கோவை, மே 27– கோவை அருகே வெள்ளியங்கிரி மலையில் 2 பக்தர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மேலும் தொடர் மழை காரணமாக பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டு உள்ளது
வெள்ளியங்கிரி மலை
கோவை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி கோவில் உள்ளது. இந்த கோவிலை ஒட்டிவெள்ளியங்கிரி மலை உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு இருந்ததால் தினமும் ஏராளமான பக்தர்கள் மலையேறி வந்தனர்.
பெண் உயிரிழப்பு
இந்த நிலையில் காரைக்கால் பகுதியை சேர்ந்த கவுசல்யா (வயது 45) என்பவர் 25.5.2025 அன்று காலை வெள்ளியங்கிரி மலைக்கு சென்றார்.
பின்னர் அவர் 7ஆவது மலைக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு திரும்பினார்.
7ஆவது மலையில் உள்ள ஆண்டிசுனை அருகே வந்தபோது திடீரென்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் வருவது போன்று இருந்தது.
உடனே அவர் அந்த சுனை அருகே படுத்துக் கொண்டார். இதையடுத்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் 7ஆவது மலைக்கு சென்று பார்த்தபோது கவுசல்யா உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை டோலி கட்டி அடிவாரத்துக்கு எடுத்து வந்தனர்.
வாலிபர் பலி
இதுபோன்று திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (23). இவர் தனது நண்பர்களுடன் கோவை வந்தார். பின்னர் வெள்ளியங்கிரி மலை ஏறினார். வழிபாடு செய்துவிட்டு நண்பர்களுடன் கீழே இறங்கினார்.
5ஆவது மலைக்கு வந்தபோது திடீரென்று செல்வகுமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் மயங்கி கீழே விழுந்தார்.
இதுகுறித்து வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் வந்து பார்த்தபோது செல்வகுமார் உயிரிழந்தது தெரியவந்தது.
மலையேற தடை
இதற்கிடையே கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டு உள்ளது.