புரட்சியாளர் ஹோசிமின் (19.05.1890 – 02.09.1969)

Viduthalai
6 Min Read

2024ஆம் ஆண்டில் வியட்நாம் நாட்டின் பல மாநிலங்களுக்கு எனது நண்பர்களுடன் பயணம் மேற்கொண்டேன்.

எங்களது பயணம் ஹோசிமின் நகரிலிருந்து தொடங்கியது.

ஒடிந்து போகும் அளவிற்கு ஒல்லியான உடலமைப்பைப் பெற்ற  ஹோசிமின் நடத்திய புரட்சியை புரிந்து கொள்வதற்கு இந்தப் பயணம்  பெரிதும் உதவியது.

இந்த பயணம் பற்றிய கட்டுரையை புதிய சிந்தனையாளன் மாத ஏட்டில்   எழுதினேன்.

எனக்கு வியப்பை தரும் மற்றொரு  செய்தி.

பெரியாரும்,  அறிஞர் அண்ணாவும்  உலகில் எங்கெங்கெல்லாம்  புரட்சிகள் தோன்றியதோ அவற்றின் அடிப்படை கூறுகளை  நூல்கள் வழியாகவும், உரைகள் வழியாகவும், கட்டுரைகள் வழியாகவும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அளித்துள்ளனர் என்பதேயாகும்.

திராவிட இயக்கம் பொதுவுடைமை நெறியை அணைத்து, இணைத்து போற்றியது. போற்றி வருகிறது என்பதற்கு இத்தகைய தரவுகள் சான்றுபகிர்கின்றன.

1976 ஆம் ஆண்டில் நெருக்கடி நிலை காலத்தில் வியட்நாம் புரட்சிப் பற்றிய நூல்களைப் படிக்க  வேண்டும் என்று கலைஞர் விரும்பினார்.

கன்னிமாரா நூலகத்தில் இருந்து சில நூல்களைப்பெற்று கலைஞரிடம் கொடுத்தேன்.

விளைவு என்ன தெரியுமா?

தொடர்ந்து வியட்நாமின் வீரம் செறிந்த களங்களை பற்றி உடன்பிறப்பு மடல்களாக கலைஞர் எழுதினார்.

கடுமையான, கொடுமையான ஊடகத் தணிக்கை கத்திரிக்கோல் பாயவில்லை.

கலைஞர் கைவண்ணத்தில் வியட்நாம் புரட்சிப்பற்றிய கருத்துகள் இலக்கியமாகப் பூத்தன.

பொதுவுடைமை சிற்பி கார்ல் மார்க்சின் சிலை கன்னிமாரா நூலகத்தில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் திராவிடச் செம்மல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் அறிவிப்பு என்பதும் திராவிட இயக்கம் பொதுவுடைமை இயக்கத்தின் உறவு நீட்சி தானே!

அறிஞர் அண்ணா ஹோம் லேண்ட் ஏட்டில் வியட்நாம் பற்றி எழுதிய கட்டுரையை 2010 ஆம் ஆண்டில் படித்தேன். ( Home Land, dated 16-2-1958)

வியட்நாம் நாட்டில் பயணம் செய்தபோது எல்லா சுற்றுலா தலங்களிலும், நீக்க மற,நிறைந்து  நிலைப் பெற்றிருக்கும் புத்தர் சிலைகளை  கண்ட போது அறிஞர் அண்ணாவின் சிந்தனையை தூண்டும் கட்டுரையில்  காணப்பட்ட துல்லியமான தொலைநோக்கு பார்வையை எண்ணி வியந்து போனேன்.

ஹோசிமின் பற்றி அண்ணாவின்  கணிப்பு காலம் கடந்து உயர்ந்து நிற்கிறதல்லவா?

பொதுவுடைமை வியட்நாம் மலர்ந்தபோது அண்ணா 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் நாளில் மறைந்துவிட்டார் .

அறிஞர் அண்ணாவின் அரிய ஆங்கில கருத்தை காண்போமா!

“ஹோசிமினின் பகைவர்கள்

‘சிகப்பு சர்வாதிகாரி’ என்றும்

‘கம்யூனிஸ்ட் கைக் கூலி என்றும்,

அவருடைய நண்பர்கள் ‘மக்களின் தந்தை’ என்றும், ஆசியாவின் ‘மிகச் சிறந்த புரட்சியாளர் ‘ என்றும் குறிப்பிடுகின்றனர்.

நடுநிலை நோக்கர்கள் எளிமையான, நேர்மையான மனிதர் என்றும்

நுட்பமான அரசியல் தீர்வாளர் என்றும் கூறுகின்றனர்.

பிரான்சு நாட்டைச் சார்ந்த உயர் அலுவலர் ஜுயன் செயின்ட்டென்சி அவருடன்  அரசியல் உடன்பாடு காண ஒரு ஆண்டு உரையாடல் மேற்கொண்டவர்.

அவர் குறிப்பிடுகிறார்,  “முதன்மையான ஆசியத்தலைவர், அளவிட முடியாத ஆற்றல் படைத்த மாபெரும் அறிவாளர்.

தனது பாதுகாப்பு, வசதி பற்றி சிறிதளவும் கவலைப்படாத ஒரு துறவி போன்றவர்.”

ஹோசிமின் பொதுவுடைமை இயக்கத்திற்கு எவ்வாறு ஈர்க்கப்பட்டார் என்பதையும் அறிஞர் அண்ணா விளக்கியுள்ளார்.

“பவுத்தம் வியட்நாமிற்கு கி.பி.முதல் நூற்றாண்டில் சென்றது.

இன்றும் இலக்கியத்தின் ஊற்றாகாவும், மக்களை ஈர்க்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளன.

19 ஆம் நூற்றாண்டில் தின் (Dinh) என்கிற பெண் போராளியை பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் படையினர் கைது செய்து சிறையில் தூக்கிலிட்டனர்.

இந்த பெண் போராளி இறப்பதற்கு முன், சிறையின் சுவரில் தனது குருதியால் ஒரு கருத்தை பதித்தார்.

பெருமைக்குரிய புத்தரே!

நான் மீண்டும் பிறப்பதற்கு அனுமதியுங்கள்.

அப்போது எனக்கு ஆயிரம் கைகளையும், அந்த கைகளில் ஆயிரம் துப்பாக்கிகளையும் அளிக்குமாறு உங்களை வேண்டுகிறேன்.

இந்த ஈர்ப்பு மிக்க சொற்கள் தான் ஹோசிமின் மனதில் ஆழப்பதிந்து, விடுதலைக்கான வீரம் செறிந்த போரில் வழிகாட்டு உணர்வாக அமைந்தது என்று பலர்  சுட்டுகின்றனர்.

வியட்நாம் மக்களிடம் புரட்சி உணர்வையும் ஆற்றலையும் தூண்டுவதற்கு சில சிறப்பான முழக்கங்களை முன்வைத்தார்.

“நீங்கள் எங்களில் பத்து பேரைக் கொல்லலாம். கொன்ற ஒவ்வொருவருக்காகவும் நாங்கள் உங்களைக் கொன்று குவிப்போம்.

ஆனால் இத்தகைய கடினமான சூழலிலும் நீங்கள் தோற்பீர்கள்.

நாங்கள் வெற்றி பெறுவோம்.

சிறைக் கதவுகள் திறக்கும் போது  சுதந்திரப் பறவைகள் சிறகடித்துப் பறக்கும்.

சுதந்திரமும், விடுதலையும் தான்  உலகில் எல்லாவற்றையும் விட மதிப்பு மிக்கதாகும்.

நீங்கள் எப்படி உங்களை அன்புடன் விரும்புகிறீர்களோ, அதே போன்று  மற்ற மனிதர்களையும் விரும்புங்கள்.

ஹோசிமின் பார்வையில் முழக்கங்கள் வெறும் சொற்கள் அல்ல. அவைகள் உண்மை யானவை.

ஏற்ற கொள்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டும் நெறிகள்.

இந்த முழக்கங்கள் மக்கள் மனதில் உடனடியாகவும், ஆழ மாகவும் பதிந்து எதிரொலித்தது.

ஹோசிமினின் அடக்கமும், எளிமையும், அமைதியான குணமும் பலரை வியப்பில் ஆழ்த்தியது.

அவரை ஆண்டு முழுவதும் எளிய காக்கிச்சட்டை உடையுடன் காணமுடியும்.

ஹோசிமின் புதுடில்லிக்கு வந்தபோது மிகச் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

அவருடைய எளிமையைக் கடைப்பிடிக்கும் பண்பு  – ஹோசிமினுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில்,  கருஞ்சிவப்பு தங்க நாற்காலியில் உட்கார மறுத்தது வெளிப்படுத்தியது.

எளிய உடையுடன் ஒரு நாளில் அவர் 16 முதல் 18 மணி நேரம் உழைக்கிறார்.

வியட்நாமின் குடியரசுத் தலைவர் என்கிற முறையில் தன்னைத் தங்க கூண்டில் பூட்டிக்கொள்ள விரும்பவில்லை.

சிக்கல் நிறைந்த கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிக்கக் கூடிய ஆற்றல் ஹோசிமின் உள்ளத்தில் இயற்கையாக வெளிப்படுகிறது.

அவர் எடுத்து இயம்பும் கருத்துக்கள் வெற்று முழக்கமும் அல்ல.

ஒரு புள்ளியில் முடிந்து விடுவதும் அல்ல.

எளிமையானது, வலிமையானது, ஓவ்வொருவராலும் இலகுவாக புரிந்துகொள்ளக்கூடியது.

வியட்நாம் இன்று ஆசிய நாடுகளிலேயே விரைந்து வளரும் நாடு. பல லட்சக்கணக்கான வெளிநாட்டு மக்கள் சுற்றுலாவிற்கு வருகிறார்கள்.

ஒரு விழுக்காடு பண வீக்கம் தான்  உள்ளது.

மத நம்பிக்கைகள் அற்றவர்கள் மக்கள் தொகையில் 94 விழுக்காட்டினர்.

மதம்  சமூகத்தில் ஆதிக்கம் செலுத்த முடியாது.

சமூகத்தில் அமைதி !

மக்களிடத்தில் மகிழ்ச்சி!!

பொருளாதாரம் வளர்கிறது.

பொருளாதார வளர்ச்சி மானுட முன்னேற்றத்தில் முடிகிறது.

அய்க்கிய நாடு மன்றத்தின் மானுட முன்னேற்றக் குறியீடுகளில் (UNDP) 2024 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் படி 193 உலக நாடுகளின் பட்டியலில் வியட்நாம் 93ஆவது இடத்தில் உள்ளது.

2022 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை  மானுட முன்னேற்றக் குறியீடுகளில் 14 சதவிகிதத்தில் ( இரண்டு ஆண்டுகளில்) உயர்ந்த வளர்ச்சி குறியீடுகளைப் பெற்று , உயர்ந்த மானுட முன்னேற்றக் குறியீடுகளைபெற்ற நாடுகளின் தொகுப்பில் உள்ளது.

எது வளர்ச்சி? எப்படிப்பட்ட வளர்ச்சி தேவை என்ற அடிப்படையை கூட உணராமல் ஸநாதனம் பேசி மக்களை இருளில் வீழ்த்தி, மக்களை மத அடிப்படையில் பிளவு ஏற்படுத்தி,பொருளாதார சரிவை சந்திப்பதினால் இந்தியா உலக நாடுகளின் பட்டியலில் – மானுட முன்னேற்றக் குறியீடுகளில் 193 நாடுகளில் 130ஆம் இடத்தில் உள்ளது.

நாட்டிற்கு தேவை புரட்டுகள் அல்ல!

பொய்கள் அல்ல!!

புரட்சி தான் என்பதை புரிய வைத்து அமெரிக்காவை ஓட ஓட விரட்டிய வியட்நாம் உயர்ந்து வளர்கிறது.

அமெரிக்க குடியரசுத் தலைவர் டிரம்ப்  இந்திய – பாகிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது நான் தான் என்று பல முறை கூறிவிட்டார்.

அமெரிக்க மேலாதிக்கத்தை  எதிர்க்க துணிவின்றி இந்திய பிரதமர் நரேந்திர மோடி  மவுனம் காக்கிறார்.

வியட்நாம் விடுதலைப் போராளி ஹோசிமின் பிறந்த நாளில்   (19.05.1890) அவரது ஆளுமையை அவர் கையாண்ட முறைமைகளை நினைவு கூர்வோம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *