நடைபாதைக் கோயில்கள் அகற்றப்படுமா?

2 Min Read

நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு, முறையான நடைபாதைகள் போதிய அளவு இல்லாதது குறித்து உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமர்வு கூறுகையில், ‘நடைபாதைகள் இல்லாவிட்டால் பாதசாரிகள் சாலைகளில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் அவா்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது.

குடிமக்களுக்கு முறையான நடை பாதைகள் இருப்பது அவசியம். மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்தக் கூடிய வகையில் நடைபாதைகள் இருக்க வேண்டும். அத்துடன் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளும் கட்டாயம் அகற்றப்பட வேண்டும். நடைபாதைகளைப் பாதசாரிகள் பயன்படுத்தும் உரிமையை அரசமைப்புச் சட்டப் பிரிவு 21 உறுதி செய்துள்ளது’ என்று உச்சநீதிமன்றம் அதிகார பூா்வமாகத் தெரிவித்துள்ளது.

மேலும் ‘பாதசாரிகள் நடந்து செல்ல முறையாக நடைபாதைகள் இருப்பதை உறுதி செய்வதற்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும்.

பாதசாரிகளின் உரிமைகளைப் பாது காப்பதற்கான வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசும் 2 மாதங்களில் வெளியிட வேண்டும். தேசிய சாலை பாதுகாப்பு வாரியத்தை 6 மாதங்களில் ஒன்றிய அரசு அமைக்க வேண்டும். அதற்குப் பிறகு அந்த வாரியத்தை அமைக்க கூடுதல் அவகாசம் அளிக்கப்படாது’ என்று தெரிவித்தது.

நடைபாதைகளின் ஆக்கிரமிப்புகள் என்று வருகிறபோது அதில் முதலிடத்தில் இடம் பிடிப்பது கோயில்களே!

இப்பொழுது நடைபாதைகள் குறித்து சிறப்பான ஆணையை வழங்கிய இதே உச்சநீதிமன்றம்தான் 2010 செப்டம்பரில் முக்கியமானதொரு தீர்ப்பையும் வழங்கியது.

‘‘நடை பாதைகளை ஆக்கிரமிக்கும் கோயில்களை அகற்ற வேண்டும்; அப்படி அகற்றிய கோயில்கள் பற்றிய விவரத்தை மாநில தலைமைச் செயலாளர்கள் உச்சநீதிமன்றத்தில் நேரில் தெரிவிக்க வேண்டும்’’ என்றும் உத்தரவிட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் 77450 நடைபாதைக் கோயில்கள் ஆக்கிரமித்துள்ளன. அவை அகற்றப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் நடைபாதைக் கோயில்கள் கம்பீரமாக இருக்கத் தான் செய்கின்றன.

வேலூர் நாராயணன் மேயராக இருந்த போது சென்னையில் ஆக்கிரமித்து இருந்த நடைபாதைக் கோயில்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

ப.உ. சண்முகம் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதும் அவ்வாறு நடைபாதைக் கோயில்கள் அகற்றப்பட்டன.

நடைபாதைக் கோயில்களில் உண்டியல்கள் உண்டு – அதுதான் முக்கியம்! அந்த உண்டியல் பணம் யாருக்குப் போய்ச் சேருகிறது என்தைக் காவல்துறை விசாரணை மேற்கொண்டால், அதன் பின்னணியில் இருக்கும் சமூக விரோதிகள் யார் யார் என்பது விளங்காமற் போகாது.

சட்ட விரோதமானதும், மக்களின் நடை பாதையை ஆக்கிரமிப்பதுமான இந்த நடைபாதைக் கோயில்களை அகற்ற வேண்டியது – மக்கள் நலன் அடிப்படையில் மிகவும் முக்கியமானதாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *