உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில்.
வழக்குரைஞர்
அ. அருள்மொழி
பிரச்சாரச் செயலாளர்,
திராவிடர் கழகம்
பாடம் 8
சொலல்வல்லன் – சோர்விலன்
நேரம் அதிகமாகிறது என்ற குறிப்பினை ஆசிரியருக்கு எழுதிக் கொடுத்தபோது ஆசிரியர் ஒருமணிநேரம் பேசி விட்டார். 45 நிமிடங்கள் பேசுவதுதான் அவரது உடல்நலனுக்கு உகந்தது. கால்மணிநேரம் அதிகமாகப் பேசி விட்டார். ஆனால் களைப்பில்லை. குரலில் சோர்வில்லை. பார்வையாளர்களின் ஆர்வமோ குறையவில்லை. எனவே நாங்களும் சற்று தயங்கிதான் எழுதிக் கொடுத்தோம். ஆனால் ஆசிரியர் அவர்களோ சிரித்துக்கொண்டே ….. நேரமானால் பரவாயில்லை.. இந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்காது .. என்று சொன்னவுடன் அரங்கில் இருந்த பார்வையாளர்களும் மகிழ்ந்து ஆரவாரத்துடன் வரவேற்றனர். அதன்பிறகு மேலும் பல்வேறு அரிய செய்திகளை எடுத்துக் காட்டி உரையாற்றினார். திராவிடம் என்பது மானுடப் பரப்பு : திராவிடம் என்பது பகுத்தறிவு. உடலுக்கு நோய் ஏற்பட்டால் மருத்துவரிடம் கேட்டு மருந்து வாங்கும் போது மருந்தின் Expiry Date பார்க்கிறோம். காலத்தால் Expiry ஆன முடிந்துபோன கருத்துகளை மாற்றிக் கொள்ள வேண்டும் ; நாம் ஹிந்தி உட்பட எந்த மொழிக்கும் எதிரிகள் இல்லை. ஆனால் சமஸ்கிருதம் தேவபாஷை, தமிழ் நீஷபாஷை என்றும் தமிழில் பூஜை செய்தால் தீட்டாகிவிடும் என்ற இழிவை எதிர்த்தது திராவிட தத்துவம்தான் ; தமிழை செம்மொழி என்று அறிவிக்க 1918 ஆம் ஆண்டில் நீதிக்கட்சி நடத்திய தஞ்சை திருச்சி பார்ப்பனரல்லாதார் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . பின்னர் கலைஞர் அவர்கள் முயற்சியால் 2004 ஆம் ஆண்டு தமிழ் செம்மொழி என அறிவிக்கப்பட்டது , அதன்பிறகே சமஸ்கிருதம் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது என்பதையும் பண்பாட்டு அடிப்படையில் வள்ளுவர் வாழ்க்கைத் துணைநலம் என்றார். வடமொழி கன்னிகாதானம் என்றது. நாம் பகுத்தறிவுப் பார்வையோடு காலத்திற்கேற்ப கணவன் மனைவி என்ற சொற்களை மாற்றி இணையர் என்ற சொல்லை உருவாக்கினோம் என்று விளக்கினார். நம்மை பிரிக்கும் சமயம் ஜாதி சடங்கு பொருளாதாரம் அரசியல் அனைத்தையும் தாண்டி தமிழால் ஒன்றுபடுவோம் என்ற புரட்சிக் கவிஞரின் கவிதையை எடுத்துரைத்து வந்திருந்த தோழர்களின் வெற்றிகரமான வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரையும் வாழ்த்தும் வழங்கி தன்னுரையை நிறைவு செய்தார்.
ஆசிரியர் உரைக்குப்பின் தோழர் பார்த்திபன் ஆசிரியரின் உரையை ‘தொண்டூறும் தொண்ணூறு’ என்று குறிப்பிட்டு கூட்ட ஏற்பாட்டுச் செலவிற்காக துண்டேந்தி வளர்ந்த இயக்கம் இன்று துண்டு ஏந்துவதற்குப் பதிலாக பணம் செலுத்தும் கருவியை கையிலேந்தி வருகிறோம் என்று கூறியதும் அவையில் சிரிப்பொலி எழுந்தது. ஆசிரியர் உரையில் குறிப்பிட்ட நூல்கள் விற்பனைக்கு உள்ளன வாங்கிப் பயன்பெறுங்கள் என்றும் அறிவித்தார்.
ஆசிரியருடைய பிரிஸ்பேன் உரை ஒரு வரலாற்றுத் தொகுப்பாக அமைந்தது. கேட்பவர்களுக்கு சில நிமிடங்கள் கூட கவனம் சிதறாதபடி சங்கிலித் தொடர்போல செய்திகள். ஒவ்வொருவருக்கும் கற்றுக்கொள்ளவும் பற்றிக்கொள்ளவும் ஏராளமான பாடங்கள் கொண்ட புத்தகம் போன்ற உரை. பெண்ணியச் சிந்தனைகள், மொழிக்கொள்கை, காலத்திற்கேற்ற சிந்தனை என்று பரந்து விரிந்த கருத்துப் பகிர்வாக இருந்தது. Equality இல் இருந்து Empowerment நோக்கி , பெண்கள் அதிகாரங்களில் பங்கெடுக்கும்போதுதான் ஆண் – பெண் சமத்துவம் என்பது நடைமுறையில் வரும், அதனைத் தொடங்கியது திராவிட ஆட்சியான நீதிக்கட்சிதான்: அவர்கள்தான் 1924 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கினார்கள்; பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று தந்தை பெரியார் பேசியது குறியது மேனாள் இந்திய அமைச்சர் சந்திரசேகரன் அவர்கள் தந்தை பெரியாருடன் நடத்திய உரையாடல்; அய்யாவின் நன்றி எதிர்பார்க்காத தொண்டின் சிறப்பு, இவையும் அந்த உரையில் இருந்தன. தனது 90 ஆவது வயதில் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டு மீண்டும் பிரச்சாரம் செய்ததையும் உருக்கமாகக் குறிப்பிட்டார். மருத்துவமனைகள் இருந்தாலும் நோய்கள் புதிதாக வந்து கொண்டே இருக்கின்றன.எனவே சிகிச்சை என்பதைவிட தற்காப்பு (Prevention) என்பது சிறந்தது. அதுதான் தந்தை பெரியாரின் பணி. அந்தப்பணியைத்தான் பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம் செய்து வருகிறது என்றும் “வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் “ என்ற குறளின் மேற்கோளை எடுத்துரைத்தார். இன்னும் நிறைய செய்திகள் உள்ளன..
ஆசிரியர் உரையை ஏற்ெகனவே கேட்டவர்கள் கூட மீண்டும் கேட்டால் அதன் சிறப்பு விளங்கும்.
சிறப்பு வாய்ந்த பெருமக்கள் பலர் பார்வையாளர்களாக வந்திருந்தனர். ஆசிரியர் உரையின் இடையில் உங்களில் தந்தை பெரியாரை பார்த்தவர்கள் எத்தனை பேர் ? என்று கேட்டபோது ஒரே ஒருவர் கையை உயர்த்தினார். அவர் மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களின் மகன் மருத்துவர் கண்ணன்.
நிகழ்வில் ஆசிரியர் அவர்களுக்கு பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் சார்பாக தோழர் சத்யா அவர்களும் தோழர் முகுந்தராஜ் தோழர் பார்த்திபன் ஆகியோர் நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள். குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் சார்பாக தோழர் கார்த்திக் ஆசிரியருக்கும் எனக்கும் சால்வை அணிவித்தார். கவிஞர் இரவிச்சந்திரனும் அவரது இணையர் சாரதா அம்மையாரும் புத்தகங்களைப் பரிசளித்தனர்.
இறுதியாக தோழர் கார்த்திக் குமார் அழகிய கவிதையில் ஆசிரியரைப் பாராட்டி எனக்கும் பாராட்டுகள் கூறி அனைவரையும் ஈர்க்கும்படியாக நன்றி உரை கூறினார்.
பிரிஸ்பேன் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த தோழர்கள் முகுந்தராஜ், முனைவர் பிரதீப், பார்த்திபன், கார்த்திகேயன் நாராயணன் ஆகியோருக்கு ஆசிரியர் சால்வை அணிவித்துப் பாராட்டினார். ஆசிரியருக்கு வழங்கப்பட்ட நினைவுப்பரிசுகளில் முக்கியமானது ஆஸ்திரேலிய தொல்குடி மக்களின் ஆயுதமான ‘ பூமராங் ‘ ஆகும். ஒரு முதுகு வளைந்தது போல மரத்தால் செய்யப்பட்ட இந்தப் பொருள் குறிபார்த்து எறிந்தால் இலக்கைத் தாக்கிவிட்டு எறிந்தவர் கைக்கே வந்து சேரும் என்று சொல்வார்கள். ஏன் இந்தப் பரிசு முக்கியமானது என்றால் ஆசிரியர் அவர்கள் ஆஸ்திரேலியாவில் பார்க்க வேண்டும் என்று விரும்பியவை இரண்டுதான். ஒன்று பூமராங். மற்றொன்று கங்காரு. பூமராங் பிரிஸ்பேன் நிகழ்வில் வழங்கப்பட்டது. கங்காருவை பார்க்கும் வாய்ப்பு மூன்றாம்நாள் அமைந்தது. இப்படியாக பிரிஸ்பேன் கூட்டம் மிகுந்த மகிழ்ச்சியுடன் நிறைவுற்றது.
சிட்னியைப் போன்று பிரிஸ்பேன் நிகழ்ச்சி முடிந்தபிறகும் தோழர்கள் மும்மொழித் திணிப்பை எதிர்த்து முழக்கம் எழுப்பினார்கள். அந்நிகழ்ச்சி சன்நியூஸ் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
மெல்ேபர்னில் இருந்து வந்து, பிரிஸ்பேன் விமானநிலையத்தில் ஆசிரியரை வரவேற்று, நிகழ்விலும் கலந்து கொண்ட தோழர் ஒருவரின் பெயரைக் குறிப்பிடத் தவறிவிட்டேன். அவர்பெயர் நந்தகுமார். ஆனால் ஆசிரியர் அவருக்கு வேறு பெயர் சூட்டிவிட்டார் “குவிஸ் மாஸ்டர்”. அதற்கான காரணம் மிகச் சுவையானது.
(தொடரும்)