2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்

viduthalai
3 Min Read

சென்னை, ஜூன் 1- தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 2026ஆம் ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பூத்கமிட்டி அமைத்தல், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் என அடிப்படை பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

பெயர்களை சேர்க்க…

இது ஒருபுறம் இருக்க, இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான அடிப்படை பணிகளை தொடங்கியுள்ளது. ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது, இதுவரை பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்ப்பதற்கான வாய்ப்புகளை தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது. வாக்காளர்கள் தங்கள் பெயர்களை ஆன்லைன் மற்றும் செயலி வாயிலாக சேர்க்க முடியும்.

இதற்கிடையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் இதற்கான கருத்துகளையும் கேட்டு அதன்படி பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை ஒட்டியே சமீபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் டில்லியில் தேர்தல் ஆணையம் நடத்திய கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

குளறுபடிகளை களைவது

இந்நிலையில், வாக்காளர்கள் பதிவை முறைப் படுத்துவது, குளறுபடிகளை களைவது போன்ற பணிளுக்காக தொகுதிவாரியாக வாக்காளர் பதிவு அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதில், தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்குமான வாக்காளர் பதிவு அதிகாரிகள் யார் என்ற பட்டியலை, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அரசிதழில் வெளியிட்டுள்ளார்.

மாவட்ட வாரியாக…

குறிப்பாக, அந்தந்த மாவட்டங்களில் உள்ள கூடுதல் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர், உதவி ஆட்சியர், சார் ஆட்சியர், மாநகராட்சிகளில் உதவி ஆணையர், நிலையில் உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், அந்தந்த தொகுதிகளில் நடைபெறும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் பணிகளை முழுமையாக கண்காணி்ப்பார்கள். தேர்தல் நெருங்கும் வேளையில், மாவட்ட வாரியாக பார்வையாளர்களும் நியமி்க்கப்பட்டு, வாக்காளர் பட்டியல் சீரமைக்கும் பணிகளும் நடைபெறும்.

நேர்முகத் தேர்வு கிடையாது…

டி.என்.பி.எஸ்.சி.யில் 615 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஜூன் 1- தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள நேர்முகத் தேர்வு இல்லாத டெக்னிக்கல் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. உதவி பொறியாளர் (சிவில்), உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்), இளநிலை மின்ஆய்வாளர் உள்ளிட்ட இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பணி கனவுடன் இருக்கும் பல லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருப்பது டிஎன்பிஎஸ்சிதான். பல்வேறு துறைகளிலிருக்கும் காலிப்பணியிடங்களுக்கு அவ்வப்போது உரிய அறிவிப்புகளை டிஎன்பிஸ்சி வெளியிட்டு நிரப்பி வருகிறது.

அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

பல லட்சக்கணக்கான தேர்வர்கள் எழுதக்கூடிய குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்ப அவகாசம் நிறைவு பெற்றுள்ளது. 3935 பணியிடங்களுக்கு நடத்தப்படும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. விண்ணப்பிக்கும் தேதி முடிந்துள்ளது. இந்த தேர்வில் விண்ணப்பதாரர்கள் திருத்தம் மேற்கோள்ள 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான், தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள நேர்முகத் தேர்வு இல்லாத டெக்னிக்கல் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. 615 பணியிடங்களுக்கு இன்று முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

சமூக அலுவலர் பணி

உதவி பொறியாளர் (சிவில்), உதவி பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்), இளநிலை மின்ஆய்வாளர், வேளாண் அலுவலர் (விரிவாக்கம்), தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர், மீன்வள ஆய்வாளர், நூலகர் (கிரேடு-2), இளநிலை அறிவியல் அலுவலர், உதவி பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு), சமூக அலுவலர், உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-1) உள்ளிட்ட 47 விதமான பதவிகளில் 615 காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதியை பொறுத்தவரை பணியிடங்களுக்கு தகுந்தபடி மாறுபடும். ஏதாவது ஒரு பட்டப்படிப்பு, பொறியியல், முதுகலை பட்டம் படித்தவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன.

விண்ணப்பிக்க இன்று முதல் ஜூன் 25 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுகள் வரும் 04.08.2025 முதல் 10.08.2025 வரை நடபெறும். தமிழ் தகுதி தேர்வு மற்றும் துறை சார்ந்த பாடப்பிரிவு கொண்ட எழுத்து தேர்வு நடைபெறும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *