சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ போட்ட எதிர் நீச்சல்கள் (11)

viduthalai
5 Min Read

 கி.வீரமணி

குடிஅரசில் அன்றைய ஆங்கிலேய ஆட்சியை வஞ்சித்து எழுதிய தலையங்கம் 29.10.1933 அன்று வெளியான நிலையில் அந்த தலையங்கம் ஆட்சியாளர்களை மிரளச் செய்தது. தொடர்ந்து ‘குடிஅரசு’ இதழின் வெளியீட்டாளர் என்ற நிலையிலும், உண்மை விளக்கம் அச்சக உரிமையாளர் என்ற நிலையிலும் ஒவ்வொன்றிக்கும் 1000/- என்ற கணக்கில் 2000/- ரூபாய் ஜாமின் தொகை கட்ட வேண்டும் என தந்தை பெரியாரின் தங்கை எஸ்.ஆர்.கண்ணம்மா அவர்களுக்கு ஆணையிடப்பட்டது.

இது குறித்து தந்தை பெரியார் 12.11.1933 தேதியிட்ட குடிஅரசு ஏட்டில் ‘குடிஅரசு மீது பாணம்’ என்னும் தலைப்பில் ஓர் உருக்கமான தலையங்கத்தை எழுதினார். அத்தலையங்கத்தில்,

சிறப்புக் கட்டுரை

‘குடிஅரசு’ மீது பாணம்

‘குடிஅரசு’  பத்திரிகைக்கு இந்திய அரசாங்க அவசர சட்டப்படி பாணம் போட்டாய் விட்டது. அதாவது நவம்பர் மாதம் 20ஆம் தேதிக்குள் தோழர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் உண்மை விளக்கம் அச்சுக்கூட சொந்தக்காரர் என்கின்ற முறையில் 1000 (ஆயிரம்) ரூபாயும், குடி அரசு பத்திரிகையின் பிரசுரகர்த்தாவாகவும், வெளியிடு வோராகவும், இருக்கின்றார் என்கின்ற முறையில் 1000 (ஆயிரம்) ரூபாயும் ஆக 2000 ரூபாய் கோயமுத்தூர் ஜில்லா மேஜிஸ்டிரேட்டிடம் ஜாமீன் கட்டவேண்டுமென்று நோட்டீஸ் சார்பு செய்யப் பட்டாய்விட்டது. இதைப்பற்றி நாம் வருத்தமடையவில்லை. கவர்ன்மெண்டார் மீதும் நிஷ்டூரப்படவுமில்லை. இதுவரையிலும் இப்படிச் செய்யாமல் விட்டு வைத்திருந்ததற்கு நன்றி செலுத்தவும், மகிழ்ச்சியடையவுமே கட்டுப்பட்டிருக்கிறோம்.

முதலாளி வர்க்க ஆட்சியாகிய இன்றைய அரசாங்கத்தின் சட்டப்படி குடிஅரசு ஆரம்பித்தகாலம் முதல் இந்த நிமிஷம்வரை குடிஅரசின் ஒவ்வொரு இதழிலும், ஒவ்வொரு வாக்கியத்திலும் கண்டவிஷயங்கள் குடிஅரசைக் கொல்லத்தக்க பாணம்விடக்கூடத் தகுதியுடையவைகளே என்பதில் நமக்குச் சிறிதும் அய்யமில்லை. ஆதலால் இந்த அரசாங்கம் இதுவரை விட்டு வைத்தது அதிசயமேயாகும்.

‘குடிஅரசு’ தோன்றி இந்த 8½ வருஷகாலமாக நாளுக்கு நாள் முற்போக்கடைந்து பணக்கார ஆதிக்க ஆட்சியை ஒழித்து சரீரத்தால் கஷ்டப்படும் ஏழை மக்கள் ஆட்சியை உண்டாக்கவேண்டும் என்கின்ற கவலைகொண்டிருக்கிறது என்பதிலும் இக்காரியம் கைகூடுவதற்கு பார்ப்பனியம், புரோகிதம், பாதிரித் தன்மை முதலியவை களோடு இவற்றிற்கு ஆதிக்கம் கொடுத்துவரும் எல்லா மதங்களும் ஒழியவேண்டும் என்பதிலும் கவலையுடன் உழைத்துவந்துள்ளது என்பதில் சிறிதும் ஆட்சேபணையில்லை.

இதற்காக இக்கூட்டங்களின் யோக்கியதைகளைக் கண்ணாடி போல் வெளிப்படுத்தும் தொண்டை பிரதானமாய்க் கருதி அதைச் செய்து வந்திருக்கிறது என்பதையும் நாம் மறைக்கவில்லை. இனியும் அதைத்தான் முதலில் செய்யக் காத்திருக்கிறோம் என்பதையும், தைரியமாய் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தொண்டுகள் செய்ய இடமில்லையானால் குடிஅரசு பத்திரிகை இருக்க வேண்டிய அவசியமு மில்லை.

சிறிதுகாலத்துக்கு முன் நாம் தெரிவித்துக் கொண்டபடி, இனி நம்மால் நமது கடமையைச் செய்ய முடியாதென்று தெரிந்தால் நாம் இருப்பதைவிட இறப்பதுமேல் என்பதுபோல் ‘குடிஅரசு’ தன் கடமையை ஆற்ற முடியவில்லையானால் அது எதற்காக இருக்க வேண்டும்? ஆதலால் அது மறைந்துபோக நேரிட்டாலும் ஆசிரியன் என்கின்ற முறையில் நமக்கு கவலையில்லை.

1939 – 1943 வரையிலான குடிஅரசு ஏட்டில் அதிகம் எழுதிய பெருமக்கள் விவரம்

சிங்கப்பூர் க.கோவிந்தசாமி பண்டிதர்
காயல் எல்.கே.சுலைமான்
எஸ்.வி.காமத்
நாகலிங்கம் பழனி
சிங்கப்பூர் வி.எம்.முத்து
ராதாபுரம் எஸ்.மல்லிகார்ச்சுனக் கவிராயர்
எஸ்.லட்சுமிரதன் பாரதி
ஆம்பூர் வி.எம்.ஆறுமுகம்
எஸ்.வி.பரன்
சி.ச.சுப்பைய நாடார்
தேனி ஏ.எஸ்.தங்கமணி
ஜெ.டேனியல்
வை.ம.பொன்னுசாமி
சைகோன் லோரான்
நாகூர் ஜராப் எஸ்.ஏ.முகம்மது ரஹியா மரைக்காயர்
கருவை சிறுவன் வி.ஆர்.வி.ராஜன்
குற்றாலம் ஆர்.கல்யாணசுந்தரம் பி.ஏ.,
புலவர் முருகிறையனார்
திருப்பத்தூர் ஏ.பி.பெரியசாமி புலவர்
தோழர் அ.ப.ஆதித்தா
கருவூர் கே.சி.ஆர்.சாமி
தோழர் துரைதாசன்
செங்களக்குறிச்சி எம்.செல்லையா
சோ.கோமதிநாயகம்
எட்டயபுரம் டாக்டர் ஜி.பக்தவத்சலம்
சோழகந்த சச்சிதானந்தன்
வி.எஸ்.மீனாட்சி சுந்தரம்பிள்ளை
பெரியகுளம் அ.சுப்பையா
புதுவண்டிப்பாளையம் அ.சிவலிங்கம்
தோழர் ஆ.ஐ.ஆதிமூலம்
வெ.அண்ணாமலை
ந.ரே.முத்துகிருஷ்ணன்
மாணவன் செழியன் பட்டுக்கோட்டை
இளைஞூர் பி.வி.முத்துசாமி
கே.முஹம்மத் இஸ்மாயில், பழனி
ரா.மு.நாதமுனி
தோழர் ஏ.ஆ.சிவம்
சிறுத்தொண்டநல்லூர் தோழர் வ.சங்கரநாராயணன்
விருத்தாசலம் எஸ்.ஏ.ரஹ்மான்
கே.சி.கண்ணன் இரங்கூன்
கருவூர் இ.சி.அடிகள்
சி.பழனிக்குமாரன்
வித்வான் மறை.திருநாவுக்கரசர்
ஸ்ரீமதி ஜோகபத் மெத்துசலா அம்மாள்
மதுரை ஆ.சங்கையா
சி.முனிசாமி
தமிழாசிரியர் எ.ஆளவந்தார்
எஸ்.பி.வி.பி.பாலசுப்பிரமணியன்
த.கிருஷ்ணமூர்த்தி
பேட்டை சி.வி.சுப்பையா
சென்னை எ.முருகேசம்
திருவாரூர் பாவலர் எம்.என்.பாலசுந்தரம்
பி.வி.அனுமந்தராவ்
தோழர் ரா.பி.சேதுபிள்ளை
ஆர்.நாராயணி அம்மாள், சென்னை
கே.எம்.ஹெச்
இராசரத்தினம்
எஸ்.எஸ்.மரியசாமி
டாக்டர் இ.பாலசுப்பிரமணியம்
பி.கோதண்டராமன்
பெர்னார்ட் கிலிங்
தனக்கோட்டி பி.ஏ.
நிக்கலஸ் மரக்கீஸ்
இம்மானுவேல் டி.ஆஸ்மர்
நோயில் பேக்கர்
நிர்மலா சந்திரபாலர்
திவான்பகதூர் டி.எம்.நாராயணசாமி பிள்ளை
சி.வி.குப்புசாமி
சேலம் ஆ.மாணிக்கம்
கோ.ராமலிங்க தேவர்
வாடிப்பட்டி செங்கணன்
ஆம்பூர் சி.கோ.ஜெயராமுலு
ஆசிரியை பாப்பா இளவலூர் மணிமறை
வித்வான் அ.கிருஷ்ணமூர்த்தி
புரபசர் ரோஸ்லிங்
பண்டித மிஸ்ரா
தோழர் ஹாயிஷ் கிகோல்
ஆர்.அச்சுதன் தம்பி பி.ஏ.
தோழர் சுரேஷ் சந்தராய் எம்.ஏ.பி.எல்.
கரந்தை எஸ்.எம்.வாசகம்
டாக்டர் எஸ்.தருமாம்பாள்
ந.ரெ.முத்துக்கிருட்டிணன்
அசோக் மேத்தா
உழவன் சி.பழனிக்குமாரன்
வீரநாமநார்
ஆனைமலை ஆர்.நரசிம்ம நாயக்கர் பி.ஏ.
கோட்டாறு தோழர் கே.ராமையா
பண்டித டாக்டர் எஸ்.ஆனந்தம்
தோழர் எம்.என்.ராய்
எஸ்.சிவபிரகாசம்
ப.கண்ணன்
ஏ.பி.ஜனார்த்தனம் பி.ஏ.
பி.எஸ்.வேகன்
ராவ்பகதூர் சி.எம்.ராமச்சந்திர ரெட்டியார்
மனோன்மணி ஏகாம்பரம்
சம.பி.எஸ்.எம்.கொம்பையா
அ.ராமசாமி கவுண்டர்
குகை ந.வெங்கட்ராமன்

ஆனால் பதிப்பாளர் என்கின்ற முறையிலும், பிரசுரகர்த்தா என்கின்ற முறையிலும் அதன் அத்தியந்த நண்பர்கள் என்கின்ற முறையிலும் சிலருக்குக் ‘குடிஅரசு’ மறைவதில் அதிகக் கவலை இருந்து வருகின்றதாக அறிகிறோம். ஜாமீன் தொகை கட்டவும் முயற்சிக்கிறார்கள். விஷயம் எப்படி முடியும் என்று முடிவுகட்ட முடியவில்லை. நமது உடல் நிலை இந்த 5, 6 மாதமாய் அதிகமாய் சீர்கெட்டு விட்டது. மயக்கமும், மார்வலியும் அதிகம். கால்களில் நீர்ஏறி வீக்கம் கண்டிருக்கிறது. காதுகளும் சரியாய்க் கேட்பதில்லை. ஆதலால் எப்படி ஓய்வெடுப்பது என்று எண்ணியதுடன் இனி உயிர் வாழ்வதும் உலகுக்கு பாரம் என்றே எண்ணினோம். இந்த நிலையில் ‘குடிஅரசு’ நின்றுபோக ஏற்பட்டால் தோழர் நாகம்மாள் மறைவு ஏற்பட்டது போலவே மற்றொரு விதத்தில் நமக்கு நன்மை என்றே கொள்ளவேண்டியதாகும். ஆனால் என்ன நடக்கின்றனவோ பார்ப்போம்.

நிற்க, இதன் பயனாய் ‘குடிஅரசி’ன் கொள்கைகள் மறைந்து விடுமோ என்றாவது, அது இவ்வளவு நாள் செய்துவந்த வேலைகள் கெட்டுப்போகுமோ என்றாவது யாரும் பயப்பட வேண்டியதில்லை. நமது கொள்கைகள் எங்கும் வேரூன்றிவிட்டன. பிரசாரம் என்கின்ற கொடி எங்கும் பரவிவிட்டது. ‘குடிஅரசோ’ சுயமரியாதைக்காரரோதான் இக்கொள்கைகளைப் பரப்ப இருக்கிறார்கள் என்பதாக இனி கருதவேண்டியதில்லை. ‘குடிஅரசு’ம் சுயமரியாதைக்காரரும் சொன்னதையே நாமும் திருப்பிச் சொல்லவேண்டிய காலம் வந்துவிட்டதே என்று வெட்கப்பட்டுக்கொண்டு வேறு போர்வைக்குள் இருந்து வேறு பாஷையில் ‘குடிஅரசு’க் கொள்கையைச் சொல்லவும், பிரசாரம் செய்யவும், வெகு தொண்டர்களும் தலைவர்களும் இந்தியாவெங்கும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆதலால் அவர்களுக்கும் இதுசமயம் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தது போலவும் ஆகும். மற்ற விபரங்கள் பல தோழர்களைக் கலந்தபிறகு வெளியாக்கப்படும். ஆதலால் கோவை ஜில்லா சுயமரியாதை (ஈரோடு) மகாநாட்டிற்கு ‘குடிஅரசு’ அபிமானத் தோழர்கள் எல்லோரும் அவசியம் விஜயஞ் செய்து இதுவிஷயமாய் ஒரு முடிவு கட்டும் விஷயத்தில் கலந்து கொள்ளவேண்டுமாய் பிரத்தியேகமாய் வேண்டிக்கொள்ளுகிறோம்.

– ‘குடிஅரசு’ தலையங்கம், 12.11.1933இந்த நிலையில் இதற்கிடையில் ‘குடிஅரசு’ 12.11.1933 இதழுடன் நின்று விட்டது. 26.11.1933 முதல் ‘புரட்சி’ வெளிவந்தது.

(தொடரும்)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *