9.69 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியாவின் வளர்ச்சி என்ஜினாக தமிழ்நாடு திகழ்கிறது சென்னையில் பன்னாட்டு வணிக மய்ய திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

viduthalai
3 Min Read

சென்னை, ஜூன் 11- 9.69 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியாவின் வளர்ச்சி என்ஜினாக தமிழ்நாடு திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.

வணிக மய்யம்

சென்னை தரமணியில் உலகளாவிய வணிக மய்யம் கடந்த 2001ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கடந்த 2006ஆம் ஆண்டு விரிவாக்கப்பட்ட இந்த மய்யத்தை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி திறந்துவைத்தார். தற்போது உலக வங்கியின் சார்பில் நவீன உலகளாவிய வணிக மய்யமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

உலக வங்கி குழுமத்தின் முக்கிய செயல்பாடுகளை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த நவீன உலகளாவிய வணிக மய்யத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (10.6.2025) திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த விழாவில் அவர் பேசியதாவது:-

‘இந்தியாவுக்கே லீடர்’

உலக வங்கியுடனான நம்முடைய நீண்ட நெடிய உறவு பல்வேறு துறைகளில் பல நற்பலன்களை வழங்கியிருக்கிறது. 1980ஆம் ஆண்டு மற்றும் 1990ஆம் ஆண்டு முதல் இரண்டு கட்டங்களில் ‘தமிழ்நாடு ஊட்டச்சத்து திட்டம்’ மற்றும் 2004ஆம் ஆண்டிலும் 2010ஆம் ஆண்டிலும் செயல்பாட்டில் இருந்த தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டம் இந்த இரண்டும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன்களில் முன்னேற்றம் காண சிறந்த முன்னெடுப்பாக அமைந்தது. இன்றைக்கு தமிழ்நாடு இந்தத் துறைகளில் ‘இந்தியாவிற்கே லீடர்’ என்று சொல்லக்கூடிய இடத்தை அடைந்திருக்கிறது.

கூடிய விரைவில், சென்னையில் தாழ்தள மின்சார பேருந்துகள் இயங்கப்போகிறது. அதற்கான திட்டத்திலும் உலக வங்கி நமக்காக உதவியிருக்கிறார்கள். வருங்காலத்தில், உலக வங்கி உதவியுடன் 409.79 மில்லியன் டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.4,262 கோடி) மதிப்பிலான முக்கியமான சில திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தப் போகிறோம்.

வளர்ச்சி என்ஜின்

முதலாவதாக, நம்-பாதுகாப்பு எனும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். ஒரு டிரில்லியன் டாலர் (ரூ.85 லட்சம் கோடி) பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்றால் அது பெண்களின் பங்களிப்பு இல்லாமல் முடியவே முடியாது. தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பே பெண்கள்தான். விவசாயம் அல்லாத, வளர்ந்து வரும் துறைகளில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,185 கோடி மதிப்பீட்டில், உலக வங்கி உதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இரண்டாவதாக, தமிழ்நாடு கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரத்தை நிலையான முறையில் பயன்படுத்துதல் திட்டம். மூன்றாவதாக, தமிழ்நாடு கிராமப்புற புதுவாழ்வுத் திட்டத்தின் இரண்டாம் கட்டம். உலக வங்கியுடன் சேர்ந்து இப்படி இன்னும் பல திட்டங்களை செயல்படுத்தி, தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற என்னுடைய அரசு ஆர்வமாக இருக்கிறது. அதற்கு நம்முடைய கூட்டாண்மை தொடர வேண்டும்.

9.69 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியாவின் வளர்ச்சி என்ஜினாக தமிழ்நாடுதான் இருக்கிறது. இந்த ஆண்டு தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ரூ.36 லட்சத்து 56 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

உலக வங்கியுடன் இணைந்து…

2030இல் 1 டிரில்லியன் டாலர் (ரூ.85 லட்சம் கோடி) பொருளாதாரம் என்று ஒரு பெரிய இலக்குடன் தமிழ்நாடு பயணிப்பது என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். அந்த இலக்கை அடைவதில் உலக வங்கியுடனான நம்முடைய உறவு வெறும் கடனுதவி சார்ந்தது மட்டுமல்ல. தொழில்நுட்பம், கொள்கை வகுத்தல் மற்றும் அறிவு சார்ந்த ஒரு கூட்டாண்மையாகத்தான் இதை நான் பார்க்கிறேன்.தற்போது வளர்ச்சி கடன்களுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 6 முதல் 7 சதவீதம் என்று அதிகளவில் இருக்கிறது. வரும் காலங்களில், புதுமையான மாற்றுதலுக்குரிய கடனுதவியை வழங்கி, மக்களுக்கு தேவையான சமூக, பொருளாதார மேம்பாட்டு தேவைகளுக்கான முதலீடுகளுக்கு உலக வங்கி உதவும் என்று எதிர்பார்க்கிறோம்.

நீண்ட கால இலக்குகளை எட்டுவதில், ஒரு மாடல் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க உலக வங்கியுடன் தமிழ்நாடு அரசு தொடர்ந்து இணைந்து செயல்படும். நம்முடைய இந்தப் பயணம் புதுமை, சமூக பொருளாதார சமநிலை மற்றும் நிலையான வளர்ச்சி என்கிற இலக்கில் நிச்சயம் வெற்றியடையும். அதற்கு தொடர்ந்து உங்களுடைய ஆதரவு வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கனிமொழி சோமு, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா, ஒன்றிய அரசின் கேபினட் செயலாளர் டி.வி.சோமநாதன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் வென்காய் ஜாங், உலக வங்கியின் இந்தியாவிற்கான இயக்குநர் அகஸ்டே டானோ கோமே, சென்னை மய்ய தலைவர் சுனில் குமார், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி.அருண்ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *