சென்னை, மே 17- சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10ஆம் வகுப்பு தேர்வில் 86.10 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 7 சதவீதம் அதிகம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
மாணவர்கள் தேர்ச்சி
2024-2025ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 7,142 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் நேற்று (16.5.2025) வெளியாகின. இதில் 3,036 மாணவிகள் (88.44 சதவீதம்), 3,113 மாணவர்கள் (83.93 சதவீதம்) என மொத்தம் 6,149 மாணவ, மாணவிகள் (86.10 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். இதை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நூற்றுக்கு நூறு
11 பேர் 100-க்கு 100: பாடவாரியாக அறிவியல் பாடத்தில் 1 மாணவரும், சமூக அறிவியல் பாடத்தில் 11 மாணவர்களும் 100-க்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற தேஜஸ்வினி 500-க்கு 492 மதிப்பெண்கள் பெற்று, மாநகராட்சி பள்ளிகள் அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
மொத்தமுள்ள 70 பள்ளிகளில், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் காமராஜபுரம், பாடிக்குப்பம், கொடுங்கையூர், கண்ணம்மா பேட்டை, ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு, ரங்கராஜபுரம், சூளைமேடு உள்ளிட்ட 14பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கியுள்ளன. 450 மதிப்பெண்களுக்கு மேல் 190 மாணவர்களும், 400 மதிப் பெண்களுக்கு மேல் 1963 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
11ஆம் வகுப்பு
தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு
கடந்த ஆண்டை விட 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் நேற்று (16.5.2025) 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித் துறையின்கீழ் 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
2024-2025ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 11ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 2,366 மாணவர்கள், 2.995 மாணவிகள் என மொத்தம் 5,361 பேர் தேர்வு எழுதினர். இதில் 1,783 மாணவர்கள் (75.36%), 2,557 மாணவிகள் (85.38) என மொத்தம் 4,340 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 81 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ஒரு சதவீதம் அதிகமாகும்.
லாயிட்ஸ் சாலை பள்ளி: கணினி அறிவியல் பாடப்பிரிவில் 1, கணினிப் பயன்பாடுகள் பாடப்பிரிவில் 1, வணிகவியல் பாடப்பிரிவில் 4 என 6 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 9 பேர் 551 முதல் 600 மதிப்பெண்கள் வரையும், 68 பேர் 501 முதல் 550 மதிப்பெண்கள் வரையும், 249 பேர் 451 முதல் 500 மதிப்பெண்கள் வரையும் பெற்றுள்ளனர். லாய்ட்ஸ் சாலை-சென்னை மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.