சென்னை, மே 20– கடந்த 10 ஆண்டுகளில் 1.36 சதவீதமாக இருந்த வேளாண் வளர்ச்சி தி.மு.க. ஆட்சியில் 5.66 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது என்று தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற முதலாண்டிலேயே வேளாண்மைக்கு தனி முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மைத் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து 5 வேளாண் பட்ஜெட்டுகள் அளிக்கப்பட்டு மொத்தம் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 76கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வேளாண் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டுவருகிறது.
முந்தைய ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளில் சராசரியாக 1.36 சதவீதமாக இருந்த வேளாண் வளர்ச்சி, 2021முதல் 2024 வரை சராசரியாக 5.66 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
தி.மு.க. அரசின் வேளாண் வளர்ச்சித்திட்டங்களால் கேழ்வரகு, கொய்யா உற்பத்தித்திறனில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம். மக்காச்சோளம், கரும்பு, புளி, மரவள்ளிக்கிழங்கு, மல்லிகை, எண்ணெய் வித்துகள் உற்பத்தித்திறனில் இந்தியாவில் தமிழ்நாடு இரண் டாம் இடம்.
வேர்க்கடலை, தென்னை உற்பத்தித்திறனில் இந்தியாவில் தமிழ்நாடு மூன்றாம் இடம் என்று சாதனை படைத்துள்ளது.
தரிசு நிலத்தில் சாகுபடி
2020-2021இல் இருந்த பாசனம் பெற்ற நிலப்பரப்பு 36.07 லட்சம் எக்டேர் என்பது, 2023-2024இல் 38.33 லட்சம் எக்டேர் என அதிகரித்து உணவுப்பொருள் உற்பத்தியில் சாதனைகள் நிகழ்ந்தன.
5,427 கி.மீ. நீளத்திற்கு சி, டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு 2 லட்சத்து 10 ஆயிரம் விவசாயிகள் பயன் அடைந்து உள்ளனர். மேலும் 8,540 சிறு பாசனக் குளங்கள் தூர்வாரப்பட்டு, 2,382 புதிய பண்ணைக் குட்டைகளும், 2,474 ஆழ்துளை குழாய்க்கிணறுகளும் ஏற்படுத்தப்பட்டன.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 10,187 கிராம ஊராட்சிகளில், ரூ.786.86 கோடியில் 47,286 ஏக்கர் தரிசு நிலங்கள் மீள சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டன. 51.13 லட்சம் பயனாளிகள் ஆகி இருக்கிறார்கள்.
வாடகை எந்திர மய்யங்கள்
213 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் தேசிய வேளாண் சந்தை தளத்துடன் இணைக்கப்பட்டு, ரூ.6,636 கோடி மதிப்பிலான 22.71 லட்சம் டன் வர்த்தகம் நடைபெற்று 19 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
வேளாண்துறை எந்திரமயமாக்குதல் திட்டப்படி ரூ.499.45 கோடியில் 62,820 விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்களும், கருவிகளும் மானியங்களுடன் வழங்கப்பட்டு உள்ளன.
ரூ.96.56 கோடி மதிப்புடைய 1,205 வேளாண் எந்திரவாடகை மய்யங்கள் ஏற்படுத்தப்பட்டு சிறு விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் எந்திரங்கள் வழங்கப்படுகின்றன.
1,652 புதிய வேளாண் எந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு இ-வாடகை சேவை மய்யங்கள் மூலம் 69 ஆயிரம் விவசாயிகள் பயன் அடைந்து உள்ளனர். 27 மாவட்டங்களில் 917 ஏரிகள் ரூ.1,212 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டன.
முந்தைய ஆட்சிக்காலத்தில் ஓராண்டில் அதாவது 2018-2019இல் 8,362 டன் பால் உற்பத்தி செய்யப்பட்டு இருந்த நிலையில், தி.மு.க. ஆட்சியின் திட்டங்களால் 2023-2024ஆம் ஆண்டில் பால் உற்பத்தி, 10,808 டன் என அதிகரித்து சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆட்சியில் 2018-2019இல் உற்பத்தியான 1,884.22 கோடி முட்டைகளை விட 2023-2024ஆம் ஆணடில் 2233.25 கோடி முட்டைகள், ஏறத்தாழ 350 கோடி முட்டைகள் கூடுதலாக உற்பத்தியாயின.
மீனவர்களின் நலன்
தமிழ்நாட்டு மீனவர்கள் கடுமையாக உழைத்து கடல் நடுவே சென்று மீன்பிடித்து வந்து மக்களுக்கு வழங்குகிறார்கள். மீனவர்களுக்கு உதவிடும் நோக்கில் தி.மு.க. அரசு ரூ.1,428 கோடி மதிப்பில் 72 மீன் இறங்கு தளங்களைப் புதிதாக ஏற்படுத்தி உள்ளது.
அத்துடன் மீன் பிடித் தொழில் சிறக்க தரங்கம் பாடி, ராமேசுவரம், திருவொற்றியூர் குப்பம் ஆகிய பகுதிகளில் மீன்பிடித் தொழில்கள் சிறக்கவும் பல திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண்மை, கால்நடைகள் வளர்ப்பு, மீனவர் நலன் என ஒவ்வொரு துறையையும், தாய் தன் குழந்தைகளைப் பேணி வருவதுபோல் வளர்த்துள்ளார்.
அதனால் தான் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் சிறந்து, ஒட்டு மொத்தமான வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்த மாநிலம் எனும் பாராட்டுகளையும், புகழையும் குவித்து வருகிறது. என்றும், எதிலும் தமிழ்நாடு முதலிடமே எனும் முழக்கம் எங்கும் எதிரொலிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.