ஆறாவது ஆண்டில், குடிஅரசுக்கு சற்று பொதுஜன எதிர்ப்பு பலமாகத் தோன்றியதாக சிலர் நினைத்ததுடன் குடிஅரசு குன்றிவிடுமோ என்று கருதிய சிலர் அதாவது குடிஅரசின் பெயரைச் சொல்லிக் கொண்டும், சுயமரியாதை இயக்கத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டும் வாழ்க்கையை நடத்தத் தீர்மானித்திருந்த சில சுயமரியாதை நண்பர்களின் ஆசைக்கு பங்கம் ஏற்கப்பட்டதால் அக்கூட்டத்தினர்களின் எதிர்ப்புக்கும் ஆளாகியதோடு குடிஅரசை ஆதரிப்பவர்களாக வேஷம்போட்டு பயனடைந்து கொண்டிருந்த சில பெரிய மனிதர்கள் (அதாவது ஜஸ்டிஸ் கட்சியார்கள்) என்பவர் களுடைய அதிருப்திக்கும், அலட்சியத்திற்கும் ஆளாகவேண்டி இருந்தது. இதை சமாளிப்பது ஒரு முக்கிய காரியமாய் இருந்தாலும், முற்பட்ட புதிய எதிர்ப்புகளையும் அது அடையத்தவறவில்லை. அதுமாத்திரமல்ல, ஆறாவது ஆண்டில் எல்லா மதங்களுக்கும் விரோதி என்றபெயரையும் பெற்றது. எப்படி இருந்தும் இவையனைத்திற்கும் தலைகொடுத்து ஆறாவதாண்டைக் கடந்து ஏழாம் ஆண்டில் பிரவேசித்துவிட்டது.
மிக நெருக்கடியான ஆண்டு
ஏழாம் ஆண்டோ மிக மிக நெருக்கடியான ஆண்டாய் கழிய வேண்டியதாயிற்று. சகல மதங்களும் ஒழிக்கப்படவேண்டும் என்று வெளிப்படையாய் தீர்மானம் போடப் பட்டுவிட்டது. ஏழை பணக்காரத்தன்மை அழிக்கப்பட வேண்டுமென்றும் பிரச்சாரம் தொடங்கப்பட்டுவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டம் குறைய ஆரம்பித்து விட்டது. வாலிபர்களே கும்பல் கும்பலாய் வந்து கூடினார்கள். கொள்கைகள் பெரியோர்களால் பரிகசிக்கத்தக்க தாய்விட்டது. பழிப்புகள் பலத்துவிட்டன. இவைகள் எல்லாம் சுலபமாய் சமாளிக்கக் கூடியதாய் இருந்தாலும் மற்றொரு பக்கம் பத்திராதிபருக்கு உடல் நிலை குன்றிவிட்டது. ஓய்வெடுக்க வேண்டிய அவசியமேற்பட்டுவிட்டது. கடைசியாய் பத்திராதிபர் பொறுப்பை தோழர் சிதம்பரனார் வசம் ஒப் படைத்து விட்டு, பத்திராதிபர் மேல் நாட்டுக்கு சென்றுவிட்டார். இந்தச் சமயத்தில் இவ்வளவு எதிர்ப்பும், உள் கலகமும், பொருளாதார நெருக்கடியும் இருந்தும் ஒன்றையும் சட்டை செய்யாது தென்னாட்டில் இயக்கத்தை சந்து பொந்துகளிலும், கிராமங்களிலும் பரவும்படி செய்துவிட்டதுடன் தாராளமாய் ஏழாவது ஆண்டைக் கடந்து எட்டாவது ஆண்டில் நுழைந்து கொண்டது.
எட்டாவது ஆண்டு, சமதர்ம ஆண்டாய் திகழ்ந்தது. பத்திராதிபர் மேனாட்டு சுற்றுப்பிராயணத்தில் இருந்து திரும்பியதும் வழக்கம்போல் எதிர்ப்புகள் ஒரு புறமிருந்தாலும், புதிய எதிரிகள் பலர் தோன்றி இருந்தாலும், சர்க்கார் பயம் நிமிஷத்துக்கு நிமிஷம் இருந்தாலும் குடிஅரசு எட்டாவது ஆண்டில் புரட்சி கோலம் கொண்டுவிட்டது. வாசகர்களுக்கு சமதர்மப் பைத்தியத்தை ஊட்டி விட்டது. அதன் நோக்கத்தையும், திட்டத்தையும் உறுதியுடன் வெளிப் படுத்தி விட்டது. அதன் பயனாய் உண்மை தோழர் களை வடிகட்டி வருகின்றது.
மனப்பால் குடிப்பது என்ன ஆகும்?
இந்த நிலையில் எட்டாம் ஆண்டைக் கடந்து 9ஆம் ஆண்டில் பிரவேசிக்கின்றது. ஆரம்பம் வெகு உக்கிரமான எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டிய பொறுப்புகள் அதன் தலைமீது விழுந்துகிடக்கின்றது என்பதை இந்து முஸ்லீம், கிறிஸ்தவ, வருணாசிரமக் காரர்களும், சனாதனதர்மிகளும் உறுமும் உறுமலைப் பார்த்தாலே தெரியவரும். அவர்கள் தங்கள் குற்றத்தைச் சிறிதும் கவனியாமல் தங்கள் சனாதனதர்மங்களுக்கு ஏற்பட்ட ஆபத்தை குடிஅரசு போன்ற முயற்சிகளைக் குறை கூறி பாமர மக்களுக்கு போதை உண்டாக்கி உசுப்படுத்தி விடுவதினாலும் ஆபத்தினின்று தப்பித்துக் கொள் ளலாமென்று மனப்பால் குடித்து வருகிறார்கள். இது அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தரும் என்பதில் அய்யமில்லை.
பாமர மக்கள் என்றும் மூடர்களாகவே இருந்துகொண்டு மதப்பைத்தியத்தால் கடவுள் உணர்ச்சியால் பாடுபட்டு பாடுபட்டு சோம்பேறிகளுக்கு உழைத்துப் போட்டுக் கொண்டே இருப்பவர்கள் என்று நினைப்பது பெரியதொரு முட்டாள்தனமேயாகும். எல்லா புண்ணிய மதத்திலும், எல்லா புண்ணிய வேதத்தை – மார்க்கத்தை ஒப்புக் கொண்டவர்களிலும் ஏழையும், பாடுபட்டு பட்டினி கிடப்பவனும் இழிதொழில் செய்பவனும் இருந்து கொண்டுதான் இருக்கிறான்.
பணக்காரனும் சோம்பேறியும் பாடுபடாமல் மேன்மையாய் மதிக்கப்படுபவனும் இருந்துக்கொண்டுதான் இருக்கிறான். இந்தப்புரட்டை ஒழிக்க எந்த சத்தியவேதத் தாலும், புண்ணிய மார்க்கத்தாலும் முடியவில்லை. அப்படியானால் பின்னை எதற்காக இந்த மதங்கள் இருக்கவேண்டும்? இனியும் ஏய்த்துப்பிழைக்கவா? என்பதை யோசிக்கும்படி வேண்டுகிறோம்.
சமீபகாலத்தில் இரண்டு மாத காலமாய், சிறப்பாய் ஒரு மாத காலமாய் கத்தோலிக்க கிறிஸ்துவ பாதிரிகளின் அட்டகாசம் தலைகால் தெரியாமல் தாண்டவமாடுகின்றது. வியாதியின் பயனாய் ஏற்பட்ட ஜன்னி சேஷ்டைக்கு சற்று பலம் அதிகமாக இருக்கும். ஜன்னி நின்றவுடன் உள்ள பலமும் போய் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்க வேண்டியதாகும். அதுபோலவே சமீபத்தில் அழிந்து மறையப் போகும் கத்தோலிக்க மதம் சுயமரியாதை இயக்கத்தை அழித்துவிட வேண்டுமென்று கூட்டம் கூடி தீர்மானித்து இந்த 10 நாளாய் மதிப்புக்குரிய ‘‘மெயில்’’ பத்திரிகையில் பக்கம் பக்கமாய் கண்டன வியாசங்களும் அதற்கு ஏற்ற தலையங்கங்களும் வந்த வண்ணமாயிருக்கின்றன.
கத்தோலிக்க மதம் இந்த காரியங்கள் செய்வது நமக்கு சிரிப்பை உண்டாக்குகின்றதே தவிர சிறிதுகூட அதை ஒரு லட்சியம் செய்யவேண்டிய காரியம்என்றே நமக்குத் தோன்றவில்லை. இன்றைய நிலையில் உலகில் உள்ள சூழ்ச்சி மதங்களில் இந்து மதத்தை விட கத்தோலிக்க மதம் ஒன்றே தலைசிறந்த மதம் என்றே கருத வேண்டியிருக்கின்றது! மத சம்பந்தமான, சடங்கு சம்பந்தமான காரியங்கள் ஒருபுறம் இந்து மதத்தோடு நீ சிறந்தவனா, நான் சிறந்தவனா என்று போட்டி போடுவதாயிருந்தாலும் அதன் அரசியல் சூழ்ச்சிக்கு எதுவும் நிகரில்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் இந்தியாவில் கிறிஸ்தவ மதத்திற்கு, ஆக்கமும் அஸ்திவாரமுமான இடம் தென்னிந்தியாவாகும். தென்னிந்தியாவில் கிறிஸ்தவர்களின் பெருக்குக்கு கத்தோலிக்க மதத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களேயாகும்.
‘குடிஅரசு’ இதழ்க் குறிப்புகள்
-
விலை விவரம்
துவக்கம் முதல் 1940ஆம் ஆண்டுவரை தனி இதழ் 1 அணாவாகவும், 1943 ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டு வரை தனி இதழ் ஒன்றரை அணாவாகவும், 9.03.1946 முதல் 28.12.1946 வரை மீண்டும் 1 அணாவாகவும், 1947ஆம் ஆண்டு முதல் 1948ஆம் ஆண்டு வரை தனி இதழ்
2 அணாவாகவும், 1949 ஆம் ஆண்டில் 02.04.1949 முதல் 20.05.1949 வரை 1 அணாவாகவும், 21.05.1949 முதல் 04.11.1949 வரை 2 அணாவாகவும், 5.11.49 இதழ் 1 அணாவாகவும் விற்கப்பட்டது.
ஆரம்பம் முதல் 30.10.1943 வரை, பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் பாதி விலையில் குடிஅரசு இதழ் வழங்கப்பட்டது.
குடிஅரசு வார இதழ், 1934ஆம் ஆண்டு ‘கிறிஸ்தவ’ மதத்தைப் பற்றி எழுதியதற்காக தடை செய்யப்பட்டது. இதனால் அதே ஆண்டு ‘புரட்சி’ என்ற வார இதழ் பெரியார் தொடங்கினார்.
புரட்சி இதழில் ‘இஸ்லாம்’ மதம் பற்றி எழுதியதற்காக ‘புரட்சி’ வார இதழ் ஒரே ஆண்டுக்குள் தடை செய்யப்பட்டது. எனவே மதத்தின் பயனாக நமது வாழ்வில் எவ்வளவு துன்பங்கள், தொல்லைகள் அடைய நேரிடுகிறது. (ஆதாரம் : பகுத்தறிவு – 09.09.1934)
உண்மை எப்போது விளங்கும்?
கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையில் பகுதிக்கு மேற்பட்ட ஜனாதிக்கம் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுடைய எண்ணிக்கையை சர்க்காருக்கு எடுத்துக் காட்டி அதற்காக அந்த விகிதாச்சாரம் கிராண்டு தொகை, ஓட்டர் தொகை, உத்தியோகத்தொகை ஸ்தலஸ்தாபன அங்கத்தினர் தொகை ஆகியவைகளை அதிகமாகப் பெறுகின்றார்கள். இப்படிப்பட்ட ஸ்தலஸ்தாபனங்கள் ஏதாவது ஒன்று இந்த தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் அடையமுடிகின்றதா? என்பதை யோசித்துப் பார்த்தால் உண்மை விளங்காமல் போகாது, மதத்தின் பேரால் செய்யப்படும் இழிவான மோசம் என்பதற்கு இதைவிட வேறு எதையாவது உதாரணம் காட்ட முடியுமா? என்று கேட்கின்றோம்.
மதம் ஏழை மக்களை – பாமர மக்களை வஞ்சிக்க – மோசம் செய்ய – சதி செய்ய ஏற்பட்டது என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும். இந்து மதத்திலாவது சுயமரியாதை இயக்கத்தின் நாஸ்திகத்தினாலும் மதத் துரோகத்தினாலும் வகுப்பு துவேஷத்தினாலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு அளவுக்காவது எல்லாவற்றிலும் பிரதிநிதித்துவம் ஏற்பட்டு விட்டது.
இதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால் இந்து ஆதிதிராவிட மக்கள் மதத்தை விட்டு வெளியே போய்விடத் துணிந்ததும் சிலர் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதும், சிலர் பச்சை நாஸ்திகர்கள் ஆனதுமே தவிர வேறில்லை. அதுபோலவே ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் என்பவர்களும் தங்கள் விடுதலைக்கு, சுதந்திரத்துக்கு, சுயமரியாதை பெறுவதற்கு மதத்தைவிட்டு வெளியாகி தான் தீருவார்கள். யார்சொன்னாலும் இனி அது தடைப்படபோவதில்லை என்பதே நமது அபிப்பிராயம்.
கத்தோலிக்க பாதிரிகள் சட்டசபைத் தேர்தலில் யாருக்கு ஓட்டு வாங்கி கொடுக்கிறார்கள் என்பதை கவனித்துப் பார்த்தால் அவர்களுடைய யோக்கியதை விளங்காமல் போகாது, கத்தோலிக்க ஆதி திராவி டர்கள் எப்போது உத்தியோகம் பெறுவது, எப்போது சட்டசபை அங்கத்தினராவது? எப்போது மந்திரியாவது இதற்குத்தக்க சமாதானமான பதில் நடுநிலையிலிருந்து சொல்லட்டும் என்று தான் கேட்கின்றோம். இந்து ஆதிதிராவிடர்கள் பல பேர் பி.ஏ., பி.எல்., ஆகிய பல பேர் சட்டசபை அங்கத் தினர்கள் ஆகி, பல பேர் உத்தியோகஸ்தர்கள் ஆகி, பல பேர், ஸ்தல ஸ்தாபன அங்கத்தினர்கள் ஆனதோடல்லாமல் நாளைக்கு அவர்கள் மந்திரிகளும் ஆகப் போகின்றார்கள் என்று பந்தயம் கூற தயாராய் இருக்கிறோம்.
1929 – 1933 வரை குடிஅரசு ஏட்டில் அதிகம் எழுதிய பெருமக்கள் விவரம்
திருநெல்வேலி குற்றாலலிங்கம்
திருஞானசம்பந்தன்
மைடான் டில்லி காளிமுத்து
சிறீவாசுதேவன்
வீ.ராமசாமி
கோபி ஜி.எம்.ராஜு
பண்டித எஸ்.முத்துசாமிபிள்ளை
உறந்தை ப.ராமலிங்கம்
திருத்துறைபூண்டி ஏ.ஜி.ஆர்
திருச்சி லீலாவதி
மயிலை சீனிவேங்கடசாமி
வடபாதி ஜி.குப்புசாமி
எஸ்.வி.லிங்கம்
கள்ளிக்கோட்டை எஸ்.எஸ்.நாதன்
சக்திதாஸ்
சி.நடராஜன்
கோ.சாரங்கபாணி – தமிழவேள்
ஈ.வெ.கி.
அ.இராகவன்
விருதை பாபுசாமி
சி.கே.பிச்சாண்டி
நாகர்கோயில் பி.சிதம்பரம்
வை.சு.சண்முகம்
ஜே.எம்.கிருஷ்ணமாச்சாரி
உடுமலை கனகராஜன்
விருதுநகர் ச.சி.சுப்பையா
சாத்தூக்குடி எஸ்.வேதமுத்து
கல்லில் முட்டிக் கொள்வது ஏன்?
கத்தோலிக்க பாதிரிகள் சர்க்கார் தங்கள் கையில் இருக்கிறதென்ற ஆணவத்தால் வண்டி வண்டியான பொய்யும் புளுகும் கூறி உங்களுக்கு அதை செய்கின்றோம். இதை செய்கிறோம் என்று வாயடி அடித்து பல லட்சக்கணக்கான மக்களை தங்கள் மதத்திற்கு இழுத்து அதன்பேரால் சீமையில் இருந்து சில பாதிரிகள் இந்தியாவுக்கு வந்து அய்.சி.எஸ். வெள்ளைக்காரர்கள் போல் பாதிரி வெள்ளைக் காரர்கள் ஒரு கூட்டம் பிழைக்க வழி தேடிக் கொண்டதல்லாமல் இவர்கள் செய்த காரியம் என்ன என்றுதான் மறுபடியும் கேட்கின்றோம். நமது ஒன்பதாம் ஆண்டு வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியை கத்தோலிக்க பாதிரிகளுக்கு நோட்டிஸ் கொடுக்கவே தெரிவித்துக் கொள்ளுகிறோம். நமக்கு எந்த மதமானாலும், எந்த தேசமானாலும் ஜாதிமததேச வித்தியாசமில்லாமல் ஏழை மக்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் நம்மால் கூடிய வரை கவனித்து அவர்களது இழிவையும் துன்பத்தையும் அழிக்க வேண்டுமென்பதுதான் கொள்கையாகும். ஆகவே கத்தோலிக்க பாதிரிகள் கிறிஸ்தவர்கள் பெயரினால் சர்க்காரிடம் பெற்ற பங்கில் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட பறைய, சக்கிலிய, பள்ள, கிறிஸ்தவர்களுக்கு விகிதாச்சாரம் கொடுத்து கிறிஸ்தவ ரானாலும் பறையனாய் சக்கிலியனாய், பள்ளனாய், பார்ப்பானாய், உடையாராய், சைவவேளாளராய், நாடாராய் இருக்க வேண்டும் என்கின்ற சூழ்ச்சியையும், புரோகிதக் கொள்ளையையும் ஒழிக்காத வரை இந்திய கத்தோலிக்க உலகம் அஸ்தமாகித்தான் தீரும் என்பதை வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்ளுகிறோம். இதற்காக சுயமரியாதை இயக்கத்தோடு முட்டிக்கொள்ளுவது கல்லில் முட்டிக் கொள்வதேயாகும்.
குடிஅரசு – தலையங்கம் – 30.04.1933
(தொடரும்)