தமிழர் தலைவர்: அரசியல் நடத்துவதற்கு எதுவும் கிடைக்காதவர்கள்; இதை வைத்து அரசியல் நடத்தலாம் என்று அதை அரசியலாக்கிப் பார்க்கிறார்கள்.
தமிழர்கள், அல்லது உண்மையான கன்னடத் தோழர்கள் யாரும் இதனைப் பெரிதுபடுத்துவதற்குத் தயாராக இல்லை.
‘‘பண்டைத் தமிழும்
தமிழில் மலர்ந்த பண்ணிகர்
தெலுங்கு துளு மலையாளம்
கண்டை நிகர் கன்னடமென்னும்
மொழிகள் கமழ கலைகள் சிறந்த நாடு….’’
என்று புரட்சிக்கவிஞர் சொன்னார்.
அதைவிட மிகத் தெளிவாக, பல ஆராய்ச்சியாளர்கள் மனோன்மணியம் சுந்தரனார் உள்பட ஆய்வாளர்கள் எல்லாம் இதைச் சொல்லியிருக்கிறார்கள்.
தாய் என்றாலும், சகோதரர் என்றாலும் ஒரே குடும்பம் என்பதை மறுக்கின்ற நேரத்தில், அதை அரசியலுக்குப் பயன்படுத்தலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்.
ஆனால், அது நிச்சயமாக அரசியலுக்குப் பயன்படாது. அந்த வகையில், திராவிடம் என்பது இருக்கிறதே, அது எல்லோருக்கும் எல்லாமும் என்பதுதான். எல்லோரையும் முட்டவிட்டுப் பார்ப்பது அல்ல.
‘முருகன்’ ஆர்.எஸ்.எஸ்.காரரா?
செய்தியாளர்: மதுரையில், ஜூன் 22 ஆம் தேதி முருகன் மாநாடு நடப்பதற்கு அனுமதி கொடுக்கக் கூடாது; அங்கே ஏற்கெனவே திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கொந்தளிப்பாக இருக்கிறது; மீண்டும் மத ரீதியான பாதிப்பு வரும் என்று சொல்லியிருக்கிறார்களே?
தமிழர் தலைவர்: நிச்சயமாக! முருகனையே இப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்த்திருக்கிறார்கள்; முருகனையே, இப்போது சங்கியாக மாறியிருக்கிறார்கள்.
முருகன், முருகனாகவே இருக்கட்டும்!
ஆர்.எஸ்.எஸ்., ஆர்.எஸ்.எஸ்.சாகவே இருக்கட்டும்.
முருகனை, ஆர்.எஸ்.எஸ். மயமாக்கிவிடவேண்டாம்.
முருகன், இப்போது ஆர்.எஸ்.எஸ். முருகனா? அல்லது வேறு முருகனா? என்ற போராட்டத்தில் ஈடுபடலாம் என்று நினைத்தால், அவர்கள் நிச்சயமாக ஏமாந்து போவார்கள்.
இது திராவிட மண் – பெரியார் மண் – மதக் கலவரத்திற்கு இங்கே இடம் கிடையாது.
ஆகவே, அவர்களுடைய வித்தைகள் இங்கே ஒருபோதும் பலிக்காது. எனவேதான், மனிதர்களைப் பிரித்தது போதாதென்று, இப்போது கடவுள்களையும் பிரிக்க முயல்கிறார்கள் என்கின்ற உண்மையை மக்களும், பக்தர்களும் தெரிந்துகொள்ளவேண்டும்.
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.