கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு ‘‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ சிறப்புக் கட்டுரை!

viduthalai
2 Min Read

சென்னை, மே 28– கல்விக்கான நிதியை ஒதுக்கீடு செய்வதில் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதை ‘‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ சிறப்புக் கட்டுரை அம்பலப்படுத்தி உள்ளது.

குறைக்கப்பட்ட நிதி

மாநிலங்களுக்கு நிதி அளிக்கும் ஒன்றிய அரசின்சமக்ர சிக்ஷா திட்டம் குறித்து கட்டுரை ஒன்றை ‘‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’’வெளியிட்டுள்ளது. அதில், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய நிதி ஒதுக்கீடு 2024–2025 ஆம் ஆண்டில் 4ஆயிரத்து 150 கோடி ரூபாயாக இருந்ததாகவும் நடப்பு நிதியாண்டில் இது 2ஆயிரத்து 734 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2024–2025 நிதியாண்டில் 4ஆயிரத்து 579 கோடி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரியிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் 3 ஆயிரத்து 104 கோடிரூபாயாக தனது கோரிக்கையை தமிழ்நாடு அரசுகுறைத்துக் கொண்டதாகவும், ஒன்றியஅரசு நிதியுதவி அளிக்கும் இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த அய்ந்து ஆண்டுகளில், நடப்பாண்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி மிகக் குறைவு என்றும், இத்திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் நிதியை செலவிடுவதாகவும் அக்கட்டுரையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் தரவுகளின்படி, பீகார், டில்லி, கருநாடகா, கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு நடப்பு நிதியாண்டில் சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதிஅதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு, தெலங்கானா, அரியானா, ஜார்கண்ட், உத்தரகண்ட், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான நிதி குறைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024–2025 ஆம்ஆண்டிற்கான சமக்ர சிக்ஷா நிதியில் ஒன்றிய அரசின் பங்களிப்பு முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடி வருவதாகவும், இத்திட்டத்திற்கான நிலுவைத்தொகையாக உள்ள 2 ஆயிரத்து 152 கோடி ரூபாயை விடு விக்க உத்தரவிடக்கோ ரி ஒன்றிய அரசுக்கு எதிராகமாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதையும் இக்கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கடந்த24.5.2025 அன்று டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சமக்ரசிக்ஷா திட்டத்திற்கான 2ஆயிரத்து 152 கோடி ரூபாயை நிலுவைத் தொகையையும், நடப்பாண்டு அளிக்க வேண்டிய 2 ஆரியத்து 734 கோடி ரூபாயையும் விடுவிக்க வேண்டும் எனக் கோரியதாயவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கல்விக்கான நிதியை ஒதுக்கீடு செய்வதில் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதால், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு அளிக்கவேண்டிய கட்டணத்தை செலுத்துவதில் மாநில அரசுக்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *