கி.வீரமணி
20.12.1933 மாலை இரண்டு மணி சுமாருக்கு மூன்று சர்க்கில் இன்ஸ்பெக்டர்களும் நான்கு சப்இன்ஸ்பெக்டர்களும், பத்துப்பதினைந்து போலீஸ்காரர்களும் மோட்டாரிலும், மோட்டார் பஸ்களிலுமாக “புரட்சி” ஏட்டின் அலுவலகத்திற்கு வந்து தந்தை பெரியார் அவர்களோடு சுமார் அரை மணி நேரம் தனித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். பின்னர் “புரட்சி” அலுவலகத்தின் Letter-Fileகளைப் பரிசோதனை செய்தும் Press-Book பார்வையிட்டும் 46 கடிதங்களைக் கைப்பற்றியதோடு Press-Bookலிருந்து மூன்று கடிதங்களின் முக்கியாம்சத்தையும் குறித்துக்கொண்டார்கள். 29-10-1933 தேயிட்ட “குடிஅரசு” பிரதிகளில் பலவற்றையும் கேட்டு வாங்கிக்கொண்டார்கள் மற்றும் “குடிஅரசு”ப் பதிப்பகப் புத்தகங்களையும் பலவற்றைக் கவனித்துவிட்டு தந்தை பெரியாரையும் தோழர் எஸ்.ஆர். கண்ணம்மாள் அவர்களையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும்படி அழைத்துச் சென்றார்கள். அங்கு இருவருக்கும் இ.பி.கோ. 124 A. செக்ஷன்படி பொதுவுடமை பிரச்சாரத்திற்காகவென்றும். இராஜ நிந்தனைக்காகவென்றும் குற்றம் சாட்டியிருப்பதாகச் சொல்லி கைது செய்தனர்.
பின்னர் இருவரும். மாலை 5.30 மணி ரயிலில் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
அன்று இரவு கோவை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஏராளமான போலீஸ் ஜவான்களோடு பஸ்ஸில் தந்தை பெரியாரையும், எஸ்.ஆர். கண்ணம்மாளையும் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று காவலில் (Lockup) வைத்திருந்தார்கள்.
மறுநாள் காலை கோயமுத்தூர் ஜில்லா கலெக்டர் மிஸ்டர் G.W.வெல்ஸ் I.C.S. முன்பு ஆஜர் செய்தனர் அவர் அவர்களை ஜனவரி மாதம் 4ஆம் தேதிவரை ரிமாண்டில் வைக்கும்படி உத்திரவு பிறப்பித்தார். பின்னர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் ஜாமினில் வெளி வந்தார்.
இவ்வழக்கு 12.01.1934ஆம் தேதி கோயமுத்தூர் ஜில்லா மாஜிஸ்டிரேட்டு தோழர் G.W. வெல்ஸ் அய்.சி.எஸ். முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஜாமீனிலிருந்துவரும் தோழர் கண்ணம்மாளும் வந்திருந்தார்.
சர்க்கார் தரப்பில் பப்ளிக் பிராஸிகியூட்டர் ராவ்சாஹிப் கே.ராகவேந்திரராவும், தந்தை பெரியாருக்கு வக்கீல் தோழர் நஞ்சுண்டையாவும், தோழர் கண்ணம்மாளுக்காக தோழர்கள் டி.டி.ஆர்.பிள்ளை ஈரோடு ஈ.வி.வேணுகோபால் ஆகியவர்களும் ஆஜராகியிருந்தனர்.
“தோழர் ராமசாமி சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்ய வேண்டியதில்லை என்று தன்னிடம் தெரிவித்திருப்பதால்தான் சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்வதில்லை” என்று வக்கீல் தோழர் நஞ்சுண்டைய்யா மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்தார்.
தோழர் கண்ணம்மாளின் வக்கீல் தோழர் டி.டி.ஆர். பிள்ளை மட்டும் சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்தார்.
பப்ளிக் பிராசிகியூட்டர் ராவ் சாஹிப் கே.ராகவேந்திரராவ் பிராசிகியூஷன் கேசை எடுத்துரைக்கும்பொழுது 1ஆவது எதிரி ஒரு பிரபலஸ்தரென்றும், பத்திரிகையில் அச்சுச் சட்டத்தின்படி தன் பெயரைப் பிரசுரிக்கக் கடமைப்பட்டிருந்தும் 1ஆவது எதிரி அப்படிச் செய்யவில்லையென்றும் அவர் பத்திரிகையின் பத்திராதிபர் என்பதற்கு சாட்சியம் இருக்கிறதென்றும் 2ஆவது எதிரி தான் பிரசுரிப்பவர் என்று கூறியிருப்பதுடன் பத்திரிகையிலும் பிரசுரித்திருக்கிறாரென்றும் கூறினார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் வி.ரங்கசாமி அய்யர். அரசு தமிழ்மொழி பெயர்ப்பாளர் இராவ் பகதூர் முதலியார், மாஜிஸ்ட்ரேட் குமாஸ்தாக்கள் இராகவேந்திரா, ரங்கநாத அய்யர் ஈரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அத்து அய்யர் ஆகியோர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர்.
சாட்சி விசாரணை முடிந்த பிறகு, தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் தனது ஸ்டேட்மெண்டை தாக்கல் செய்தார். வழக்கு 15.01.1933 அன்று ஒத்தி வைக்கப்பட்டது.
15,16,17 ஆகிய மூன்று தினங்களிலும் வழக்கு விசாரணை நடந்தது. அதுசமயம் 2ஆவது எதிரி தோழர் கண்ணம்மாளுக்காக ஆஜரான வக்கீல் தோழர் டி.டி.ஆர்.பிள்ளை தமது வாதத்தைத் தொடர்ந்து கூறுகையில், மேற்படி வியாசமானது, ராஜ நிந்தனையைக் கற்பிக்க வில்லையென்பதாகவும், பள்ளிக்கூடங்களில் வாசிக்கும் மாணவர்களுக்குச் சிறுவயதிலேயே மதத்தைப்பற்றியும் கடவுளைப்பற்றியும் அதிகமாகப் போதித்துவிடுவதால் மற்ற விஷயங்களை அவர்கள் தெரிந்துக் கொள்வதற்கு அவகாசமில்லாமல் போய்விடுகின்றதென்ற கருத்துடனேயேதாள் அது எழுதப்பட்டதென்பதாகவும், கல்வி இலாகாவை நிர்வகிக்கச் செலவழிக்கும் பணத்திற்குத் தகுந்த கைமாறு கல்வி அபிவிருத்தியில் இல்லை என்ற ஒரு வருத்த மேலீட்டினால்தான். மேற்படி வியாசத்தில் கூறப்பட்டுள்ளனவென்பதாகவும், காங்கிரசும். காந்தியும்கூட. ஏழை மக்களின் நன்மைக்காகப் பாடுபட தவறிவிட்டார்கள் என்பதாகவும், அவர்கள் முதலாளி வர்க்கத்தாரை ஆதரிப்பவர்களாகவே இருக்கிறார் என்பதாகவும் கூறினார்.
மேற்படி வியாசத்தில் மற்ற ஸ்தாபனங்களைப்பற்றி கூறியிருப்பதற்குக் காரணம், சிலர் காங்கிரஸ்காரர்கள் என்று சொல்லிக்கொண்டிருந்து காங்கிரஸ் சட்டசபைகளை பகிஷ்கரிக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் செய்தபோது அபிப்பிராயபேதப்பட்டவர்கள் காங்கிரசை விட்டு விலகி வெளியே வந்து வேறு பல கட்சிளை ஏற்படுத்திக்கொண்டு சட்டசபைகளுக்குச் சென்று பதவிகளை வகிக்க முற்பட்டு பதவி கிடைத்ததும் ஏழை மக்களின் நன்மைகளை அவர்கள் மறந்து விட்டார்கள் என்பதே என்று கூறிவிட்டு, தாம் கூறியவற்றிற்கு, ஆதாரமாக சில ஹைகோர்ட்டு தீர்ப்புகளை எடுத்து உதாரணங்கள் கொடுத்தார்.
194 வரையிலான குடிஅரசு ஏட்டில் அதிகம் எழுதிய பெருமக்கள் விவரம்
பூ.ச.தண்டாயுதபாணி
இந்திராணி பாலசுப்பிரமணியம்
த.பெருமாள்
வா.மு.அ.ரகீம்
தோழர் என்.எஸ்.கிருஷ்ணன்
கஜேந்திரன்
தோழர் ஏ.வி.முத்தையா
தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி
தோழர் மு.அ.அருணாசலம்
நாகை எஸ்.அருணாசலம்
புதுவை மு.இராமானுசன்
குளித்தலை கி.பிச்சை
தோழர் கோ.பொ.சேதுராமன்
எஸ்.இராஜமணி
க.ந.அர்ச்சுனன்
தோழர் கனகம்மையார்
ஜி.எ.சின்னு
தோழர் மணியம்மை
வை.இரணியன்
வில்லாளன் தில்லை
சூலூர் எஸ்.பி.மீனாட்சியம்மாள்
ஈ.சித்தையன்
எஸ்.வேதநாயகம்
திண்டிவனம் கோ.ஆதிகேசவன்
பொள்ளாட்சி என்.சாவித்திரி
மற்றும், பத்திரிகைகளுக்குச் சில சுதந்திரங்கள் இருக்கின்றனவென்பதையும், மக்களின் அறிவு பல வழிகளிலும் விசாலமாய்க் கொண்டுவரும் இக்காலத்தில், இந்தியாவிற்கு இன்னும் பல சீர்திருத்தங்களைக் கொடுக்கவேண்டுமென்று பெரிய நிபுணர்கள் யாவரும் கூறிக்கொண்டிருக்கும் இக்காலத்தில் வரப்போகும் சீர்திருத்தத் தேர்தல்களில் ஏழைகள்பால் நன்மைகொண்டு உழைக்கும்படியானவர்களை சட்டசபைகளுக்கு அனுப்பவேண்டும் என்ற நோக்கத்துடனேயே மேற்படி வியாசத்தில் முக்கியமாக எழுதப்பட்டிருக்கிறதே யொழிய வேறு எந்தவிதமான துவேஷத்தையும் மனதில்கூட மேற்படி பத்திராதிபர் நினைத்திருக்கவில்லை என்பதாகவும் எலக்ஷன்களில் எல்லாம் அநேகமாக பணக்காரர்கள் அபேட்சகர்களாக நின்று வெற்றி பெறுகிறார்களேயொழிய ஏழை மக்கள் சட்டசபைக்குச் செல்ல பாத்தியமில்லாமல் இருக்கிறது என்றே கூறியிருப்பதாகவும் கூறிவிட்டு தமது வாதத்தை முடித்துக்கொண்டார்.
தந்தை பெரியாருக்காக ஆஜரான வக்கீல் தோழர் நஞ்சுண்டைய்யா தமது வாதத்தில், அக்கட்டுரையில் ராஜத்துவேஷமான விஷயங்கள் சிறிதேனும் கிடையாதென்றும், சட்டசபைகளைக் கைப்பற்றவேண்டும் என்ற நோக்கத்துடனேயே தான் எழுதப்பட்டதாகவும் கூறி பல ஆதாரங்களை எடுத்துக்காட்டினார். வக்கீல்களின் வாதங்கள் முடிவுற்றன.
வழக்கு இம்மாதம் 20ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டபொழுது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாகக் கலெக்டர் அறிவித்துள்ளார். மறுபடியும் வழக்கு 22ஆம் தேதிக்கு வாய்தா போடப்பட்டிருக்கிறது
– தொடரும்