பெரியார் மருந்தியல் கல்லூரியில் குற்றவியல் துறையின் மூலம் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்

viduthalai
2 Min Read

திருச்சி, மே 28- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் சைபர் க்ரைம் துறையின் மூலம் விழிப்புணர்வு கருத்தரங்கம் 26.05.2025 அன்று காலை 11 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.

பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் மூலிகை மருந்தியல் துறைத் தலைவர் முனைவர் எஸ். ஷகிலா பானு வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரும் திருச்சி மாநகர குற்றவியல் பிரிவின் காவல்துறை ஆய்வாளருமான
கே.. சண்முகபிரியா  சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்துகளை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். அவர் தமது உரையில் படிக்காத பாமர மக்களைக் காட்டிலும் படித்தவர்கள்தான் அதிகம் அலைபேசி மற்றும் இணைய வாயிலான மோசடிகளில் அகப்படுகின்றனர் என்றும் தொடர்ந்து குற்றவியல் துறையில் நாளுக்கு நாள் பதிவாகும் வழக்குகளே அதற்கு ஆதாரம் என்றும் உரையாற்றினார். மேலும் எந்த இடத்திலும் நாம்,  நம்முடைய சுய விவரங்கள் மற்றும் ஒளிப்படங்களை பதிவு செய்தல் கூடாது என்றும் அப்படி பதிவு செய்யக்கூடிய தரவுகளை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து அதனை தவறுதலாக பயன்படுத்த வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அலைபேசியில் பதிவிறக்கம் செய்யக்கூடிய யூ டியூப், முகநூல், டுவிட்டர், வாட்ஸ்ஆப்,   இன்ஸ்டா கிராம், டெலிகிராம் போன்ற செயலிகளை நம்முடைய அத்தியாவசிய தேவைகளுக்கு  மட்டும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அதில் தேவையில்லாத நபர்களுடன் உரையாடுவது, தனிப்பட்ட புகைப்படங்களை பரிமாறிக்கொள்வது போன்ற செயல்பாடுகளில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது என்றும் உரையாற்றினார்.

முன் பின் தெரியாத நபர்களிடமிருந்து அலைபேசிக்கு வரக்கூடிய அழைப்புக்களையும் குறுஞ்செய்திகளில் வரும் இணைப்புகளையும் நாம் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் இதுபோன்ற மோசடி நபர்களால் பாதிக்கப்பட்டால் உடனடியாக சைபர் க்ரைம் காவல் நிலையத்தை எந்தநேரமும் அணுகலாம் அல்லது  1930 என்ற உதவி எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறி, அலைபேசி தொலைந்து போதல், மின்னணு பண பரிவர்த்தனையில் தவறுதலாக மாற்றி பணம் அனுப்புதல், நம்முடைய ஆதாரை  நமக்கே தெரியாமல் பயன்படுத்தி சிம் கார்டு பெறுதல் மற்றும் புகைப்படங்களை தவறுதலாக பயன்படுத்துதல் போன்ற பல குற்றங்களை தடுக்க பதிவு செய்ய வேண்டிய செயலிகள் குறித்து முழு விளக்கமளித்தார்.

பெரியார் துவக்கப்பள்ளியின் தாளாளர் ஞா. ஆரோக்கியராஜ் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் அ. ஜெசிமா பேகம்  நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *