வேலூர், மே 16- வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு விழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் (14.5.2025) காலையில் தேரோட்டம் நடைபெற்றது. காலை யில் தொடங்கிய தேரோட்டம் முக்கிய வீதிகளில் வந்தது.
மாலை 6.45 மணி அளவில் அந்த தெருவில் உள்ள ஒரு வீட்டின் ஓரத்தில் இருந்த கால்வாயில் தேர் இறங்கி அந்த வீட்டின் மீது சாய்ந்து நின்றது. இதனால் தேரை இழுத்த பக்தர்கள் மற்றும் தேரோட்டம் பார்க்க வந்திருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து விலகிச் சென்றனர். கால்வாயில் தேர் இறங்கி சாய்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேர் செல்லும் பாதையில் ஏற்கெனவே மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததாலும், தேருடன் ஜெனரேட்டர் இணைக்கப்பட்டு மின்விளக்கு வசதி செய்யப்பட்டு இருந்ததும் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி இருளில் மூழ்கியது.
உடனடியாக இந்த தகவல் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிவாணன் ஆகியோருக்குத் தெரி விக்கப்பட்டது. அதன்பேரில் அதி காரி கள் உத்தரவை தொடர்ந்து காவல்துறை யினர், வருவாய்த்துறையினர், பொதுப்பணி துறையினர், நகராட்சி அதிகாரிகள், தீய ணைப்பு துறையினர் உள்ளிட்டோர் விரைந்து வந்து 2 பொக்லைன் எந்திரங்களை வரவழைத்து தேரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு தேர் கால்வாயில் இருந்து தூக்கி நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ஜெனரேட்டர் மூலம் மின் இணைப்பு செய்யப்பட்டு மீண்டும் தேரோட்டம் தொடங்கியது.