‘விடுதலை’ சந்தா கழகத் தோழர்களுக்கு தந்தை பெரியார் வேண்டுகோள்

viduthalai
2 Min Read

‘விடுதலை’ பத்திரிகை நல்ல நிலையில் நஷ்டமில்லாத நிலையில் வாழ்ந்து வர வேண்டுமானால், இப்போது இருப்பதை விட இன்னும் குறைந்தது 2500 சந்தாதாரர்கள் இரண்டு மாதத்தில் சேர்க்கப்பட்டு ஆக வேண்டும். இதற்குப் பெரிதும் தஞ்சை மாவட்டத்தையே நம்பி இருக்கிறேன்.

ஒரு ஆண்டுக்குள் மேலும் 5,000 சந்தா பெருகி ஆகவேண்டும். அது 2 மாதத்திற்கு அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இப் போது உடனடியாக 2 மாதத்தில் 2,500 சந்தா அதிகமாகச் சேர்க்கப்பட்டு ஆக வேண்டும்.

இன்று  நமது இயக்கம் இதுவரை இருந்த அளவைவிட உச்சநிலையில் இருக் கிறது. இது உண்மை என்பது மெய்ப்பிக்க வேண்டுமானால் இதுதான் பரீட்சை.

இயக்கத் தோழர்கள் இந்த வேண்டு கோளை  நிறைவேற்றி எங்களைப் பெருமைப்படுத்தி ‘விடுதலை’யை வாழ வைத்து உற்சாகப்படுத்தும்படி  கேட்டுக் கொள்கிறேன்.

நாளை முதலே தோழர்கள் இந்தக் காரியத்தில் இறங்கி செயல்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்கு ஆக ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் மாவட்டத்தில் இத்தனை இத்தனை சந்தா சேர்த்துத் தருகிறோம் என்பதாக எனக்கு உறுதி வார்த்தை ஒரு வாரத்தில் அளிக்கவேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன்.

“விடுதலை’யின் சேவையை
எடுத்து விளம்புங்கள்

நமது இயக்கம், நமது பத்திரிகை செய்துள்ள சிறந்த சமுதாயப் பணிகளை மக்களிடம் சொல்லுங்கள். இது மறைந் தால் என்னஆகும் என்பதை விளக்குங்கள்.

அதிகாரிகளை, அரசாங்க சிறிய உத்யோகஸ்தர்களை, வியாபாரிகளை விவசாயப் பொதுமக்களை தைரியமாய் அணுகுங்கள். வெட்கப்படாதீர்கள். தமிழ் நாட்டு மக்கள் இனஉணர்ச்சியையும் சமுதாய் நலன் உணர்ச்சியையும் பரீட்சை பார்ப்பதில் நமக்கு கவுரவக் குறைவு நேர்ந்து விடாது.

இரண்டுமாத காலம்-60 நாட்களில் 2500 சந்தா. தினம் 42 சந்தா. 13 மாவட் டங்களில்,  100 வட்டங்கள் (தாலுகாக்கள்). பொதுவாக ஒரு மாவட்டத்திற்கு 200 சந்தாவீதமாகும். இதுகூட நம்  கழக முயற்சிக்கு, “விடுதலை’’ மறுபிறப்புக்கு கைகூடவில்லை என்றால் நம்நிலை என்ன என்பதை தோழர் ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டுமென்று வேண்டி இந்த வேண்டுகோளை விண்ணப்பமாக தமிழ் நாட்டு மக்களிடம் சமர்ப்பிக்கிறேன்.

– ஈ.வெ.ராமசாமி,

‘விடுதலை’ 20.6.1964

குறிப்பு: 61 ஆண்டுகளுக்குமுன் தந்தை பெரியார் ‘விடுதலை’ சந்தா எண்ணிக்கையை நிர்ணயித்தார். இந்தக் கால கட்டத்தில் சந்தா எண்ணிக்கை பல மடங்கு பெருக வேண்டும் அல்லவா!

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *