மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி
புஷ்பலதா
மற்றொரு இனிய காலை நேரம். குன்னூர் “குளு, குளு” வென்ற காற்றோடு மேக மூட்டத்தோடு (Mist) மெதுவாக விழித்திருந்தது. நான் அரசு லாலி மருத்துவமனையில் என் புறநோயாளிகள் பகுதியில் நோயாளிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு முதிய பெண் என் அறைக்கு வந்தார். “வாங்கம்மா, என்ன செய்கிறது?” என்று வினவினேன். “சார், எனக்கு ஒன்றும் இல்லை; பிரச்சினை என் பெண்ணுக்குத்தான்” என்றார். “அவருக்கு என்ன?” என்று நான் கேட்க, அந்தம்மா கண்களில் கண்ணீர்; என் மகள் பெயர் புஷ்பலதா. நீங்கள் தனலட்சுமி என்ற பெண்ணிற்கு ஆபரேஷன் செய்ததைப் பற்றி செய்தித் தாள்களில் படித்தேன்.
அந்தப் பெண்ணைப் போல்தான் என் பெண்ணும். இப்பொழுது 16 வயது. 8 வயதில் கீழே விழுந்து தாடையில் அடிபட்டு விட்டது. சிறிது காலத்தில் வாய் இறுகி விட்டது. முதலில் நாங்கள் “அம்மைக் கட்டு” என்று நினைத்து வைத்தியர்களிடமெல்லாம் காட்டினோம். அவர்களும், மருந்துகள் கொடுத்தார்கள். நன்றாகவில்லை. பின் மாரியாத்தா கோயிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்திப் பார்த்தோம். குறி கேட்டோம். ஒன்றுமே பயனளிக்கவில்லை. மாந்திரீகர்களைப் பார்த்தோம். “செய்வினை” என்று அதை எடுப்பதாகச் சொன்னார்கள். கோவையில் ஒரு பிரபல சாமியாரைப் பார்த்தோம். அவர் மந்திரித்த தாயத்தைக் கட்டி விட்டார். எல்லாவற்றிலும் தோல்வி. என் பெண் வளர, வளர முகமே கோரமாகி விட்டது.
அவளைப் பார்த்து வீட்டில் இருப்பவர்களே ஒதுங்கும் நிலை ஏற்பட்டது. நாளடைவில் சிறு குழுந்தைகள் அவளைப் பார்த்து பயப்படும் நிலை வந்து விட்டது. உறவுகள் புறக்கணிப்பு அவளை மனத்தளவில் பாதித்து விட்டது. வீட்டிலேயே அடைந்து கிடக்கிறாள். யாரையும் பார்ப்பதில்லை. வாய் இறுக்கத்தால் உணவும் எடுப்பதில்லை. நீராகாரம்தான்! அந்தக் கவலையிலேயே அவள் அப்பாவும் மறைந்துவிட்டார்.
நான்தான் பார்த்துக்கொள்கிறேன். எனக்கும் வயதாகி விட்டது. எனக்கு ஏதாவது நேர்ந்தால் அவள் நிலை என்னவாகும் என்ற பயமும், அச்சமுமே எனக்குப் பெருங்கவலையாக இருக்கிறது. உங்களால் அவளை சரி செய்ய முடியுமா? அப்படி அவள் சரியாகி விட்டால், நீங்கள்தான் என் “குலசாமி” என்று கொண்டாடுவேன்” என்று அழுதுகொண்டே கூறினார். நான் அவரைத் தேற்றி அவர் பெண்ணை அழைத்து வரும்படி கூறினேன். அடுத்த நாளே தன் மகளைக் கூட்டிக் கொண்டு வந்து விட்டார். அந்த அம்மா கூறியபடியே ‘புஷ்பலதா’ என்ற பெயருடைய அந்தப் பெண்ணின் முகம் மிகவும் கோரமாக இருந்தது. சிறிய கீழ்நாடி ( பறவை முகம் – Bird‘s face), உதடுகளை மூட முடியாத நிலை. மேல் நாடி முன் பற்கள் எல்லாம் வாயின் வெளிப்புறம் இருக்கும் தோற்றம் என்று அழகற்ற நிலையில் அந்தப் பெண் இருந்தார்.
நான் அந்தப் பெண்ணை முழு பரிசோதனையும் செய்தேன். அதன் கீழ்த் தாடை மூட்டுகள், இரண்டு புறமும், மண்டை ஓட்டோடு இணைந்து விட்டதை கண்டு பிடித்தேன். “ஆப்ரேஷன்” செய்து கொள்கிறாயா?” என்று அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டேன். “செய்து கொள்கிறேன்” என்று பல்லைக் கடித்தவாறு புஷ்பலதா பதில் கொடுத்தார். மருத்துவமனையில் சேர்த்து அறுவை மருத்துவத்திற்கு முன் பரிசோதனைகளை முடித்து, அறுவை மருத்துவத்திற்கு நாள் குறிக்கப்பட்டது.
இரட்டிப்பு சிக்கலான அறுவை மருத்துவம் அது.கீழ் நாடியையும் சீராக்க வேண்டும், மேல் நாடியையும் சரியாக்க வேண்டும். மயக்க மருந்து கொடுப்பதிலும் சிக்கல். முதலில் வாயைத் திறக்க வைத்து, அதன் பின்தான் மேல் நாடியை சீராக்க முடியும் என்ற நிலை. மேல் நாடியும், கீழ் நாடியும் குறைபாடோடு இருந்ததால் மயக்க மருந்துக் குழாயை மூச்சுக் குழாய்க்குள் செருகவே முடியவில்லை. அதனால் கழுத்தில் துளையிட்டோம் (Tracheastomy). அதன் வழியே மயக்க மருந்துக் குழாயை (Exdo Tracheal tube) செலுத்தி மயக்கம் கொடுத்தோம்.
(10.5.2025 மருத்துவக் கட்டுரையில் விடுபட்ட பத்தி)
ஒரு முக அறுவை சிகிச்சை மருத்துவரின்
முத்தான அனுபவங்கள்-1 (தனலட்சுமி)
ஒரு இனிய இளங்காலைப் பொழுது. குன்னூர் அரசு லாலி மருத்துவமனை. பல் மருத்துவ புற நோயாளிப் பகுதியில் அமர்ந்து நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு 16 வயது பெண், ”சார், புற நோயாளிகள் பகுதியிலிருந்த மருத்துவர் உங்களைப் பார்க்கச் சொன்னார்” என்று பல்லைக் கடித்தவாறு கூறினார். “சார், நான் 9 வயதில் கீழே விழுந்து விட்டேன். சில மாதங்களில் என் வாய் கொஞ்சம், கொஞ்சமாக மூடி விட்டது. 7 ஆண்டுகளாக வாயே திறக்க முடியவில்லை. பற்களைக் கடித்துக் கொண்டுதான் பேச முடிகிறது. குடிக்கும் திரவ உணவுதான் நான் சாப்பிடுகிறேன். பல டாக்டர்களைப் பார்த்து விட்டேன். சரியாகவே இல்லை. கால் வலி என்று டாக்டரிடம் காட்ட வந்தேன். டாக்டர் வாயைத் திறக்காத நிலையைப் பார்த்து, உங்களிடம் அனுப்பினார்” என்று கூறினார். நான் பொதுவான சோதனைகளை முடித்து விட்டு, முகத்தைச் சோதித்தேன். நாடியில் சின்ன வயதில் அடிபட்டதால் கீழ்த் தாடை மூட்டு நொறுங்கி, அதன் காரணமாக கீழ்த்தாடை மண்டையோடு ஒட்டிவிட்டது என்பதை கண்டு பிடித்தேன். தனலட்சுமியிடம், அவர் நோயின் தன்மையை விளக்கக் கூறி, ஓர் அறுவை மருத்துவம் செய்து, வாயைத் திறக்க வைத்துவிடலாம் என்று கூறினேன்.
முதலில் காதிற்கு முன் கீறலிட்டு (Incision) அங்குள்ள இரத்தக் குழாம்களை அப்புறப்படுத்தி, “முக நரம்பை” (Facial Nerve) எச்சரிக்கையோடு ஒதுக்கி (இந்த நரம்பு அய்ந்து பிரிவுகளாகப் பிரிந்து, முகம் முழுவதும் பரவியுள்ளது. தவறி, அறுவை மருத்துவத்தின் பொழுது, அடிபட்டாலோ, வெட்டுப் பட்டாலோ முகம் முழுவதும் கோணலாகி (Facial Palsy) விடும். கீழ்த்தாடை மூட்டு, சரியாக இந்த நரம்பிற்குக் கீழ்தான் உள்ளது. அதனால் அந்த நரம்பை எச்சரிக்கையுடன் நகர்த்தி, கீழ்த்தாடை மூட்டை மண்டையிலிருந்து தனியாக வெட்டி சீராக்கினேன். அடுத்தப் பக்கத்திலும் இதே போன்று செயதேன். ஒரு வழியாக இரண்டு புற முகத்தின் பக்க வாட்டிலும் அறுவை மருத்துவம் செய்து முடிக்கப்பட்டது. எட்டு ஆண்டுகளாக மூடிக் கடந்த வாய், ஆத்தாவிற்கு கூழ் ஊற்றியதாலோ, செய்வினை எடுத்ததாலோ, மந்திரத்தாலோ, குறி கேட்டு, தோஷம் கழித்ததாலோ, மந்திரத் தாயத்தாலோ திறக்க முடியாது போய் மருத்துவ அறிவியல் திறந்து விட்டது. கீழ் நாடி அறுவை மருத்துவம் முடிந்தவுடன், (வாய் திறந்து விட்டதால்) மேல் நாடி அறுவை மருத்துவத்தைத் துவக்கினேன். சீரற்றப் பற்கள் இரண்டை எடுத்து விட்டு, உதட்டிற்கு வெளியே நீண்டிருந்த மேல் நாடியின் ஒரு பகுதியையும், வாயின் உள்ளே, அன்ன எலும்பின் ஒரு பகுதியையும் வெட்டி எடுத்து, அந்த இடைவெளிகளில் முன் பகுதி எலும்பை நகர்த்தி உள்புறம் பொருத்தினேன். வெளியே நீட்டிக் கொண்டிருந்த மேல் நாடி எலும்பு, உள்புறம் நகர்ந்து விட்டதால் மேல் உதடும் கீழ் உதடும் பல ஆண்டுகளுக்குப் பின் இணைந்து உறவாடும் நிலை அந்தப் பெண் பெற்றார்.
ஆக கீழ்த்தாடை மூட்டு அறுவை மருத்துவத்தால் வாயும் திறந்து விட்டது. அருவருப்பாக நீட்டிக் கொண்டிருந்த மேல் நாடி எலும்புகளும் சீராக்கப்பட்டு புஷ்பலதாவின் முகம் இயல்பு நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. காலை 10 மணிக்குத் துவங்கிய அறுவை மருத்துவம் மாலை 4 மணிக்கு முடிந்தது. பின் ஒரு வாரம் கழித்து கழுத்தில் இருந்த மூச்சுக் குழாய் கருவியும் (Tracheastomy Tube) அகற்றப்பட்டது.
இரண்டு வாரத்தில் புஷ்பலதா மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப் பெற்றார். ஒரு புதிய முகத்தோடு, புதிய நம்பிக்கையோடு, புதிய வாழ்க்கையைத் துவக்கக் கண்களில் ஆனந்தக் கண்ணீரோடு புஷ்பலதாவும், அதே ஆனந்தக் கண்ணீரோடு கைகூப்பித் தொழுதபடி அவர் அன்னையும் என்னிடம் விடை பெற்றனர். என்னையும் அறியாமல், அந்தப் பெண்ணிற்கு ஒரு புது வாழ்வைக் கொடுத்த மகிழ்ச்சியில் என் கண்களிலிருந்தும் நீர் வடிந்தது. அந்த மகிழ்ச்சியோடும், வெற்றி பெற்ற பெருமிதத்தோடும் அந்தப் பெண்ணிற்கு விடை கொடுத்தேன்.
இரண்டு ஆண்டுகள் கழித்து திடீரென்று புஷ்பலதாவும், அவர் அம்மாவும் என்னைப் பார்க்க வந்தனர். ஒரு தட்டில் பழம், இனிப்புகள், பூவோடு ஒரு திருமண அழைப்பிதழும் வைத்து என்னிடம் நீட்டினர். புஷ்பலதாவிற்குத் திருமணம். இரண்டு மாதம் முன்பு ஏறத்தாழ இருபது ஆண்டுகள் கழித்து புஷ்பலதா ஒருநாள் திடீரென்று என் மருத்துவமனைக்கு வந்தார். கையில் இப்பொழுதும் திருமண அழைப்பிதழ். அவர் மகளுக்குத் திருமணமாம். மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டு, வாழ்த்தி அனுப்பினேன். (இரண்டாம் படம் அப்போது எடுக்கப்பட்ட படம்தான்!) (இந்த மருத்துவம் பணச் செலவு இன்றி என்னுடைய மருத்துவப் பணியில் இது செய்யப்பட்டது.) இது போன்ற எண்ணற்ற மகிழ்ச்சித் தருணங்கள். இந்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளும்போது ஒரு நிகழ்வு என் மனதில் நிழலாடுகிறது.
தஞ்சை மருத்துவக் கல்லூரி, பயிற்சி மருத்துவர் நிறைவு விழாவில் சிறப்புரை ஆற்ற தந்தை பெரியாரை அழைத்திருந்தனர். தன் உரையைத் துவக்கிய தந்தை பெரியார் அய்யா, “என் அன்பார்ந்த கடவுளின் எதிரிகளே” என்றுதான் முதலில் ஆரம்பித்தார். (இந்தப் பேச்சை நம் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தன் கைப்பட எழுதினார்). அவர் சொன்னது எவ்வளவு சரி என்று சிந்தியுங்கள். “அவனன்றி ஓர் அணுவும் அசையாது” என்று பக்தர்கள் கூறுகிறார்கள். அப்பொழுது நோய்கள் வருவது யாரால்? அந்த நோயைத் தீர்க்கும் மருத்துவர்கள், நோயை உண்டாக்கும் ‘கடவுளின்’ எதிரிகள்தானே. மருத்துவராக நான் என் பணியைத் துவக்கி 50 ஆண்டுகள் ஆகிறது. நூற்றுக்கணக்கான பேர்களுக்கு முக மாற்று அறுவை மருத்துவம் செய்துள்ளேன். எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள். என் மருத்துவப் பணியில் இதுவரை ஒரு உயிரிழப்புக் கூட நேர்ந்ததில்லை. ஒரு நோயாளி அறுவை மருத்துவ அரங்கில் (operation Theatre) உயிர் இழந்துவிடும் நிலைக்குச் சென்று விட்டார். அவரை எப்படி காப்பாற்றினோம் என்று அடுத்து எழுதுகிறேன். “நமக்கு விதி இதுதான்” என்றும், “கடவுள் நம்மை இவ்வளவு அசிங்கமாகப் படைத்து விட்டானே” என்று புலம்பும் எத்தனையோ பேருக்கு மருத்துவ அறிவியல், அவர்கள் மூட நம்பிக்கைகளை ஒழித்து, ஒரு புது வாழ்வைத் தருகிறது என்பது தான் உண்மை. அய்யா சொன்னது போல் மருத்துவர்கள் “கடவுளின் எதிரிகள் தானே?”
(தொடருவேன்)