சென்னை, ஜூன் 6 இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்குவதற்காக, ரூ.1,538.35 கோடியில் தலா 3 பெட்டிகளை கொண்ட 32 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி யுள்ளது.
2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்
சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இந்த 3 வழித்தடங்களில் பணிகள் முடிந்து பிறகு, 138 ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு மெட்ரோ ரயிலும் 3 பெட்டிகளைக் கொண்டிருக்கும்.
முதல்கட்டமாக, 36 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை ரூ.1,215.92 கோடி மதிப்பில் தயாரித்து வழங்க அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் தயாரிப்பு பணி ஆந்திர மாநிலம் சிறீசிட்டியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது. தற்போது, மெட்ரோ ரயில் தயாரித்து சென்னைக்கு அனுப்பப்படுகிறது.
இந்நிலையில், ரூ.1,538.35 கோடியில் தலா 3 ரயில் பெட்டிகளைக் கொண்ட 32 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அதே அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது. இதற்கான ஏற்புக் கடிதம் வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் மனோஜ் கோயல் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் இயக்குநர் பராக் நந்தலால் கோஹெல் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
2027ஆம் ஆண்டு ஒப்படைப்பு
வடிவமைப்பு, உற்பத்தி, வழங்கல், சோதனை, ஆணையிடுதல், பணியாளர்களுக்கான பயிற்சி, மெட்ரோ ரயில் மற்றும் பணிமனை இயந்திரங்களுக்கு 15 ஆண்டுகள் முழுமையான பராமரிப்பு ஆகியவற்றை வழங்குதல் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் மெட்ரோ ரயில் 2027-ஆம் ஆண்டு ஒப்படைக்கப்படும்.
அதைத் தொடர்ந்து 14 மாதங்களுக்கு கடுமையான பாதைகள் மற்றும் ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கத்துக்கான சோதனைகள் நடத்தப்படும். இதில் பிற அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு சோதனை மற்றும் சேவை சோதனைகள் அடங்கும். அதன்பின் மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரயில்களும் 2027-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2028-ஆம் ஆண்டு மே வரை ஒவ்வொரு கட்டமாக ஒப்படைக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.