மும்பை, மே 18- மகாராட்டிர நகரசபை நிர்வாக அதிகாரி வீட்டிலிருந்து ரூ.31 கோடி மதிப்புள்ள ரொக்கம், நகைகள், தங்கக்கட்டிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மகாராட்டிர மாநிலம் வாசை விரார் நகராட்சி அலுவலகத்தின் (விவிஎம்சி) துணை இயக்குநராக (நகரத்திட்டமிடல்) பணியாற்றுபவர் ஒய்.எஸ். ரெட்டி. இவர் மீது பல்வேறு புகார்கள் அமலாக்கத்துறைக்கு வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 15.5.2025 அன்று இவரது வீடு, அலுவலகங்கள், உறவினர் வீடுகளில் சோதனை நடத்தினர்.
மும்பை, அய்தராபாத் ஆகிய நகரங்களில் ரெட்டிக்கு சொந்தமான 13 இடங்களில் இந்த சோதனை நடந்தது. அப்போது இவரது வீடுகளில் இருந்து ரூ.23.25 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள், தங்கக் கட்டிகள், ரூ.8.6 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
வாசை விரார் நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் மற்றும் அரசு நிலங்களில் சட்டவிரோதமாக வீடுகள் கட்டுவதற்காக இவர் பலரிடம் லஞ்சமாக இந்தத் தொகையைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
2009ஆம் ஆண்டு முதல் குறிப்பிட்ட காலம் வரை 41 சட்ட விரோதக் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதியை ஒய்.எஸ். ரெட்டி வழங்கியுள்ளார் என்று அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.