‘‘பெண்கள் பலகீனமானவர்கள்’’ என்ற  பொதுப் புத்தி ஒழிக்கப்பட வேண்டும்!  

2 Min Read

பீகார் மாநிலம், முசாப்பூரில் கடந்த 26 ஆம் தேதி 20 வயதான இளைஞரால், தாழ்த்தப்பட்ட சமூக சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் உயர் சிகிச்சைக்காக பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஆனால், அங்கு வெகுநேரம் அச்சிறுமிக்கு சிகிச்சை அளிக்காமல், ஆம்புலன்சிலேயே காக்க வைக்கப்பட்டார். இது தொடர்பான காணொலி ஒன்றும் இணையத்தில் பரவியது. உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் அச்சிறுமி உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிகழ்வுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. தலைநகர் பாட்னாவில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு, பீகாரில் ஆட்சி செய்யும் அய்க்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய அவர்கள், சிறுமியின் உயிரிழப்புக்கு பொறுப்பேற்று பீகார் அரசு பதவி விலக வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.

இந்நிலையில் சிறுமிக்கு நடந்த துயர சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில், சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டியது மிகவும் வெட்கக்கேடான செயல். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை காங்கிரஸ் கட்சி அமைதியாக இருக்காது . அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளியை கைது செய்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

இத்தகு கீழ்த்தரமான செயல்பாடுகள் எங்கும் நடக்கக் கூடாதுதான்!

மனித மிருகங்கள் நாட்டில் நடமாட அனுமதிக்கக் கூடாது.

பெண்கள் தங்கள் பாதுகாப்புக்கு பல பயிற்சிகளைக் கற்றுக் கொள்வது அவசியமாகும்.

பெண்கள் என்றால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலகீனமானவர்கள் என்ற பொது அபிப்ராயத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும்.

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைப் பிரச்சினையை அரசியலுக்கு இலாபகரமானதாகப் பயன்படுத்துவது என்பது வேறு – கண்டிப்பது வேறு! பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை என்பது – திட்டமிடப்பட்ட வெறிச் செயல். அண்ணா பல்கலைக் கழகப் பாலியல் வன்கொடுமை பற்றிப் பேசுவோர் அதைப் பற்றி வாயே திறப்பது இல்லை.  பெண்கள் மத்தியில், சிறப்பாக சமூகத்தளத்தில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்பட வேண்டும்.

இதில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் கையிணைத்து அணி வகுக்கும்போதுதான் – பெண்ணை கெட்ட எண்ணத்தில் தீண்டும் மிருகத்தன சிந்தனை நாட்டை வி்ட்டு ஒழியும்!

பொது மேடைகளில் அரசியல் கட்சி மேடையானாலும், இது போன்ற பிரச்சினைகளை மக்கள் மத்தியில் கடுமையாக விமர்சிக்க வேண்டும்.

பக்தியைப் பரப்புவதற்குக் காட்டும் மூர்க்கத்தனத்துக்குப் பதிலாக – மனிதத் துவத்தையும், பண்பாட்டையும், பொது ஒழுக்கத்தையும் பற்றிப் பேச ஒரு அய்ந்து நிமிடங்களை ஒதுக்கக் கூடாதா? திராவிடர் கழகம் அதைச் செய்து கொண்டுதான் இருக்கிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *