இரத்த சோகை என்றால் என்ன?
அது ஏன் வருகிறது?
அது ஏன் வருகிறது?
பொதுவாக சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் நிலைதான் இரத்தசோகை என்று அழைக்கப்படுகிறது.
பொதுவாக ஹீமோகுளோபின் ஆண்களுக்கு 100 மில்லி இரத்தத்தில் 14.5 முதல் 15.5 கிராம்களும், பெண்களுக்கு 100 மில்லி இரத்தத்தில் 13.4 முதல் 14.5 கிராம்களும் இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு 6 மாதம் முதல் 5 வயது வரை 11 கிராமுக்கு குறைவாகவும், 6 வயது முதல் 14 வயது வரை 12 கிராமுக்கு குறைவாகவும், பெரியவர்களான ஆண்களுக்கு 13 கிராமுக்கு குறைவாகவும், பெண்களுக்கு 12 கிராமுக்கு குறைவாகவும், கர்ப்பிணிகளுக்கு 11 கிராமுக்கு குறைவாகவும் இருந்தால் இரத்த சோகை ஏற்படும்.
இரத்தசோகை ஏற்படக் காரணம்
பெண்கள் மாதவிலக்கு காலங்களில் அதிக அளவு இரத்தப் போக்கினால் இரும்புச் சத்தை இழக்கிறார்கள். பேறு காலத்தின்போது இரத்தப் போக்கு ஏற்படுகிறது.
இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சேர்க்காமல் இருப்பதால் இரத்த சோகை ஏற்படுகிறது.
மலேரியா நோய்
மலேரியா நோயினால் அவதியுறுவதாலும், தேவைக்கு ஏற்ப உணவு உண்ணாததாலும், குடற்கொக்கிப் புழுக்கலால் பாதிக்கப்படுவதாலும் இரத்த சோகை ஏற்படுகிறது.
மூலநோய்
குடல்புண் காரணமாக வயிற்றிலிருந்து இரத்தம் வருவதாலும் மூல நோயினால் மூலத்தில் இருந்து இரத்தம் வருவதாலும் இரத்த சோகை ஏற்படுகிறது.
குழந்தைகளுக்கு பாதிப்பு
இரத்த சோகையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.
உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி குறைந்து படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். சக்தி குறைவாக இருப்பதால் விளையாட முடியாது.
பெரியவர்களுக்கு வேலை செய்ய இயலாமை ஏற்படும். எளிதில் சோர்வடைவார்கள். பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் பாதிப்பு ஏற்படும்.
கர்ப்பிணி பெண்கள்
கர்ப்பிணி பெண்களுக்கு எடை குறைவான குழந்தை அல்லது குறை மாத பிரசவம் ஏற்படும். கருச்சிதைவு ஏற்படும்.
குழந்தை பிறந்த உடன் பல பெண்கள் தங்கள் அழகு போய்விடக் கூடாது என்று கருதி குழந்தைகளுக்குத் தாய்ப்பால் அருந்தத் தராமல் புட்டிப் பாலினையே புகட்டுவார்கள். இதனால் இரும்புச் சத்துக் குறைவேற்பட்டு புட்டிப் பாலுக்கு அடிமை ஆக குழந்தை ஆகிவிடுவதுண்டு. இது போலவே ‘பாஸ்ட் புட்’ கலாச்சாரத்தினால் இரத்த சோகையையும் நாமே வரவழைத்துக் கொள்கிறோம்.
இரத்தச் சோகையின் அறிகுறி
இரத்தச் சோகையின் அறிகுறிகளாக ஆரம்பத்தில் சோர்வு, மூச்சு வாங்குதல். அன்றாடம் செய்யும் வேலைகளை செய்ய முடியாமை ஏற்படும்.
கடுமையான இரத்த சோகை அறிகுறிகளாக வேலை செய்யாத போதே மூச்சு வாங்கும். நகம், விரல்கள் வெளுத்துக் காணப்படும்.
கை, கால், முகத்தில் வீக்கம் ஏற்படும்.
இரத்தச் சோகையினைத் தவிர்க்க இரும்புச் சத்து வைட்டமின்கள் நிறைந்த சத்துணவு உணவுகளை சேர்த்துக் கொண்டாலே போதும். இரத்த சோகையினைத் தவிர்க்கலாம்.
கீரை வகைகள், பாகற்காய், கொத்தவரை, பீன்ஸ், சுண்டைக்காய், வாழைக்காய் போன்ற காய்களையும், சீதாப்பழம், மாதுளம்பழம், சப்போட்டா, உலர்ந்த திராட்சை, அன்னாசிப்பழம், தர்பூசணி, பேரிட்சை பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
தானியங்கள்
கம்பு, கொள்ளு, சாமை, சோயாபீன்ஸ், கேழ்வரகு, கோதுமை, பொட்டுக்கடலை, பட்டாணி போன்ற தானியங்களில் இரும்புச் சத்துகள் கிடைக்கும்.
பொட்டுக்கடலை கஞ்சி, கேழ்வரகு கஞ்சி, புலால் உணவுகளில் ஆட்டுக்கறி, முட்டை, இறால், ஈரல், மீன் ஆகியவற்றிலும் இரும்புச்சத்து உள்ளது.
வெல்லம், அதிரசம், கடலைமிட்டாய், பனங்கற்கண்டு கலந்த பால், கருப்பட்டி மற்றும் கேழ்வரகு மாவு, பொரி உருண்டை, பொட்டுக்கடலை பாயசம், பொரிவிளங்காய் உருண்டை போன்ற பிற உணவு வகைகளிலும் இரும்புச்சத்து கிடைக்கும்.
உணவு அருந்திய உடனோ, அல்லது ஒரு மணி நேரத்திற்குள்ளோ தேநீர், காபி அருந்துவது கூடாது. அது உடம்பில் இரும்புச்சத்து கிரகிக்கப்படுவதைக் குறைக்கும்.
இரத்த சோகையினைத் தவிர்க்க எளிய வழிகள்
இரத்தச் சோகையினைத் தவிர்க்க இரும்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
புரதச் சத்து நிறைந்த நிலக்கடலை போன்றவற்றை உட்கொள்ளுதல் வேண்டும்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எடை பார்த்து வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாவிட்டால் மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெற வேண்டும்.
உணவு சாப்பிடும் முன்பு கைகளை சோப்பு போட்டு தண்ணீர் விட்டு சுத்தமாகக் கழுவ வேண்டும்.
நகங்களை அடிக்கடி வெட்டி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
காலில் செருப்பு அணிவது அவசியம். ஏனென்றால், கால் மூலம் நுழையும் கண்ணுக்குத் தெரியாத கொக்கிப் புழுக்கள் குடலில் இரத்தத்தை உறிஞ்சி இரத்த சோகையை உண்டாக்கும்.
சிறுநீர், மலம் கழிக்க சுகாதார கழிப்பறை வசதிகளைப் பயன்படுத்த வேண்டும். மலம் கழித்த பின் கை, கால்களை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்.
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதுதான் இரத்த சோகைக்கான காரணமாகும்.
ஹீமோகுளோபின் மட்டுமே தேவைப்படுபவர்கள் மேலே சொன்ன நல்ல காய்கறிகளையும், பழங்களையும், இரும்புச் சத்து நிறைந்த கம்பு, கேழ்வரகினையும், ஈஸ்டுள்ள உணவு வகைகளை சாப்பிட்டாலே போதும். ஹீமோகுளோபின் நமக்குக் கிடைத்துவிடும்.