சென்னை, மே 17- அரசுப் பள்ளிகளில் இதுவரை புதிதாக 1.79 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இவற்றில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாணவர்கள் நலனுக்காக கற்பித்தல், கற்றல் சார்ந்து எண்ணும்-எழுத்தும், காலை உணவு, ஸ்மார்ட் வகுப்பறைகள் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, அரசுப் பள்ளிகளில் 2025-2026 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பெற்றோர்கள் பலர் ஆர்வமுடன் தங்கள் பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர்.
அந்தவகையில் இதுவரை 1.79 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் 3 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில் சேர்க்கைப் பணிகளை தீவிரப்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அங்கன்வாடி மய்யங்களில் படித்து முடித்த 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை சீர்படுத்த
காவல்துறை அதிகாரிகளுடன்
சென்னை காவல் ஆணையர் ஆலோசனை
சென்னை, மே 17- சென்னையில் சட்டம் – ஒழுங்கு நிலை தொடர்பாக காவல் துறை அதிகாரிகளுடன் காவல் ஆணையர் அருண் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், குற்றச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, மோசடி உட்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் அருண் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ரவுடிகள், தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார். தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
இருப்பினும், ஆங்காங்கே சில குற்றச் செயல்கள் நடைபெற்று விடுகின்றன. இதையும் முற்றிலும் தடுக்கும் வகையில் காவல் துறை அதிகாரிகளுடன் காவல் ஆணையர் அருண், வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (16.5.2025) ஆலோசனை நடத்தினார்.
இதில், கூடுதல் காவல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் திருவல்லிக்கேணி, அடையாறு, பரங்கிமலை, மயிலாப்பூர், புளியந்தோப்பு உட்பட சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கைது விவரம், குண்டர் சட்டத்தில் ரவுடிகளை சிறையில் அடைத்த விவரம், நிலுவையில் உள்ள குற்ற வழக்கு விவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அப்போது, காவல் துறை அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் காவல் ஆணையர் வழங்கினார்.
மேலும், குற்றச்செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் காவலர்களோ, காவல்துறை உயர் அதிகாரிகளோ தவறு செய்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் சிறப்பாகப் பணி செய்த அதிகாரிகளுக்கு பாராட்டுகளையும் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.