‘விடுதலை’யை வரவேற்ற தந்தை பெரியார்

viduthalai
3 Min Read

ஒரு நற்செய்தி ‘விடுதலை’

‘‘ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து, தமிழ் பத்திரிகை ஒன்று ‘‘விடுதலை’’ என்னும் பேரால், வாரம் இருமுறையாக சென்னையில் இருந்து வெளியாகி இரண்டு இதழ்கள் நமது பார்வைக்கு வந்தன. அதைப்பற்றி ஒரு மதிப்புரை எழுத வேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை.

ஏனெனில், 2, 3 வருஷங்களாகவே பரிசுத்த வீர ரத்த ஓட்டமுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாரும், இரவும் பகலுமாய் தமிழ் பத்திரிகை! தமிழ் பத்திரிகை!! தமிழ் பத்திரிகை!!! என்கின்ற தாகத்துடன் அலைந்து கொண்டிருந்தும், அதை எந்தத் தலைவர்களும் கவனியாமல் அலட்சியமாய் இருந்ததும், அதன் பயன்களை சமீபகாலத்தில் ஏற்பட்ட பல தேர்தல்களின் மூலம் அனுபவித்தும், மறுபடியும் புதிய முறையில் முன்னிலும் அதிகமாக இரண்டு பங்கு சப்தத்துடன் தமிழ் பத்திரிகை! தமிழ் பத்திரிகை!! தமிழ் பத்திரிகை!!! என்று மக்கள் கூப்பாடு போட்டதுமான விஷயம் யாரும் அறியாததல்ல. அப்படிப்பட்ட நிலையில் “விடுதலை” என்னும் பேரால் ஒரு பத்திரிகை வெளியாய் இருப்பதை பார்த்து எந்தப் பார்ப்பனரல்லாதாரும் தங்களுக்கு ஏதோ ஒரு “பாக்கியம்” கிடைத்ததாக மகிழ்ச்சியடைவார்களே ஒழிய, இதற்கு மதிப்புரை வருகின்றதா? அது எப்படி வருகிறது? என்று யாரும் கவனிக்க மாட்டார்கள்.  ஆதலால் நாம் மதிப்புரை எழுதும் வீண் வேலையில் பிரவேசிக்காமல், “வந்துவிட்டது! தமிழ்ப் பத்திரிகை!” என்று விளம்பரம் செய்யவே ஆசைப்படுகின்றோம்.

“விடுதலை” பத்திரிகை இன்று வாரம் இரு முறையாக வெளி வந்தாலும், கூடிய சீக்கிரம் தமிழ் மக்கள் ஆதரவுக்கு ஏற்ப தினசரி ஆகும் என்பதில் நமக்கு அய்யமில்லை. பத்திரிகையானது நல்ல மாதிரியில் பார்ப்பன விஷமப் பிரச்சாரங்களுக்கு மார்பைக் காட்டும் முறையில் சரியான விஷயங்களைக் கொண்டு வெளியாகி வருவதால் அதை ஆதரிக்க வேண்டிய அவசியம் எந்த விதத்திலும் குறைவாக காணப்படவில்லை என்றே சொல்லுவோம். இப்பத்திரிகைக்கு உள்ள கஷ்டம், எதிர்ப்பு, சூழ்ச்சி, தொல்லை ஆகிய விஷயங்களைப் பற்றி நாம் விவரிக்க வேண்டியதில்லை. இப்படிப்பட்ட தொல்லைகளுக்கு இடையே ஒரு பத்திரிகை வாழ்வதென்றால் மிகவும் ஆச்சரியமான காரியமாகும்.

இதுவரை பார்ப்பனர்களுக்கு விரோதமானது என்று காணப்பட்ட பத்திரிகைகள் எதுவும் நமது நாட்டில் வாழவே இல்லை. எவ்வளவோ வீரமாக ஆரம்பித்த பத்திரிகைகள் எல்லாம் வருடாந்திரம் ஆவதற்குள் ஒன்று பார்ப்பனர்களுக்கு அடிமையாக வேண்டியது, அல்லது மறைந்து போக வேண்டியது என்கின்ற நிலையில் தான் இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் “குடிஅரசு” ஏதோ பாஷணத்தில் புழுத்த புழுப் போல் உயிர் வைத்துக் கொண்டு வருகின்றது என்றாலும், அதுவும் இதுவரை அடையாத கஷ்டமோ, தொல்லையோ இனி புதிதாக ஒன்று இருப்பதாகத் தோன்றவில்லை. இப்படிப்பட்ட நிலையில் “விடுதலை” தோன்றி இருக்கின்றது என்பது ஒரு விதத்தில் சந்தோஷம் என்றாலும், மற்றொரு விஷயத்தில் எந்த நிமிஷத்தில் அதற்கு ஆபத்து வரப் போகின்றதோ என்று பயப்பட வேண்டியதாகவே இருக்கிறது.

எப்படியோ ஒரு விதத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்த்தபடி தமிழ்ப் பத்திரிகை ஒன்று வந்து விட்டது. அதை ஆதரித்து தினசரியாக்கி நிலை நிறுத்த வேண்டியது தமிழ் மக்கள் கடமையே ஒழிய, இனி தலைவர்களைக் குற்றம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அதன் நோக்கம், அதன் தொண்டு ஆகியவைகளைப் பற்றி  சந்தேகப்பட வேண்டிய காரணமே யாருக்கும் கிடையாது. ஆகையால், அதைப்பற்றி கவலைப்படாமலும், அதற்கு யாரும் புத்தி புகட்டும் வேலையில் இறங்காமலும், ஒவ்வொருவரும் சந்தாதாரர்களாக சேர்ந்துவிட வேண்டும். சந்தா தொகை வாரம் இருமுறைக்கு வருஷம் 3-10-0 ஆகும். இதைவிடக் குறைந்த தொகைக்கு தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ  வாரம் இருமுறை 10 பக்கம் விஷயம் கொண்ட பத்திரிகை ஒன்று இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. ஆகையால் ஒவ்வொருவரும் ரூ.3-10-0 நாளையே மணியார்டர் அனுப்பிவிட வேண்டியது அவசியமான காரியம் ஆகும்.

3 மாதத்திற்குள் 2000 சந்தாவாவது சேர்ந்தால் “விடுதலை” தினசரி ஆகிவிடலாம் என்பதில் சந்தேகமில்லை. அதன் பத்திராதிபர் தோழர் டி.ஏ.வி.நாதன் அவர்கள் ஜஸ்டிஸ் பத்திரிகையை நடத்தி வந்தவர் ஆனதால் அப்பேர்பட்ட அறிவாளியால் நடக்கும் பத்திரிகை நீடூழி வாழ்ந்து பாமர மக்களுக்கும், பண்டிதர்களுக்கும் பயன்பட்டு உலக மக்களுக்கு உண்மை விடுதலையைக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

‘குடிஅரசு’ – துணைத்தலையங்கம் – 09.06.1935

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *