கேள்வி 1: இந்தியா-பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறுவது இந்திய நாட்டிற்கு இழுக்கு ஆகாதா!அதனைக் கேட்டுக்கொண்டு இங்குள்ள தேச பக்தர்கள், சங்கிகள் வாய்மூடி மவுனமாக இருப்பது ஏன்?
– கு.கணேஷ், கடப்பாக்கம்.
பதில் 1: இதுதான் இப்போதுள்ள மில்லியன் டாலர் கேள்வி. முன்னால் உடனே ஒரு சிறு மறுப்பு வந்த பிறகும் டிரம்ப் மேலும் தனது வர்த்தக ஆயுதம் மூலம் அதைப் பிரயோகப்படுத்தி போர் நிறுத்தம் ஏற்படச் செய்ததாகக் அழுத்தம் திருத்தமாகக் கூறுவதை நமது பிரதமர் மோடி போன்றவர்கள் – ஒன்றிய அரசின் முக்கிய பொறுப்பில் உள்ள அமைச்சர்கள் சரியான மறுப்பு தராதது ஏற்கத்தக்கதல்ல.
« « «
கேள்வி 2: ஆதிக்கம், தீண்டாமையின் அடையாளமாக பொது பயன்பாடு மற்றும் அரசு ஆவணங்களிலிருந்து காலனி என்ற சொல் நீக்கப்படும் என தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதை போன்று , நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சிகளில் உள்ள தனித் தொகுதி என குறிப்பிடுவதை மாற்றி வேறு சொல்லை பயன்படுத்த வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தை முதலமைச்சர் வலியுறுத்துவாரா?
– மன்னை சித்து , மன்னார்குடி – 1.
பதில் 2: தனித் தொகுதி, ஒதுக்கப்பட்ட தொகுதி (Reserved) என்பதில் எந்த இழிவும் இல்லை. பொதுவான வாய்ப்புக்கு முன்னுரிமை அவ்வளவுதான். குதிரைக்கு ‘குர்ரம்’ என்றால் யானைக்கு ‘யர்ரம்’ என்பதாகத்தான்.
« « «
கேள்வி 3: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் வடகலை, தென்கலை பிரிவினரிடையே அடிக்கடி மோதல், சண்டை சச்சரவுகள், தள்ளு முள்ளு ஆகியவை நடப்பதைப் பார்த்து ஊரே- உலகமே கைகொட்டி சிரிப்பது எதைக் காட்டுகிறது?
– வெ.மகாராணி, காஞ்சிபுரம்.
பதில் 3: மதவெறி, மதபோதை இவைகளைக் கடந்து ஒரு வகை அவமானமோ, கூச்சமோ ஏற்படவே ஏற்படாது. அது ஒரு வகை போதைதானே!
« « «
கேள்வி 4: புத்தரை பகுத்தறிவுவாதியாகப் பார்க்காமல், அவரது சிலைக்கு பூஜை புனஸ்காரம் செய்து வழிபாடு நடத்துவது புத்த நெறிக்கு, கோட்பாட்டிற்கு எதிரான செயல் அல்லவா?
– ச.இராஜேஸ்வரி, எழும்பூர்.
பதில் 4: ஆரம்பத்தில் பவுத்தம் ஒரு அற்புதமான அறிவியல் பகுத்தறிவு வாழ்க்கை நெறி – அது ‘மதமாகி’யதால் சடங்கு, சம்பிரதாயம், பல அவதாரப் பொய்க் கதைகள் அதனை கீழ் இறக்கத்திற்குத் தள்ளி விட்டது! பல்வேறு வகை புத்தர்களை கடவுளாகவே ஆக்கிவிட்ட கொடுமை! வேதனை! வேதனை!
« « «
கேள்வி 5: இந்தியாவிலேயே மின்னணு ஏற்றுமதி, ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது மட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதை வரவேற்கும் விதமாக திராவிட மாடல் ஆட்சிக்கு 2026இல் மக்கள் மகுடம் சூட்டுவார்களா?
– இ.தனசேகரன், அரூர்.
பதில் 5: நிச்சயம். நன்றி உணர்வை பயனடைந்த நமது மக்கள் காட்டுவார்கள். சாதனைகளை அன்றாடம் அனுபவிக்கிறார்கள்! கொள்கை இங்கே; மற்றபடி பதவி வெறித்தனம் மாற்றுக் கூடாரங்களில்!
« « «
கேள்வி 6: ஆபரேஷன் சிந்தூர், தாக்குதல் நிறுத்தம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியிருப்பதற்கு உரிய பலன் கிட்டுமா?
– க.மோகன்காந்தி, செய்யாறு.
பதில் 6: ஜனநாயகத்தை மதித்ததால் அப்படிச் செய்து நாடே வேறுபாடு இன்றி ஓரணியில் திரண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. நல்லதுதான். ஆனால் நடக்குமா என்பதுதான் சந்தேகமாக உள்ளது!
« « «
கேள்வி 7: பாஜக, பாமகவுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம். இந்த நிலைப் பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளிப்படையாக திட்டவட்டமாகத் தெரிவித்திருப்பது வரவேற்க வேண்டிய விடயம் அல்லவா?
– ஜே.ராஜன் விஜயகுமார், கிழக்கு தாம்பரம்.
பதில் 7: நிச்சயமாக. கொள்கைக் கூட்டணி என்ற பெருமையே. அந்தப் பெருமையை பறித்துவிடக் கூடாது!
« « «
கேள்வி 8: ஒன்றிய, மாநில அரசுகளின் போட்டி தேர்வுக்கான பயிற்சி மய்யங்கள் (கட்டணம்) பெரும் நகரங்களில் மட்டும் இருந்துவந்த நிலையில் அண்மைக்காலமாக சிறு கிராமங்களில் கூட பொதுநல அமைப்புகள் சார்பில் தொண்டறப்பணியாக இலவச போட்டி தேர்வு பயிற்சி மய்யங்கள் தொடங்கப்பட்டு அதில் படித்தவர்கள் அதிக எண்ணிக்கையில்வெற்றி பெற்று பல்வேறு துறைகளில் பணியில் சேர்வதை அறியும் போது என்ன மாதிரி உணர்வினை பெறுகிறீர்கள்?
– மன்னை சித்து, மன்னார்குடி – 1.
பதில் 8: எல்லையற்ற மகிழ்ச்சி. திராவிட மாடல் ஆட்சியின் மகுடத்தில் மற்றுமொரு முத்து என்று பெருமை கொள்ளலாம் – அனைவரும்!
« « «
கேள்வி 9: ஆகம விதிகளைக் கடைப்பிடிக்காத கோவில்களில் அனைத்து ஜாதியைச் சேர்ந்தவர்களையும் அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து, திராவிட மாடல் அரசு இவ்விடயத்தில் முனைப்புடன் செயலில் இறங்குமா?
– மலர்க்கொடி, மாங்காடு.
பதில் 8: எனது அறிக்கை (15.5.2025) ‘விடுதலை’ படியுங்கள். நிச்சயம் செயலில் தமிழ்நாடு அரசு இறங்கும். உறுதி! உறுதி! உறுதி!!
« « «
கேள்வி 10: சிந்து நதி ஒப்பந்தத்தை மீறி நீர் விடாமல் தடுக்கும் சக்தி வாய்ந்த ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்கள் பிடிக்க தடையாக இருக்கும் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாமல் போனது ஏன்?
– இரா.முல்லைக்கோ. பெங்களூரு.
பதில் 10: மனமிருந்தால் எப்போதும் மார்க்கம் உண்டு. மனமில்லையே என்ன செய்வது? என்பதுதான் நடைமுறை யதார்த்தம்.