மதம், மக்களை இப்படிப் பிரித்துச் சண்டையை உருவாக்குகிறது. காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெரு மாளுக்கு ஆண்டுதோறும் திருவிழா நடைபெற்று வருகிறது!
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் திருவிழா என்றவுடன், சங்கரராமன் கொலை, ஜெயேந்திரர், விஜ யேந்திரர் ஆகியோரின் பெயர்கள் நினைவுக்கு வரும்
ஆனால், மக்களுக்கு அது நினைவில் இருந்தாலும், மடம் அதை மறந்துவிட்டு, வழமைபோல அருளாசி, அடுத்த வாரிசுக்குப் பட்டம் சூட்டுதல், ஊழல்பற்றி பேசும் ஆளுநர் அந்த தனியார் மடத்து தனி நிகழ்வில் பங்கேற்று, தாம் எடுத்த பதவிப் பிரமாணத்திற்கு எதிராகவே நடந்துகொள்ளும் வாடிக்கையைக் கையாண்டு, தனது அரசுப் பணியை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பன ஒருபுறம்.
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒற்றைக் கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே மதம் என்று ‘‘மத ஒற்றுமைக்கு மொத்தக் குத்தகை எடுத்துவிட்டது ஆரியமும், ஆர்.எஸ்.எசும் – அதன் கிளையான பா.ஜ.க. ஒன்றிய ஆட்சியும்.’’ அதன் இலட்சணம் இதுதான்!
ஹிந்து மதம் ஒரே மதமா? அன்று முதல் இன்றுவரை என்றைக்குமே அவ்வாறு இருந்ததேயில்லையே!
‘ஷண் மதம்’ (ஆறு மதங்கள்) என்று அவர்களே கூறும் ஹிந்து மதம் என்பதில் சைவமும் அடக்கமாம்! வைஷ்ணவமும் உள்ளடக்கமாம்!
அந்த வைஷ்ணவமாவது ஒரே பிரிவில் உள்ளதா? இல்லையே!
வடகலை, தென்கலை என்று இரண்டு பெரும் பிரிவு அதில்.
அதில் ஒன்று சமஸ்கிருதத்தை முன்னிறுத்துகிறது;
மற்றொன்று தமிழில் – ‘‘பிரபந்தம்’’ பாடியும் பக்தியைப் பரப்புவது.
இரு பிரிவினருக்கும் கடந்த 100, 150 ஆண்டுகளாக நாமச் சண்டை, விழாவில் பாடல் பாடுவது போன்ற பற்பல பிரச்சினைகளால் சண்டையோ, சண்டை! குடுமிப்பிடி சண்டை, கோஷ்டி சண்டை.
ஆண்டுதோறும் இதில் வடகலைக்காரர்களுக்கும், தென்கலைகாரர்களுக்கும் பண்டிகை உலாவில்கூட ஒருவருக்கொருவர் குடுமிப்பிடிச் சண்டை.
கோவில் யானை பொதுவானது என்றாலும், அந்த யானைக்கு எந்த வகை நாமம் போடுவது என்பது பிரிவி கவுன்சில் வரை சென்றதுண்டு. பிறகு இடையறாது உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை வழக்கு! வழக்கு!!
மூன்று யானைகள் இறந்து போன பிறகு, வழக்கு நூறாண்டு தாண்டியும் நிலுவையில் உள்ளது.
வெள்ளைக்கார நீதிபதிக்கு வடகலை, தென்கலை நாமம் தாத்பரியம் புரியவில்லை. ஒரு வெள்ளைக்காரர் இந்தியாவில் இருந்து, பின்னர் பிரிவுகவுன்சிலில் (அது House of Lords என்ற பிரபுக்கள்சபை என்ற மேல்சபை பார்லிமெண்ட்) பணியாற்றியவர் நீதிபதியிடம், ‘‘இங்கிலீசு எழுத்து U (யூ)க்கும், Y (ஒய்)க்கும் உள்ள வித்தியாசம்தான்!’’ என்றார்.
‘‘இதற்காகவா இவ்வளவு பெரிய சண்டை’’ என்று கேட்டார் நீதிபதி சிரித்துக்கொண்டே!
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.வீராசாமி, கோவில் யானைக்கு எந்த நாமம் என்பதில் இருதரப்பும் தத்தம் நிலையை விட்டுக் கொடுக்காத நிலையில், ஓர் இடைக்கால சமரச ஏற்பாடாக,
ஒரு வாரம் U நாமமும், மற்றொரு வாரம் Y நாமமும் போட ஒரு தற்காலிகத் தீர்ப்பளித்தார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம் என்பதன் உள்ளே உள்ள தோலை உரித்துப் பார்த்தால் யதார்த்தம் இப்படியே!
கடவுள் நெற்றியில் எப்படி இருமுக பாவங்கள்?
‘‘தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தன்’’ என்பார்கள், பக்தர்கள்!
இந்தப் பிரச்சினைக்குப் பின் ஏன் தெருவில், கடவுள் ஊர்வலத்தில் இப்படி முஷ்டி பலத்தால் சோதனை என்று கேட்கிறார் காஞ்சி வரதப்பா என்ற பசியுள்ள பக்தர்!
என்னே விநோதம் பாரு!
எவ்வளவு ஜோக்கு பாரு!!
இதற்கிடையில், கடன் வாங்கித் திருப்பிக் கொடுக்காதபோது, கோபத்தைக் காட்ட, கடனாளியைப் பார்த்து ‘‘எனக்கென்ன ‘‘நாமம்’’ போடலாம் என்ற நினைப்பா?’’ என்று கேட்பர்.
அப்படியானால்… ‘‘நாமம் போடுவது’’ என்றால், அதன் உண்மை அர்த்தம்தான் என்ன?
போராட்டம் நடத்துவோர்கள்கூட நெற்றியில் பட்டை நாமம் போட்டோ, மொட்டை அடித்தோ போராட்டங்களை நடத்துவது இப்போது நாளும் பெருகி, நாட்டில் நடைமுறையில் உள்ளது. அது இந்தப் பக்திக்குப் பெருமையா? சிறுமையா?
‘புண்பட்ட’ உங்கள் மனதிற்கு எப்போது மருந்து?
கேட்கிறார், நம் ஆபீஸ் பையன்!