ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம் சில பாடங்கள்
பாடம் 4
ஒவ்வொரு நாளும் தேர்வுதான்!
சிட்னியில் 15.3.2025 அன்று நடைபெற்ற அரங்கக்கூட்டம்தான் ஆஸ்திரேலியாவில் ஆசிரியர் பங்கேற்ற முதல் பொது அரங்க நிகழ்வு. அக்கூட்டம் பற்றிய மற்ற செய்திகளை அறிவதற்கு முன்னால் இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் பற்றி சில செய்திகள் . ஆஸ்திரேலியாவில் 2022,ஆம் ஆண்டிற்குப் பிறகு சில ஆண்டுகளாக வாட்ஸ் ஆஃப் (WhatsApp) குழுவாக இயங்கி வந்த பெரியாரிய மற்றும் அம்பேத்கரிய சிந்தனையாளர்களின் அமைப்பாகும். ஆஸ்திரேலியாவில் பரவிவருகின்ற ஆர் எஸ் எஸ் சிந்தனையுடைய அமைப்புகளால் ஜாதிப் பாகுபாடும் ஸநாதனமும் இந்துப் பண்பாடு என்று பரப்படுவதையும் அதனை இந்தியக் குழந்தைகளுக்கான பாடத்திட்டத்திலும் இணைக்கும் நடவடிக்கைகளையும் முறியடிப்பதற்காக, சிந்தனையில் இருந்து செயல்பாட்டுக்கு மாறினார்கள். ஆஸ்திரேலிய தொல்குடி மக்களுக்கு எதிரான நிறவெறி, இனவெறி பாகுபாடுகளைப் போல ஜாதி என்பதை மத, இன, நிற பாகுபாடுகளின் பட்டியலில் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து செயல்படத் தொடங்கினார்கள். அதனை முறைப்படி முன்னெடுப்பதற்காக 2023 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலிய சட்டப் படி “பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம் ஆஸ்திரேலியா” Periyar Ambedkar Thought Circle Australia ( PATCA) என்று பதிவு செய்த அமைப்பாக மாற்றி இயங்கத் தொடங்கினார்கள்.
பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்ட அமைப்பின் தொடர் முயற்சிகளின் பலனாக ஆஸ்திரேலியாவில் முதன் முறையாக, இனக் குழுக்களின் ஒருங்கிணைப்பிற்கான கவுன்சில் , (Federation of Ethnic Communities Councils of Australia) FECCA என்ற அரசு நிறுவனம், ஆஸ்திரேலியாவில் நிகழும் ஜாதிய பாகுபாடுகளை சட்டப்படி பதிவு செய்துள்ளது. இவ்வாறு ஓராண்டு செயல்பாடுகளுக்குப் பின் ஒத்த சிந்தனையாளர்கள், மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து 2024 ஜூன் 28 ‘அன்று, அமைப்பின் தொடக்க விழா சிட்னியில் உள்ள அஞ்சப்பர் உணவகத்தின் மாடியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் அவர்கள் காணொலி வழியாக சிறப்புரை ஆற்றித் தொடங்கி வைத்தார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள், எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் நானும் வாழ்த்துரையாற்றினோம்.
அடுத்த ஓராண்டிற்குள் ஆசிரியரை அழைத்து வந்து சிறப்பான நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென்று விரும்பிய பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம் அந்த முதல் கூட்டத்தை மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் ஏற்பாடு செய்திருந்தது. ஆசிரியர் அவர்களும் மிகுந்த உற்சாகத்துடன் ஒப்புதல் அளித்தார்கள். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலே ஆசிரியரின் உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டதால் அவரது ஆஸ்திரேலிய பயணம் குறித்து உறுதியாக சொல்ல இயலாத நிலை இருந்தது. ஆனால் அமைப்பின் பொறுப்பாளர்கள் எப்படியும் ஆசிரியர் நலம் பெற்று வந்துவிடுவார் என்று உறுதியாக எண்ணி ஏற்பாடுகளையும் விளம்பரங்களையும் செய்யத் தொடங்கி்விட்டார்கள். இந்த நிலையில் ஆசிரியரின் ஆஸ்திரேலியா வருகை பற்றிய செய்திகள் பரவிய உடன் சில ஜாதி தேசியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதாக சில செய்திகள் வெளியாயின அல்லது பரப்பப் பட்டன. இதனை ஆசிரியருக்கும் தெரியப் படுத்தினோம். அதனை கேள்விப்பட்டவுடன் ஆசிரியர் மகிழ்ச்சி அடைந்தார். நல்லது அதுதான் நமது வெற்றி! உடல்நிலை எப்படி இருந்தாலும் நான் வந்துவிடுவேன்! என்று அறிவித்தார்!
5.3.2025 அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து ஆஸ்திரேலியா நிகழ்ச்சிகள் பற்றிக் கூறினார். ஆசிரியருடன் நானும் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள், பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் மற்றும் துணைப்பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் சென்றிருந்தோம். முதலமைச்சர் அவர்கள் நிகழ்ச்சி பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். எங்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து கூறினார்.
சிட்னி நிகழ்ச்சிக்கு முதல்நாள் திரைக் கலைஞர் இனமுரசு சத்யராஜ் அவர்கள் ஆஸ்திரேலிய நிகழ்ச்சிகள் பற்றியும் சிட்னி கூட்டம் பற்றியும் ஒரு காணொலி செய்தி வெளியிட்டிருந்தார். இவை அனைத்தும் சேர்ந்து ஏராளமான எதிர்பார்ப்பை உண்டாக்கி விட்டன. எதிர்ப்பாளர்களின் செய்திகளோ நிகழ்ச்சிக்கு எழுச்சியை கூடுதலாக சேர்த்துவிட்டது.
இத்தனை செய்திகளைப் பற்றிய சிந்தனைகளோடு 15 ஆம் தேதி காலை ஆசிரியரை சந்நித்தோம். அன்றைய நிகழ்ச்சியின் அழைப்பிதழோடு மேசையில் வரிசையாக புத்தகங்கள். “அசல் மனுதர்மம், பெண் ஏன் அடிமையானாள்?, இந்து மதம் எங்கே போகிறது’’ …தொடர்ந்து கொண்டே போகிறது வரிசை. ஒவ்வொரு புத்தகத்திலும் அடிக்கோடிட்ட பக்கங்களுக்கு அடையாளம்.. அந்தப் பக்க எண்கள் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் எழுதப்பட்டிருந்தன. வயது 92; அதில் 83 ஆண்டுகளாகப் பேசி வருகிறார். சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து பயணித்த ஊர்கள், மாட்டு வண்டிப் பிரச்சார மேடைகள் முதல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அரங்கம்வரை உரையாற்றியவர்.. தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட மாணவராக இன்று நடக்கும் கூட்டத்தில் பேச வேண்டிய முக்கிய செய்திகளையும் அதற்கு ஆதார நூல்களையும் சரிபார்த்துக் கொண்டிருக்கிறார். முதல் முறையாகவா அந்த நூலைப் படிக்கிறார்? இல்லை. படித்துப் படித்து தளர்ந்து போன புத்தகங்கள்தான் அவை. ஆனாலும் தான் சொல்லும் எந்த செய்தியிலும் பிழை நேர்ந்து விடக்கூடாது என்ற அக்கறையுடன் ஆசிரியர் எழுதிக் கொண்டிருந்ததை மலைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தோம். கூட்டம் என்றால் புத்தக விற்பனை வேண்டாமா? அதுதானே கூட்டத்தின் வெற்றிக்கு அளவுகோல்! சென்னையில் இருந்து முடிந்தவரை நமது சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தின் வெளியீடுகளை கொண்டு சென்றி ருந்தோம். அந்த நூல்களை வகை பிரித்து கட்டி எடுத்து வைத்தோம். எனக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு என் பெற்றோருடன் மாநாடுகளில் புத்தகம் நாட்காட்டிகள் விற்ற அனுபவம் நினைவிற்கு வந்தது.
அனைத்தையும் சரிபார்த்து எடுத்துக்கொண்டு கூட்டத்திற்குக் குறித்த நேரத்தில் சென்று விட்டோம். சிட்னியின் முக்கியமான பகுதியில் Went worth while என்ற இடத்தில் அமைந்த அழகான கட்டடம் . அந்த அரங்கில் 250 பேர் அமர முடியும். நிகழ்ச்சியில் பார்வையாளராக வருவதற்கு கட்டணம் வேறு வைத்திருந்தார்கள். பணம் கட்டி நமது கூட்டத்திற்கு எத்தனை பேர் வருவார்கள் என்று நினைத்துச் சென்றால் கூட்டம் தொடங்குமுன்பே அரங்கம் நிறையத் தொடங்கிவிட்டது. முடியும்போது பலர் இடமின்றி நின்று கொண்டிருந்தார்கள். நமது இயக்க வரலாற்றில் புதிய ஒரு சாதனையை பதிவு செய்தது சிட்னி நிகழ்ச்சி. அதற்கு மேலும் சிறப்பினைக் கூட்டியது தோழர் பைந்தமிழ் தம் இணையர் மற்றும் குழந்தைகளுடன் இணைந்து இசைத்த பறை நிகழ்ச்சி. பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம் தோன்றிய பின்னணியை விளக்கியதோடு ஆசிரியரின் வருகை தங்களுக்கு புதிய நம்பிக்கையைத் தருவதையும் எடுத்துக்கூறி அனைவருயும் வரவேற்றார் ஆஸ்திரேலியா பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவர் முனைவர் அண்ணாமலை மகிழ்நன். பசுமை கட்சி எனும் Greens Party யின் முன்னாள் செனட்டர் லீ ரியோனன் அவர்களின் உரையும் …. வழக்குரைஞர் துர்கா ஓவன் அவர்களுடைய உரையும் பல்வேறு கோணங்களில் தந்தை பெரியார் சிந்தனைகளின் தேவையை எடுத்துரைத்தன. அவர்களைத் தொடர்ந்து நான் பேசியபிறகு ஆசிரியர் தன் வகுப்பைத் தொடங்கினார். அரங்கம் அமைதியாய் கேட்கத் தொடங்கியது.
தொடரும்…