ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம் சில பாடங்கள் (3)

viduthalai
7 Min Read

பாடம் 3

அறிவியல் மனப்பான்மையே வாழ்வியலின் அடிப்படை

சிட்னியில் இயங்கும் SBS வானொலி ஆஸ்திரேலியா அரசால் 50 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. 24 மணி நேரமும் இயங்கும் இந்த வானொலியில் ஆங்கிலம், தமிழ், இந்தி, அரபு,வியட்னமிஸ்,மேண்டரின் உட்பட 64 மொழிகளில் நிகழ்ச்சிகள்  ஒலிபரப்பாகின்றன. ஆஸ்திரேலியாவில் குடியேறி வாழும் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களுக்கு அவர்களது மக்கள்தொகைக்கேற்ப நேரப் பங்கீடு செய்யப்பட்டு அவரவர் தாய்மொழிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப் படுகின்றன. வாரத்தில் நான்கு நாட்கள் ஒவ்வொரு மணி நேரம் தமிழ் ஒலிபரப்பு நடைபெறுகிறது. சமூக,அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நேர்காணல்கள், திரைப் பாடல்கள் மற்ற பல்சுவை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. வெளிநாட்டில் இருந்து வரும் முக்கிய விருந்தினர்களை கட்சி வேறுபாடின்றி அழைத்து நேர்காணல் செய்வது அதன் சிறப்புப் பகுதியாகும். அந்த நேர்காணலுக்குத்தான் ஆசிரியர் அழைக்கப்பட்டார்.

SBS வானொலிக்காக ஆசிரியரை பேட்டி கண்டவர்கள் ரேசெல் என்று அழைக்கப்படும் திரு. ரேமண்ட் செல்வராஜ், மற்றும் திரு. குலசேகரம் சஞ்சயன்ஆகியோர்.  ரேமண்ட் செல்வராஜ்  தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோடிமுனை என்ற ஊரைச் சேர்ந்தவர். சென்னைப் பலகலைக் கழகத்தில் இதழியல் முதுகலை பட்டமும் பிலிப்பைன்ஸ் நாட்டில் முனைவர் பட்டமும் பெற்றவர். பிலிப்பைன்ஸ் வெரித்தாஸ் வானொலியில் பணியாற்றியவர். குலசேகரம் சஞ்சயன்  இலங்கை,யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சென்னையில் பொறியியல் பட்டமும் அமெரிக்காவில் ஆய்வுப் பட்டமும் பெற்றவர்.  மிகுந்த தயாரிப்புடன் இருவரும் ஆசிரியரிடம் கேள்விகளைத் தொடுத்தனர். சற்றும் தாமதமின்றி ஆசிரியரிடம் இருந்து வந்த பதில்கள், அதிலிருந்து கிளம்பிய துணைக்கேள்விகள் அதற்கும் ஆசிரியரின் பதில்கள் என ஒருமணிநேரத்திற்கும் மேலாக விறுவிறுப்பாக நடந்த அந்தப் பேட்டி மூன்று பகுதிகளாக SBS வானொலியில் ஒலிபரப்பானது. முழுமையான பேட்டிவிடுதலையில் வெளியிடப்பட்டது..

கி.வீரமணி

ஆசிரியருடன் நானும் ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவர் அண்ணாமலை மகிழ்நன், துணைத்தலைவர் டாக்டர் ஆரூண் ஆகியோர் சென்றிருந்தோம் SBS வானொலி நிலையத்தில் நாங்கள் கண்ட சில அமைப்பு முறைகள் வியப்பிற்கும் பாராட்டிற்கும் உரியதாக இருந்தன. குறிப்பாக அங்கு பணி புரிபவர்கள் மன அழுத்தமின்றி வேலை செய்வதற்காக பல்வேறு விளையாட்டுக் கருவிகள் கொண்ட ஒரு பிரிவே உள்ளது. அந்தப் பகுதியே வண்ணமயமாக ஒளி வீசியது. இத்தகைய ஏற்பாடுகள் தொடர்ச்சியாக வேலை செய்பவர்களுக்கு மனமாறுதலும், மகிழ்ச்சியும் தரக்கூடியவை என்பது பற்றியும் ஆஸ்திரேலியா அரசு மக்களுக்கான வேலை நேரத்தையும் ஓய்வு நேரத்தையும் தெளிவாக வரையறை செய்திருப்பது மிகச்சிறப்பு .

நேர்காணல் முடிந்த பிறகு எங்கள் அனைவருக்கும் ரேமண்ட் செல்வராஜ் மற்றும் குலசேகரம் சஞ்சயன் இருவரும் தங்கள் வீட்டில் இருந்து தாங்களே சமைத்து எடுத்து வந்த மிகச் சுவையான உணவை அன்புடன் பரிமாறினர். ஆசிரியர் இறைச்சி உணவுவகைகளை இப்பயணத்தில் முழுமையாகத் தவிர்த்து விட்டார். எனவே ஆசிரியருக்காக காய்கறி உணவு வகைகளும் எங்களுக்கு மீன், கோழி உணவுகளும் இருந்தன.

ஆசிரியர் மீது அவர்கள் காட்டிய அன்பும் மரியாதையும் மிகவும் நெகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. அதைவிட சிறப்பு என்னவென்றால் அவர்கள் பேட்டியின் போது கேட்ட கேள்விகளில் எந்த சமரசமோ விட்டுக்கொடுத்தலோ இல்லை. அது கடமை இது உணர்வு என்ற நேர்க்கோடு இரண்டிற்கும் இடையில் தெளிவாக இருந்தது. கூடுதலாக மேலும் மார்ச் 15 ஆம் தேதி மாலை சிட்னியில் நடைபெற்ற நிகழ்விற்கு ரேமண்ட் செல்வராஜ் தனது இணையரான கிரக்கோ காவாஷீமா  ( ஜப்பானைச் சேர்ந்தவர், சமூகப் பணியில் பட்டம் பெற்றவர், குடும்ப வன்முறைகளுக்கு எதிராக பணிபுரிந்து வருபவர்), குலசேகரம் சஞ்சயன் தனது இணையர் சுபா(மானுடவியல் ஆய்வாளர்) அவர்களுடன் வந்து கலந்து கொண்டது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் செய்தி.

இத்தகைய சந்திப்பு, நேர்காணல் அருமையான உணவு என முடிந்த 13 ஆம் தேதி இரவு ஆசிரியரை அவர் தங்கியிருந்த அறையில் விட்டு விட்டு நாங்கள் விடைபெற்றுக்கொண்டோம். மறுநாள் காலை ஆசிரியர் நடைப்பயிற்சிக்குச் செல்லவில்லை, ஓய்வெடுக்கிறார் என்று டாக்டர் ஆரூண் அவர்கள் தெரிவித்தார். நாங்கள் வழக்கம்போல் காலையில் புறப்பட்டு ஆசிரியர் அறைக்குச் சென்றோம். எனக்கு முதல்நாள் இரவு உண்ட உணவில் ஏதோ ஒன்றால் நெஞ்செரிச்சல்  இருந்ததால் நான் காலை உணவு உண்ணாமல் சென்றேன். நாங்கள் சென்றபோது ஆசிரியர் எழுந்து தயாராகி விட்டார். எழுவதற்குத் தாமதமான காரணம் பற்றி கேட்டபோது கபிலன் கூறினார், ‘‘நேற்று நடு இரவில் அய்யாவுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. (Breathing discomfort)அதனால் நீண்ட நேரம் நாற்காலியில் தூங்காமல் அமர்ந்திருந்தார். வெந்நீர் குடித்தார். அதிகாலையில்தான் லேசாக தூக்கம் வந்தது . அதன்பிறகுதான் தூங்கினார்.ஓய்வெடுத்தால் சரியாகிவிடுவார்’’ என்றார். எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியாகவும் சற்று அச்சமாகவும் இருந்தது. எங்களையோ அல்லது டாக்டர் ஆரூண் அவர்களையோ அழைத்திருக்கலாமே என்று கேட்டதற்கு ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை சிறிது நேரம் உட்கார்ந்திருந்தால் போதும் என்று ஆசிரியர் கூறிவிட்டார். சிக்கலாக இருந்தால் அய்யாவே உடனடியாக சொல்லிவிடுவார் என்றார். பிறகு ஆசிரியர் அவர்களிடம் எனக்கு ஏற்பட்ட உடல் சிக்கல் பற்றிக் கூறினேன். அதனைக் கேட்டவுடன் ஆசிரியர் அவர்கள் பொறுமையாக நாம் சாப்பிட்ட உணவு வகைகளில் பொதுவாக இருந்தது இனிப்புதான் என்பதையும் அதில் உள்ள ஏதோ ஒரு பொருள் ஒவ்வாமையை உருவாக்கியிருக்கும் என்றும் விளக்கினார். எனக்கும் அந்தத் தொல்லை இருந்ததால் ஆசிரியர் சொன்ன விளக்கம் சற்று சமாதானமளித்தது. இருந்தாலும் ஒரு கவலை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அறிவியல் மனப்பான்மை என்று படிக்கிறோம், பேசுகிறோம், ஆனால் அதை வாழ்க்கை யில் பின்பற்றுபவர் ஆசிரியர்தான் என்று நினைத்துக் கொண்டேன்.

கி.வீரமணி

எங்களுடன் வந்திருந்த அண்ணாமலை மகிழ்நன் இணையரான இராணி மகிழ்நன் கவனிப்பிலும் கண்டிப்புடன் இருப்பவர். சிட்னியில் ஆசிரியருக்கு உரிய உணவு வழங்கும் பணியை அவர் பொறுப்புடன் கவனித்துக்கொண்டார். இராணி இலங்கை யாழ்ப் பாணத்தைச் சேர்ந்தவர். மகிழ்நன், சேலம் தமிழ்மறவர் புலவர் அண்ணாமலை – சரசு அம்மையாரின் மகன். இராணி- மகிழ்நன் இணையேற்பு விழாவை 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோவையில் நடைபெற்ற ஈழவிடுதலை ஆதரவு மாநாட்டில் ஆசிரியர் அவர்கள் நடத்தி வைத்தார். அதே போன்று இவர்களுடைய மகள் யாழ்திலீபா- இளங்குமரன் இணையேற்பு விழாவினை 2010 ஜனவரி மாதம் சேலம் நகரில் ஆசிரியர்தான் நடத்திவைத்தார். இராணி அவர்கள் மீது ஆசிரியர் எப்போதும் கூடுதலான அன்பும் பரிவும் காட்டுவார். எனவே இராணி உடன் இருந்து கவனித்துக் கொண்டது எங்களுக்கு சற்று நிம்மதியைத் தந்தது.

14 ஆம் தேதி மாலை சிட்னியின் பெல்லா விஸ்தா (Bella Vista) என்ற பகுதியில் வசிக்கும் திரு விஜயகுமார் அவர்கள் வீட்டிற்கு விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்தோம். அதுவரை ஓய்வுதான் என்று சொன்னாலும் அந்த நேரத்தில் மற்றொரு வானொலிப் பேட்டி பதிவு செய்யப்பட்டது வானிசை என்ற வானொலிக்காக. என்னுடன் 15 நிமிடங்கள் ஆசிரியருடன் 25 நிமிடங்கள் கேள்விகள் – பதில்கள் பதிவு செய்யப்பட்டன. குறித்த நேரத்தில் உடனடியாக பதில் சொல்ல வேண்டுமே என்பதற்காக அவர்கள் முன்கூட்டியே கேள்விகளை அனுப்பி இருந்தார்கள். ஆனால் ஆசிரியரோ கேள்விகளை நேரடியாகவே கேட்கட்டும்.அப்போதுதான் விடைகள் சுவையாக இருக்கும் என்று கூறிவிட்டார்.

நேர்காணல் முடிந்த பிறகு  விஜயகுமார் அவர்களுடன் அவரது இல்லத்திற்குச் சென்றோம். விஜயகுமார்  ஆசிரியரின் மூத்த மருமகள் சுபிதா அவர்களின் சகோதரர். நீண்ட காலமாக ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் வசிப்பவர். அவர்கள் வீட்டில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தனர். அது ஒரு குடும்ப சந்திப்பாக அமைந்தது. அங்கு வந்திருந்த  திருசேகர் என்ற நண்பர் , தனது அத்தை தந்தை பெரியார் காலத்தில் இயக்கத்தில் பணியாற்றியவர் என்றும் அவர் பெயர் இந்திராணி பாலசுப்ரமணியம் என்றும் கூறினார்.

கி.வீரமணி

சுயமரியாதை இயக்க வீராங்கணை இந்திராணி அம்மையாரின் உறவினரை சந்தித்தது பெருமகிழ்வை ஏற்படுத்தியது. ஆசிரியர் அவர்கள் இந்திராணி அம்மையாரின் தெளிவான சிந்தனைகள், துணிச்ச லான செயல்பாடுகள் பற்றியும் அவரது கணவர் பாலசுப்ரமணியம் அவர்கள் சிறைத்துறை அதிகாரியாகப் பணியாற்றியதையும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் கொலை வழக்கில் கைதாகி அவர் பணியாற்றிய சிறையில் தண்டனைக்கைதியாக இருந்ததையும் அவர் மீது அக்கறை செலுத்தியதற்காக பாலசுப்ரமணியம் அவர்கள்மீது துறை ரீதியான குற்றச்சாட்டு எழுந்தது பற்றியும் பல்வேறு செய்திகளை நினைவூட்டினார். அதனைத் தொடர்ந்து  சேகர்   அக்குற்றச்சாட்டின் பின்னணியில் இருந்த பல செய்திகளையும் அதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தியாகராஜ பாகவதர் அவர்கள் சிறையில் இருந்து வெளியானபிறகு நடந்த நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டார். அம்மையார் இந்திராணி பாலசுப்ரமணியம் அவர்களைப் பற்றிய கட்டுரை அடங்கிய ‘திராவிடப் போராளிகள்’ என்ற நூலை திருசேகர் அவர்களுக்கு அளித்தேன்.

அந்தப் பகுதியிலேயே வாழும் மற்றொரு தோழர் ஆனந்தன் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது வாழ்விணையர் அனிதாவுடன் வந்து தங்கள் இல்லத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார். அனிதாவின் தந்தை காலம்சென்ற பேராசிரியர் இரத்தினசாமி ஓய்வு பெற்ற பேராசிரியர். அவரது தாயார் பேராசிரியர் முத்துலட்சுமி   திருச்சி சீதாலட்சுமி இராமசாமி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். வள்ளலார் நெறியில் வாழ்ந்து வருபவர். அனிதாவின் தமக்கை உமாராணி சிட்னியில் நூலகராகப் பணியாற்றுகிறார். இரவு உணவு முடிந்து நேரம் கடந்த பிறகும் அவர்களது அழைப்பை ஏற்று அவர்கள் இல்லத்திற்குச் சென்று சிறிது நேரம் அவர்களுடன் ஆசிரியர் உரையாடினார். பேராசிரியர் முத்துலட்சுமி அவர்கள் ஆசிரியரை அன்புடன் வரவேற்று சமூகத்தின் நன்மைக்காக ஆசிரியர் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கி.வீரமணி

ஆசிரியர் உறங்கச் சென்றபோது  இரவு மணி பதினொன்று. நாங்கள் விடைபெறும்போது ஆசிரியர், “ மகிழ்நன், நாளைக்குதான் எங்களுக்கு முதல் தேர்வா? “ என்று கேட்டார். அடுத்தநாள் சிட்னியில் நடைபெற இருந்த முதல் பொதுக்கூட்டத்தை தான் அப்படிக் குறிப்பிட்டார் என்பது புரிந்தாலும்

தேர்வா ? ஆசிரியருக்கா ? என்ற கேள்வியுடன் அடுத்த நாள் நிகழ்ச்சிஏற்பாடுகள் பற்றிய சிந்தனைகளுடன் விடைபெற்றோம். ஆசிரியர் கேட்ட கேள்வியின் பொருள் மறுநாள் புரிந்தது!!

(தொடரும்)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *