ஒரு முக அறுவை மருத்துவரின் முத்தான அனுபவங்கள்- 4 “கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாதவருக்கு” மருத்துவம்

viduthalai
7 Min Read

மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி

தமிழ்நாடே கோடை வெயிலில் தகித்துக் கொண்டிருக்கும் பொழுது, தண்ணென்ற குளிர்த் தென்றல் ஆளைத் தழுவும், ஆனந்தமான ஒரு காலை. நான் புறநோயாளிகள் பகுதிக்குப் பணிக்கு சென்றேன். அங்கு ஓர் இணையர் அமர்ந்திருந்தனர் காலையில் முதல் நோயாளி! என் அறைக்கு அழைத்தேன். உள்ளே வந்தவரிடம் என்ன பிரச்சினை என்று கேட்டேன். அந்தப் பெண்தான் பதிலளித்தார். “சார், இவர் என் கணவர். நாங்கள் ஊட்டிக்கு அருகில் உள்ள ‘ஏக்குனி’ என்ற கிராமத்திலிருந்து வருகிறோம். படுகர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர் பெயர் பீமன். என் பெயர் சீதா. எங்களுக்குத் திருமணமாகி பத்து ஆண்டுகளாகிறது. இரண்டு குழந்தைகள். இவரால் வாயைத் திறக்க முடியாது. நீங்கள் அதற்கு மருத்துவம் செய்வதாக நியூஸ் பேப்பரில் படித்தோம். அதனால் உங்களைப் பார்க்க வந்தோம்” என்றார்.

நான், அவர் கணவர் பீமனிடம், “பீமன் சொல்லுங்கள், உங்களுக்கு என்ன செய்கிறது?” என்று கேட்டேன். பீமன், பல்லைக் கடித்தவாறு பேசினார். “சார், நான் பத்து வயதில் விளையாடும்போது, வீட்டின் அருகில் இருந்த ஒரு மரத்தின் மேல் ஏறினேன். அப்போது மேலிருந்து தவறி விழுந்து விட்டேன் என் கீழ்நாடியில் சரியான அடிபட்டு விட்டது. அப்பா என்னை உதகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். டாக்டர் கீழ்நாடியில் இருந்த வெட்டுக் காயத்திற்கு, தையல் போட்டு, மருந்து கொடுத்து அணுப்பினார். ஒருவாரத்தில் தையல் எடுத்தார்கள். அதற்குப் பிறகு நன்றாகவே இருந்தேன். பள்ளிக் கூடத்தில் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். கொஞ்ச காலத்தில் என் வாய் சிறிது, சிறிதாக இறுகத் தொடங்கியது. ஏறத்தாழ ஓர் ஆண்டுக்குள் வாய் முழுமையாக இறுகி, வாயே திறக்க முடியாத நிலைக்கு ஆளானேன். எனக்கு அப்போது 11 வயது. மேல் நாடிப் பற்களும், கீழ் நாடிப் பற்களும் இறுகி கடித்தவாறு இருக்கும் படியாகி விட்டது. எந்த உணவும் சாப்பிட முடியவில்லை. பல டாக்டர்களிடம் காண்பித்தோம் கோவை மெடிக்கல் காலேஜிலும் காண்பித்தோம்.

ஆனால், ஒரு பலனும் இல்லை. இப்பொழுது எனக்கு 36 வயது. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நான் எந்த கெட்டியான உணவும் சாப்பிட்டதே இல்லை. மிகவும் மனம் வருந்திய என் தாயார் எனக்குக் கேப்பைக் கூழ், பழச்சாறு போன்றவையும், சோற்றை சாம்பார், ரசம் போன்றவற்றை மிக்ஸியில் அரைத்து குடிக்கக் கொடுப்பார். கடந்த 19 ஆண்டுகளாக இதுதான் என் நிலை. திரவ உணவைத் தவிர நான் எதையும் சாப்பிட்டதே இல்லை. மற்றவர்கள் சாப்பிடும்பொழுது ஏக்கத்தோடு பார்க்கத்தான் முடியுமே ஒழிய, நான் சாப்பிட முடியாது. நாளடைவில் என் முகத்தின் வளர்ச்சியும் குறைந்து விட்டது. பள்ளிக் கூடத்தில் கூடப் படித்த மாணவர்கள் என்னை கேலி செய்ததால் பள்ளிக் கூடம் போவதையும் நிறுத்தி விட்டேன். மற்றவர்கள் விதவிதமாக இனிப்பு, காரப் பலகாரங்கள், அசைவ உணவுகளைச் சாப்பிடும் போது, என் வாயில் எச்சில் ஊறும், அந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை என்னை ஆட்டிவைக்கும். ஆனால் என்ன செய்ய முடியும்? இந்தக் கவலையிலேயே என் அம்மாவும் இறந்து விட்டார். என் மனைவி சீதாதான் என்னை பார்த்துக் கொள்கிறார். இப்பொழுதெல்லாம் நான் மற்றவர்கள் சாப்பிடும் இடத்தில் இருக்கவே மாட்டேன். எங்கள் குலதெய்வம், “வெரத்தையம்மனை” (படுகர் கடவுள்) வேண்டியும் பார்த்தேன். எந்த பலனும் இல்லை.

பல நேரங்களில் சாப்பிடும் ஆசையில் ஏங்கி, ஏங்கித்  தவிப்பதற்கு பதில் செத்து விடலாமா என்று கூடத் தோன்றும். ஒரு முறை செத்து விடலாம் என்று முடிவு செய்து பூச்சி மருந்து கூட குடித்து விட்டேன். ஆனால், இந்த சீதாதான் என்னைக் காப்பாற்றி விட்டாள். சமீபத்தில்தான் நியூஸ் பேப்பரில்… நீங்கள் இந்த வியாதியைச் சரியாக்குவதாகக் கேள்விப்பட்டேன். என்னிடம் ஒரு சிறிய தேயிலைத் தோட்டம் இருக்கிறது. அதை விற்றாவது நான் பீஸ் கொடுக்கிறேன். என்னை ஆப்பரேஷன் செய்து வாயைத் திறக்க வைத்து சாப்பிட வையுங்கள் டாக்டர்” என்று கன்னத்தில் கண்ணீர் வழிந்தபடியே, கையெடுத்துக் கும்பிட்டவாறு, கெஞ்சாதக் குறையாகக் கேட்டார். மிகவும் பரிதாபமான அவர் நிலை, என்னை மிகவும் பாதித்தது. சாப்பிட முடியவில்லையே என்ற ஏக்கத்தில் ஒருவர் சாகக் கூடத் தயாராகி விட்டாரே என்று நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவரை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்ற உறுதி எடுத்தேன். அவரை அமரவைத்து, ஆறுதல் கூறினேன்.

“பீமன், கவலைப்படாதீர்கள். உங்களை நிச்சயம் நான் குணப்படுத்துவேன். ஆப்பரேஷன் செய்து உங்களைச் சரியாக்கி, உங்களை எல்லா உணவுகளையும், மற்றவர்கள் போல் சாப்பிட வைப்பேன். நிச்சயம் உங்களை குணப்படுத்துவேன். இது உறுதி” என்று அவரைத் தேற்றினேன். நீண்ட காலம் (ஏறத்தாழ இருபது ஆண்டுகள் இணைந்து) மூட்டு எலும்புகள், அவர் வயது காரணங்களால் மிகவும் அடர்த்தியாகவும், கடினமாகவும் மண்டை ஓட்டோடு இணைந்திருக்கும். இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் செய்வதை விட மிகக் கடினமாக அந்த அறுவை மருத்துவம் இருக்கும் என்று நான் எதிர்பார்த்தேன். அதற்குத் தக்கவாறு அறுவை மருத்துவத்தைத் திட்டமிடல் வேண்டும். வழமை போல் நோயாளியை மருத்துவமனையில் சேர்த்து அறுவை மருத்துவத்திற்கு முன் ஆய்வுகளை மேற்கொண்டேன். அவர் உடல்நிலை அறுவை மருத்துவத்தைத் தாங்கும் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்திக் கொண்டு, அறுவை மருத்துவத்திற்கு நாள் குறிக்கப்பட்டது.

வழக்கமாக வரும் மயக்குநர் (Anaesthetist) விடுமுறையில் இருந்ததால் வேறு மயக்குநர் அறுவை மருத்துவத்திற்கு மயக்கம் கொடுக்க வந்தார். மிகவும் அனுபவம் வாய்ந்தவர் அவர். நோயாளியைப் பார்த்ததும் அவருக்கே மயக்கம் வந்து விடும் போல் ஆயிற்று. இதுவரை வாய் இறுகிய நோயாளியைப் பார்த்ததோ, மயக்க மருந்து அவர் செலுத்தியதோ இலலை எனத் தயங்கினார். எனக்கு இது பழக்கமான பிரச்சினை என்பதால் நான் அவரை ஊக்கப்படுத்தினேன். முடிவில் அவர் துணிந்து மூக்கின் வழியாக மயக்க மருந்து செலுத்தும் மூச்சுக் குழாயை செருக முயற்சித்தார். முதல் முறை தோல்வி. ஆனால் இரண்டாம் முறை, அவரின் நீண்ட அனுபவத்தால், குழாயை மூச்சுக் குழாயில் செருகி விட்டார். இப்பொழுது இதைப் போன்ற நோயாளிகளுக்கு மயக்க மருந்து செலுத்த ‘ஒளி இழை’ (Fibro optic) மயக்கக் குழாய் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆனால், அது பெரிய, தனியார் மருத்துவமனைகளில்தான் இருக்கிறது. குன்னூர் போன்ற சிற்றூரில் உள்ள மருத்துவமனைகளில் அதுபோன்ற வசதிகள் கிடைக்காது.

ஆனால், ஒளி இழை வெளிச்சத்தில் கூட மூச்சுக் குழாயைச் செருகுவது கடினம்தான். சில நேரங்களில் மூச்சுக் குழாயைச் செருகவே முடியாத நிலையும் ஏற்படக் கூடும் அந்த வேளையில், கழுத்தில் துளையிட்டு (Tracheastomy) மயக்கக் குழாயைச் செருக வேண்டி இருக்கும். நல்வாய்ப்பாக, மயக்குநரின் அனுபவத்தால் மூச்சுக்குழாய்க்குள் (Trachea), மயக்க மருந்துக் குழாயை செலுத்த முடிந்தது. அறுவை மருத்துவத்தைத் துவக்கினேன். நான் எதிர்பார்த்தபடியே மூட்டின் அருகில் சென்றேன்.

பல ஆண்டுகள் வாய் இறுகிய நிலையில் இருந்ததால் மெல்கின்ற தசைகள் (Muscles of Mastication) வளர்ச்சியின்றி, சிறுத்து (Dysused atrophy), இறுகிப் போயிருந்தது. இந்தத் தசைகள் பக்கத்திற்கு நான்காக மொத்தம் இரு புறமும் எட்டுத் தசைகள் இருக்கும். நாம் வாயைத் திறக்கவும், மூடவும் காரணமான மூட்டுக்களை இயக்குவது இந்தத் தசைகள்தான். பேசும் பொழுதும், இருமும்பொழுதம், கொட்டாவி விடும் பொழுதும், உணவை மெல்லும் பொழுதும் மற்ற அனைத்து வாயசைவிற்கும் இந்தத் தசைகள்தான் காரணம். இறுகிப் போன இந்தத் தசைகளிலிருந்தும், நரம்புகளிலிருந்தும், இரத்தக் குழாய்களிலிருந்தும் ஒதுக்கி மூட்டை அடைந்தேன். அங்கோ மூட்டு என்ற பாகமே இல்லை. மண்டை ஓட்டோடு முழுமையாக இணைந்த ஒரே எலும்பாக கீழ்த்தாடை மாறிப் போயிருந்தது. மிகுந்த முயற்சி எடுத்து, மூட்டைக் கண்டுபிடித்து, அதை மண்டை ஓட்டிலிருந்து பிரித்தேன். அதுவும் எலும்பு கெட்டியாக, தடிமனாக மாறியிருந்ததால் அதைச் சீராக்குவதும் மிகவும் கடினமான ஒரு முயற்சியாக இருந்தது. ஆனால் அதை நான் எதிர்பார்த்திருந்ததால், பலத்த முயற்சியில் செய்து முடித்தேன்.பிறகு அடுத்த பக்கத்தையும் அதே முயற்சியோடு சீராக்கினேன்.

ஒரு வழியாக இருபது ஆண்டுகளாக மூடிக் கிடந்த வாய் திறக்கப்பட்டது. வாய் திறந்து மூடுவதை உறுதி செய்த பின்தான் எனக்கும் நிம்மதி ஏற்பட்டது. மயக்க மருந்து குழாயை வெளியே எடுத்தார் மயக்குநர். நோயாளியின் உடல் நிலை சீராக இருந்ததால் படுக்கைப் பகுதிக்கு மாற்றப்பட்டார். நினைவு முழுமையாக திரும்பியதும், அவரைப் பார்க்கச் சென்ற பொழுது, கையில் இனிப்புப் பெட்டியோடு சென்றேன். முதல்முதலாக பீமன், நினைவு தெரிந்த பின் முதல்முதலாக கண்ணீரோடு, நான் கொடுத்த இனிப்பை வாயைத் திறந்து வாயில் போட்டு மெல்லும் அந்தக் காட்சியைப் பார்த்ததும், என்னையும் அறியாமல் என் கண்களும் கலங்கின. அருகிலிருந்த அவரது மனைவி, கதறியவாறே என் கால்களில் விழ வந்தார். அதைத் தடுத்து அவர்களை வாழ்த்தி விட்டு வெளியே வந்தேன் பத்து நாட்களில், தையல்கள் பிரிக்கப்பட்டு, பீமன் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீட்டிற்குச் சென்றார். என் மருத்துவத் துறை வாழ்க்கையில் மகிழ்ச்சியான பல தருணங்களில் இதுவும் ஒன்று.

இந்த மருத்துவம் மிகவும் அரிதான ஒன்று. அடிக்கடி இந்த நோயாளிகளைப் பார்ப்பதே இயலாது. அப்படியே பாதிப்படைந்தாலும் எங்கு சென்று காட்டுவது என்ற குழப்பம் நோயாளிகளுக்கும், ஏன், பல மருத்துவர்களுக்குமே குழப்பம். அப்படி இருக்கையில், தமிழ்நாட்டின் ஒரு மூலையில், அதுவும் மலைக்காட்டில் உள்ள ஒரு சின்ன மருத்துவமனையில் வசதிகள் அதிகம் இல்லாத நிலையில் எந்த விதக் கட்டணமுமின்றி, 65 நோயாளிகளுக்கு இந்த அறுவை மருத்துவம் செய்துள்ளேன். 100% வெற்றியுடன் அவை நடந்துள்ளன. அகில இந்திய மருத்துவத் துறையில் இது ஒரு அரும் சாதனை. இந்த மருத்துவம் வெற்றிகரமாக செய்ததற்காக முக அறுவை மருத்துவர்கள் மாநாட்டில் இரண்டு முறை சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கான விருதுகள் கிடைத்தன.

“அனைத்துப் புகழும் தந்தை பெரியாருக்கே!”

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *