நிதி நிறுவன மோசடியில் ஏழை, படிப்பறிவு இல்லாத பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை

viduthalai
2 Min Read

மதுரை, ஜூன் 5 நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மற்றும் படிப்பறிவு இல்லாத பொதுமக்கள்தான் என்று உயர்நீதிமன்ற  நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நிதி நிறுவன மோசடி

அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரி கோவையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2023ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “மதுரையை தலைமை இடமாக கொண்டு அப்சல் (ஏபிஎஸ்ஏஎல்) நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் நான் உட்பட 60 ஆயிரம் பேர் மொத்தம் ரூ.1,000கோடிக்கும் மேல் முதலீடு செய்தோம். எங்கள் முதலீட்டுக்குரிய வட்டி மற்றும் முதிர்வுத் தொகை திரும்ப தரவில்லை. இது குறித்து மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் 2017இல் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் பாதிக்கப் பட்டவர்களுக்கு முதலீடு பணத்தை திரும்ப வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி சுதந்திரம் தலைமையில் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர், அப்சல் நிறுவன மேலாளர் அடங்கிய குழுவை உயர் நீதிமன்றம் அமைத்தது.இருப்பினும் கடந்த 5 ஆண்டுகளாக போலீஸார் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர்  விசாரித்து வரும் அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தமிழ்நாட்டில் இதுவரை நிதி நிறுவன மோசடி பிரிவின் கீழ் ரூ.827 கோடி சொத்துகள் வழக்கில் இணைக்கப் பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை மூலம் ரூ.373 கோடி வைப்புத்தொகை வைக்கப்பட்டுள்ளது. ரூ.264 கோடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.

ஏழை மக்கள்

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ” 7 ஆண்டுகளாக குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டது போல இந்த வழக்கு உள்ளது. இனியும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கூறும் காரணங்களை ஏற்க முடியாது. காவல்துறையினர் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்களை பார்க்கும்போது 39 சதவீத சொத்துக்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நிதி நிறுவனங்கள் நடத்தி மோசடியில் ஈடுபடுவது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதில் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மற்றும் படிப்பறிவு இல்லாத பொதுமக்கள் தான்.எனவே அரசு இந்த விவகாரங்களை எளிதாக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைத்து விசாரணையை ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *