நீதிக்கட்சி – திராவிட இயக்கம் வழிவந்த ஆட்சி இன்றைய ‘‘திராவிட மாடல்’’ ஆட்சி! எத்தனைப் பட்டாளம் கூட்டி வந்தாலும் இந்த ஆட்சியை அசைத்துப் பார்க்க முடியாது!

5 Min Read

சென்னை, ஜூன் 3 இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது – நீதிக்கட்சி வழிவந்ததாகும். ஒவ்வொரு ஆளுமைகள் பிறந்த நாளிலும் புதுப்புதுத் திட்டங்களை நமது “திராவிட மாடல்’’ ஆட்சியின் நாயகர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். எத்தனைப் பட்டாளங்களைக் கூட்டி வந்தாலும், இவ்வாட்சியை அசைத்துப் பார்க்க முடியாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (3.6.2025) அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்திய  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்..

அவரது பேட்டியின் விவரம்  வருமாறு:

அறிவாசான் தந்தை பெரியார் அவர்களு டைய ஈரோட்டுக் குருகுலத்திலே கற்று, பேரறிஞர் அண்ணா அவர்களுடைய அரசியல் பாடங்களையெல்லாம் அவரது வழிகாட்டியாகப் பெற்றவர் கலைஞராவார். ஏற்கெனவே ஆண்டு அடித்தளமிட்ட நீதிக்கட்சியினர் அமைத்த திராவிடர் ஆட்சி, மீண்டும் உருவானது என்று 1967 ஆம் ஆண்டு முதலமைச்சரான அண்ணா கூறினார். அந்த அடித்தளத்தின்மீது, சிறப்பான கட்டடத்தை முத்தமிழறிஞர் கலைஞர் அமைத்தார், எதிரிகள் நடுங்கும்படியாக – அப்படிப்பட்ட பெருமைக்குரியவர் – இன்றைய விழா நாயகராக இருக்கக்கூடிய 102 ஆவது ஆண்டைக் காணக்கூடிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்!

அவருடைய பிறந்த நாளை, செம்மொழி நாளாக தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சி யால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

முத்தமிழறிஞர் கலைஞரால் உரு வாக்கப்பட்டு, இன்று ஏறுநடை போடு கின்ற – இந்தியாவே பாராட்டக்கூடிய முதல மைச்சர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சியில், ‘‘செம்மொழி நாள்’’ என்று, கலைஞருடைய பிறந்த நாள் அறிவிக்கப்பட்டு இருப்பது மிகமிக பாராட்டத்தகுந்தது – போற்றத்தகுந்தது!

காரணம் என்னவென்றால், தமிழ் மொழி செம்மொழியாக வேண்டும் என்கின்ற தீர்மானத்தை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே  1918 இல் நிறைவேற்றிய பெருமை நீதிக்கட்சி என்ற திராவிட இயக்கத்தைச் சார்ந்தது.

நீதிக்கட்சித் தீர்மானம்

1918 இல், முதன்முறையாக தமிழ் மொழி செம்மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்கின்ற தீர்மானத்தை டாக்டர் டி.எம்.நாயர் உள்ளிட்ட பல தலைவர்கள் முன்மொழிந்தனர்.

அந்தத் தீர்மானத்தைச் செயல்படுத்தக் கூடிய அளவில், நம்முடைய கலைஞர் அவர்கள்தான், ‘‘உரிமைக்குக் குரல் கொடுக்கின்ற நேரத்தில், உறவுக்கும் கை கொடுப்போம்’’ என்று மிகத் தெளிவாக உரிமைக் குரல் எழுப்பிய காரணத்தினால், ஒன்றியத்தில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி ஏற்பட்ட நிலையில், அதனைச் சிறப்பாகப் பயன்படுத்திய கலைஞர் அவர்கள், செம்மொழியாக, தமிழ்மொழி அறிவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். மன்மோகன்சிங் தலைமையில், திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்ற அந்த அமைச்சரவையில், கலைஞர் அவர்க ளுடைய விடாத  முயற்சியின் காரணமாக, 2004 ஆம் ஆண்டில்,  உரிய ஆணை பிறப்பிக்கப்பட்டது.

தமிழ்மொழியை நீஷ பாஷை என்று, இன்னமும் கோவில்களுக்குள் விடாமல், மிகப்பெரிய அளவிற்கு இழிவுபடுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அதற்குக் காரணமானது வடமொழி சமஸ்கிருத மொழியாகும். தமிழ் மொழிக்குச் செம்மொழி தகுதிக்கான கதவை கலைஞர் அவர்கள் தட்டித் திறந்து வழியை ஏற்படுத்திய பிறகு தான், சமஸ்கிருத மொழிக்கு செம்மொழித் தகுதி 2005 ஆம் ஆண்டு கிடைத்தது.

நீஷபாஷை என்று அவர்களால் சொல்லப்படுகின்ற தமிழ்மொழிக்குக் கதவு திறந்த பிறகுதான், தேவபாஷை என்று சொல்லப்படுகின்ற சமஸ்கிருதம் உள்ளே போய் ஆக்கிரமிக்க முடிந்ததே தவிர, வேறில்லை.

பண்பாட்டுப் படையெடுப்பு

ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு முறியடிப்பு என்பதற்கு இதுவே சான்றாகும். அதேநேரத்தில், எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட இயக்கத்தினுடைய கொள்கை.

எனவேதான், எங்களை எதிர்த்தவர்க ளுக்கும்கூட நாங்கள் எதிரிகள் அல்ல; அவர்களுக்கும்கூட நாங்கள் வழி விடுவோம்.

வெறுப்பைக் கொட்டுவது எங்கள் வேலையல்ல;

வெறுப்பையும் அணைத்துக் கொள்வது தான் மனிதநேயம் என்பதை கலைஞர் அவர்கள் நிரூபித்துக் காட்டினார்கள்.

எனவேதான், ‘‘செம்மொழி நாள்’’ என்பது, இது எம் மொழி செம்மொழி, என்றும் நம் மொழி என்ற தமிழ் மொழி யைக் காப்பாற்றுவது என்பதல்ல; இது வெறும் மொழிப் பிரச்சினையல்ல. முழுக்க முழுக்க பண்பாட்டுப் பாதுகாப்புப் பிரச்சி னையாகும்.

உலகம் முழுவதும்
செம்மொழி நாள்!

ஆகவே, உலகம் முழுவதும் செம்மொழி நாளாகக் கொண்டாடப்படும் இந்நாளில், இன்றைய தமிழ்நாட்டு ஆட்சி, வெறும் காட்சியாக இல்லாமல், இனத்தின் மீட்சியாக, பண்பாட்டின் ஆட்சியாக நடைபெற்றுக் கொண்டிருப்பது வாழ்நாள் முழுவதும் பெருமைப்படக் கூடியதாகும்.

எனவே, ஒவ்வொரு தலைவருடைய பிறந்த நாளிலும், ஒவ்வொரு அரிய சாதனைக் களத்தின்மீதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி நின்று கொண்டிருக்கின்றது.

இனிமேல் அவ்வளவு எளிதாக எத்த னைப் பட்டாளங்களைக் கூட்டி வந்தாலும், கூலிப்படைகளும், அடமானப் படைகளும் வந்தாலும்கூட, இந்த ஆட்சியை வெல்வ தென்பது நடக்காது என்பதுதான் இன்றைய நிலை.

அதைத்தான் மானமிகு சுயமரியா தைக்காரன் என்று தன்னை வர்ணித்துக் கொண்ட கலைஞருடைய பிறந்த நாளில் சூளுரையாக ஏற்போம்!

தமிழ் – கன்னடம் பிரச்சினை

செய்தியாளர்: தமிழ்த் திரைப்படத்தை கருநாடகத்தில் வெளியிட விடமாட்டோம் என்று அங்கே இருப்பவர்கள் சொல்கி றார்களே?

தமிழர் தலைவர்: அரசியல் நடத்துவதற்கு எதுவும் கிடைக்காதவர்கள்; இதை வைத்து அரசியல் நடத்தலாம் என்று அதை அரசியலாக்கிப் பார்க்கிறார்கள்.

தமிழர்கள், அல்லது உண்மையான கன்னடத் தோழர்கள் யாரும் இதனைப் பெரிதுபடுத்துவதற்குத் தயாராக இல்லை.

‘‘பண்டைத் தமிழும்

தமிழில் மலர்ந்த பண்ணிகர்

தெலுங்கு துளு மலையாளம்

கண்டை நிகர் கன்னடமென்னும்

மொழிகள் கமழ கலைகள் சிறந்த நாடு….’’

என்று புரட்சிக்கவிஞர் சொன்னார்.

அதைவிட மிகத் தெளிவாக, பல ஆராய்ச்சியாளர்கள் மனோன்மணியம் சுந்தரனார் உள்பட ஆய்வாளர்கள் எல்லாம் இதைச் சொல்லியிருக்கிறார்கள்.

தாய் என்றாலும், சகோதரர் என்றாலும் ஒரே குடும்பம் என்பதை மறுக்கின்ற நேரத்தில், அதை அரசியலுக்குப் பயன்படுத்தலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்.

ஆனால், அது நிச்சயமாக அரசியலுக்குப் பயன்படாது. அந்த வகையில், திராவிடம் என்பது இருக்கிறதே, அது எல்லோருக்கும் எல்லாமும் என்பதுதான். எல்லோரையும் முட்டவிட்டுப் பார்ப்பது அல்ல.

‘முருகன்’ ஆர்.எஸ்.எஸ்.காரரா?

செய்தியாளர்: மதுரையில், ஜூன் 22 ஆம் தேதி முருகன் மாநாடு நடப்பதற்கு அனுமதி கொடுக்கக் கூடாது; அங்கே ஏற்கெனவே திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கொந்தளிப்பாக இருக்கிறது; மீண்டும் மத ரீதியான பாதிப்பு வரும் என்று சொல்லியிருக்கிறார்களே?

தமிழர் தலைவர்: நிச்சயமாக! முருகனையே இப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்த்திருக்கிறார்கள்; முருகனையே, இப்போது சங்கியாக மாறியிருக்கிறார்கள்.

முருகன், முருகனாகவே இருக்கட்டும்!

ஆர்.எஸ்.எஸ்., ஆர்.எஸ்.எஸ்.சாகவே இருக்கட்டும்.

முருகனை, ஆர்.எஸ்.எஸ். மயமாக்கிவிடவேண்டாம்.

முருகன், இப்போது ஆர்.எஸ்.எஸ். முருகனா? அல்லது வேறு முருகனா? என்ற போராட்டத்தில் ஈடுபடலாம் என்று நினைத்தால், அவர்கள் நிச்சயமாக ஏமாந்து போவார்கள்.

இது திராவிட மண் – பெரியார் மண் – மதக் கலவரத்திற்கு இங்கே இடம் கிடையாது.

ஆகவே, அவர்களுடைய வித்தைகள் இங்கே ஒருபோதும் பலிக்காது.

எனவேதான், மனிதர்களைப் பிரித்தது போதாதென்று, இப்போது கடவுள்களையும் பிரிக்க முயல்கிறார்கள் என்கின்ற உண்மையை மக்களும், பக்தர்களும் தெரிந்துகொள்ளவேண்டும்.

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *