பழனி, மே 19- பழனி முருகன் கோவிலுக்கு அன்றாடம் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடந்த 2 நாள்களுக்கு முன்பு பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அப்போது வெளிப்பிரகார பகுதியில் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் கிழிந்த காகிதங்கள் அதிகமாக இருந்தன.
இதனால் அந்த உண்டியலில் பணம் ஏதும் திருடு போகிறதா? என கோவில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, அந்த உண்டியல்களை கண்காணிக்க கோவில் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கோவில் அதிகாரிகள் மறைந்து நின்று கொடிக்கம்பத்து உண்டியலை நேற்று (18.5.2025) கண்காணித்தனர். அப்போது 35 வயதுடைய நபர், அங்கு வந்து உண்டியலின் துவாரத்தில் காகித அட்டையை வைத்துவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் பக்தர்கள் அங்கு வந்து உண்டியலில் பணம் செலுத்தினர்.
ஆனால், பணம் செலுத்தும் துவாரத்தில் காகித அட்டை வைத்ததால் உள்ளே செல்லாமல் உண்டியலின் மேற்புறத்தில் பணம் அப்படியே இருந்தது. தொடர்ந்து சிறிது நேரத்துக்கு பிறகு அங்கு வந்த நபர், உண்டியலில் இருந்து பணத்தை எடுத்தார். அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த கோவில் அதிகாரிகள் அந்த நபரை கையும், களவுமாக மடக்கி பிடித்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான மகேந்திரன் (வயது 37) என்பதும், கோவில் உண்டியலில் நூதன முறையில் பணத்தைத் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மகேந்திரனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.