – அண்ணா வினுடைய தனிச் சிறப்பு  என்னவென்று சொன்னால், இதுவரை பார்ப்பனர்களிடம்தான் நம் இனம் ஏமாந்து இருக்கிறது. பார்ப்பனார்களை ஏமாற வைத்த ஒரே ஒருவர், பேரறிஞர் அண்ணா அவர்கள்தான்.

இராஜாஜி, பூணூலை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, ‘‘உதயசூரியனுக்கு முத்திரை குத்துங்கள்’’ என்று சொன்னார்.

‘‘பெருங்காய டப்பா காலியாக இருப்பதை நினைத்துக் கவலைப்படாதீர்கள்’’ என்றார். ஆனால், அண்ணாவின் பார்வையில், அதே பெருங்காயம்தான் இருந்தது. பார்ப்பனர்க ளுக்குத்தான் அது பெருங்காயம் என்றார்.

எனவேதான் நண்பர்களே, இந்த இயக்கம் இப்படிப்பட்ட கொள்கையாளர்களால் வழிவழியாக சிறப்படைந்திருக்கின்றது.

டி.ஜி.பி. சிறீபாலின் வேண்டுகோள்!

டி.ஜி.பி. சிறீபால் அதிகாலை 5.30 மணிக்கு என்னைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார். அவர் சமண மதத்தைச் சார்ந்தவர். அவர் மிகவும் அமைதியாகவும், நிதானமாகவும் பேசுபவர்.

என்னங்க? என்றேன்.

எனக்கு ஒரு பெரிய உதவி செய்யவேண்டும் நீங்கள் என்றார்.

என்னங்க, நாங்கள்தானே எப்போதுமே உதவி கேட்போம்; நீங்கள், என்னிடம் உதவி கேட்கிறீர்களே? என்றேன்.

‘‘இராமகிருட்டிணனிடம் கொஞ்சம் சொல்லுங்கள்; கோயம்புத்தூரில் உள்ள காவல்துறையினருக்கு வேறு வேலையே இல்லை என்பதுபோல, எப்போது பார்த்தா லும், போராட்டம், போராட்டம், போராட்டம் என்றே இருக்கிறார். அவரிடம் நீங்கள் சொல்லுங்கள்’’ என்றார்.

அவர் சொன்னதுபோன்றே, ‘‘இராமகிருட்டிணனை அழைத்து, இதுபோன்று டி.ஜி.பி. சொல்கிறார், கொஞ்சம் பார்த்துச் செய்யுங்கள்’’ என்றேன்.

இராமகிருட்டிணன் வாழ்நாள் போராளி!

எனவேதான், இராமகிருட்டிணன் அவர்கள் வாழ்நாள் போராளி. அவர் நடத்துகின்ற போராட்டங்கள் என்பவை கொள்கைக்காகவேயன்றி பதவிக்காகவோ, பெருமைக்காகவோ, புகழுக்காகவோ அல்ல.

‘‘போராட்டம் எங்களுக்கு ரத்தவோட்டம்’’

நம்முடைய கவிஞர் கலி.பூங்குன்றன் எழுதினார், ‘‘போராட்டம் எங்களுக்கு ரத்தவோட்டம்’’ என்று.

உண்மைதான், போராட்டம் எங்களுக்கு ரத்த வோட்டம்தான் – அந்தக் குருதி, அந்த ரத்தவோட்டம் பெற்ற, கொள்கை உறவுக்காரருக்குத்தான்  இன்றைக்கு 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் – பாராட்டு விழாக் கூட்டம்.

நூறாண்டு வாழவேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள். நூறாண்டு அல்ல – இப்போது அறிவி யல் போகின்ற வேகத்தைப் பார்த்தீர்களேயானால், நூறாண்டிற்கு மேலேயும் வாழ்வார்கள். ஏனென்றால், உடல் உறுப்புகளையே மாற்றி வைக்கிறார்கள்.

மூளை மாற்று அறுவைச் சிகிச்சை மட்டும்தான் மீதமிருக்கிறது!

ஒரு காருக்கு ஒரு டயர் சரியில்லையா, வேறு டயர் மாற்றுவது போன்று, ஒரு மனிதனுக்குக் கிட்னி சரியில்லையா, உடனே வேறொரு கிட்னியைப் பொருத்துகிறார்கள். அதேபோன்று, இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்கிறார்கள். இன்னும் ஒன்றே ஒன்றுதான் மீதமிருக்கிறது  – மூளை மாற்று அறுவைச் சிகிச்சை மட்டும்தான். அறிவியல் மாற்றத்தால், அதுவும் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் வரும்.

வேடிக்கையாக நான் சொல்வது உண்டு.

அப்படி வந்தால், எந்த மூளையைப் பொருத்த வேண்டும்; ரஷ்ய மூளை – அமெரிக்க மூளை – சீனா மூளை – வடநாட்டு மூளை என்று வரிசையாக வைத்து, உங்களுக்கு எந்த மூளையைப் பொருத்தவேண்டும் என்று கேட்கக்கூடிய அளவிற்கு வரும்.

கார்கள் என்றால், வெளிநாட்டுக் கார்களை வாங்குவோம். ஆனால், புத்திசாலியாக இருப்பவர்கள், நம்முடைய இந்திய மூளையைத்தான் தேர்ந்தெடுப்பான். ஏனென்றால், அதுதான் புத்தம் புதிதாக இருக்கும். பயன்படுத்தாத மூளைதான், புத்தம் புதிதாக இருக்கும். மற்றவையெல்லாம் தேய்ந்து போனதாக இருக்கும்.

மூளையில் போடப்பட்டிருக்கும் விலங்கை உடைக்கின்ற இயக்கம்தான் பெரியாருடைய இயக்கம்!

அப்படிப்பட்ட மக்களுக்கு, மூளையில் போடப்பட்டி ருக்கும் விலங்கை உடைக்கின்ற இயக்கம்தான், தந்தை பெரியாருடைய இயக்கமாகும்.

எனவேதான், விலங்கை உடைக்க வந்த நாங்கள், விலங்கை மாட்டிக் கொள்ளமாட்டோம்.

இன எதிரிகளே! பிரிந்திருக்கிறார்கள் என்று ஏமாந்துவிடாதீர்கள்,.

‘‘தண்ணீரை விட கெட்டியானது ரத்தம்’’ என்று ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. ரத்தத்தைவிடக் கெட்டியானது ஒன்று இருக்கிறது. அது என்ன தெரியுமா?

பெரியார் உருவாக்கியது.

அதுதான், இந்த இன உணர்வு, கொள்கை உணர்வு என்பது.

எங்களுக்குக் குருதி உறவைவிட, கொள்கை உறவுகள்தான் மிகவும் முக்கியம்.

எனவேதான், உடல்நிலையைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. உள்ள நிலை தான் மிகவும் கவனத்திற்குரியது.

இளைய தலைமுறையினரைப் பார்த்து எதிரிகள் குலை நடுங்குகிறார்கள்.

இளைய தலைமுறையினர் வரவேண்டும்; இளை ஞர்கள் இந்தப் பொறுப்புகளை ஏற்கவேண்டும். இளைஞர்கள் வளரவேண்டும். இளைஞர்கள்தான் எதிர்காலத்தில் மிகவும் செயலாற்றப் போகிறவர்கள். இவர்களைப் பார்த்துத்தான், எதிரிகள் குலை நடுங்குகிறார்கள்.

இதுபோன்ற பிறந்த நாள் விழாக்கள் – இராம கிருட்டிணனுக்காக மட்டுமல்ல – இது ஒரு கொள்கைப் பிரச்சார விழா.

அண்ணா அவர்கள் சொன்னதை இங்கு சொல்கி றேன், ‘‘தமிழ்நாட்டின் தலைவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும், அவர்கள் எல்லாம் தந்தை பெரியார் என்ற புகழின் சிதறல்கள்’’ என்றார்.

எனவேதான், தமிழ்நாட்டின் ஆட்சியே, தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று சொன்னார் அண்ணா அவர்கள். அந்த ஆட்சியை அசைத்துப் பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது!

‘திராவிட மாடல்’ ஆட்சி இன்றைக்குப் மிகப்பெரிய சாதனைகளை நாள்தோறும் செய்து வருகின்றது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைத் தருகிறது உச்சநீதிமன்றம்!

உச்சநீதிமன்றங்களே நமக்கு வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்த தீர்ப்பைத் தந்து, மற்றவர்களைத் திகைக்க வைத்திருக்கின்றது.

அந்த வெற்றியை, இந்தியா முழுமைக்கும் பயன்படுத்தக் கூடிய ஆட்சியாக ‘திராவிட மாடல்’ ஆட்சி இருக்கிறது.

‘‘திராவிடம் வெல்லும்! அதனை வரலாறு என்றைக்கும் சொல்லும்!’’

எனவே, இராமகிருட்டிணனைப் போன்றவர்கள், எங்களைப் போன்றவர்கள், இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், எதிரே அமர்ந்திருக்கக் கூடிய தோழர்கள், வெளியே இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய தோழர்கள், உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டும், கேட்டுக்கொண்டும் இருக்கக்கூடிய அத்துணை தோழர்களும் ஏற்க வேண்டிய உறுதி என்ன என்று சொன்னால் நண்பர்களே, ‘‘திராவிடம் வெல்லும்! அதனை வரலாறு என்றைக்கும் சொல்லும்’’ – அதனை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது.

எங்களுடைய வேலை, பதவிக்குப் போவதல்ல. இராமகிருட்டிணனோ அல்லது இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றவர்களோ அனைவரும் பதவியைத் தேடக்கூடியவர்கள் அல்ல. பதவி என்பது மிகவும் சாதாரணம்; அது எப்போது போகும் என்று தெரியாது.

‘‘மானமிகு’’ என்பது ஒருமுறை வந்தால், கல்லறை செல்லும் வரையில்
அதனைப் பிரிக்க முடியாது!

அதை கலைஞர் அவர்கள் ஒப்புக்கொண்டுதான் சொன்னார். ‘‘மாண்புமிகு’’ என்பது எப்போது வேண்டு மானாலும் போகும். எப்போது போகும்? எப்போது வரும்? என்று சொல்ல முடியாது. ஆனால், ‘‘மானமிகு’’ என்பது ஒருமுறை வந்தால், கல்லறை செல்லும் வரையில் அதனைப் பிரிக்க முடியாது; கல்லறையில்கூட ‘‘மானமிகு’’ என்றுதான் போடுவார்கள்.

போர்க் கருவிகளில் ஒன்றுதான் இராமகிருட்டிணன் போன்றவர்கள்!

எனவே, மானமிகு மக்களாக வேண்டும்; அறிவு பெறும் மக்களாக இருக்கவேண்டும். சுயமரியாதை மக்களாக இருக்கவேண்டும். அதற்கு ஆயிரம் கருவிகள் உண்டு.

அந்தப் போர்க் கருவிகளில் ஒன்றுதான், இதோ இராமகிருட்டிணன் போன்றவர்கள். அந்தப் போர்க் கருவிக்குத்தான் வயது 75.

வாழ்க, வளர்க!

திராவிடம் வெல்லும், அதனை வரலாறு சொல்லும்!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *