ஏக தடபுடல்களுடன் எஸ்.ஆர்.எம் பல்கலை கழகத்தில்!
துறவி என்பது மிகப் பெரிய மரியாதைக்குரிய ஒரு நிலையாகும்!
அனைத்தையும் துறப்பது எளிதானதல்ல, அத்தகு உறுதியான மனநிலை அபூர்வமானது!
ஆகவே, இது கருதி தான் துறவிகளை நாம் போற்றுகிறோம்!
ஆனால், மடாதிபதிகள் எல்லாம் துறவிகள் என்று தற்போது அழைக்கப்படுவதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒவ்வொரு மடத்திற்கும் – அது காஞ்சி மடமாயிருக்கலாம், தருமபுரம் அல்லது மதுரை மடமாக இருக்கலாம்..எல்லாமே பல ஆயிரம் கோடிகள் அல்லது பல நூறு கோடிகள் சொத்துள்ள நிறுவனங்களே!
ஒவ்வொரு மடத்தின் கீழ் பல நூறு ஏக்கர் நிலங்கள், லாபம் ஈட்டும் கல்வி நிறுவனங்கள், தொழில்கள் எல்லாம் நடக்கின்றன.
இந்த மடாதிபதிகள் பொன், பொருள், நிலம், அறுசுவை உணவு..போகம் எதையும் விட்டு வைப்பதில்லை. குறைந்தபட்சம் இவர்கள் பிரம்மச்சரிய விரதத்தையாவது உண்மையிலேயே கடைப்பிடிப்பவர்களா…? என்றால், அதுவும் இல்லை.
இதில் பாலியல் ஒழுக்கம் கொண்டவர்களை பார்ப்பது அரிதினினும் அரிது…!
அந்தக் காலத்தில், ’மடாதிபதிகளின் லீலைகள்’ என அறிஞர் அண்ணா ஒரு நூலையே எழுதினார். தற்போதும் இந்த மடங்களை சார்ந்து வாழும் மக்களுமே இந்த மடாதிபதிகளின் லீலைகள் பற்றி பல நூறு சம்பவங்களைக் கூறுவார்கள்!
பார்ப்பன மடங்களின் தலைவர்களை ஆச்சாரியார் என்றும், ஜீயர் என்றும் அழைப்பர். இவர்கள் நான்கு வேதங்கள், உப நிடதங்கள்..போன்றவற்றை நன்கு படித்து கரைத்து குடித்திருப்பர். சைவ மடங்களின் தலைவர்களை ஆதீனம் என அழைப்பர். இவர்கள் சைவ திருமறைகளை நன்கு படித்து மனப்பாடம் செய்திருப்பர். பூஜை, புனஸ்காரம் எப்படி செய்ய வேண்டும் என்பது இவர்களுக்கு அத்துப்படி. இது தான் இவர்களின் ஸ்பெஷல் தகுதியாகும்.
கொலை, கொள்ளை, களவு, பொய்மை.. போன்றவற்றில் இருந்தாவது இவர்கள் விலகி நிற்கிறார்களா என்றால், அதுவும் இல்லை. பணம் ,சொத்து குவிந்துள்ள இடத்தில் இவற்றை எப்படி தவிர்க்க முடியும்..? பல ஆதீனங்கள் மீது நில அபகரிப்பு வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் உள்ளன..! ஆனால், ஆட்சி அதிகார மய்யங்களோடு கொண்ட தொடர்பு காரணமாக எல்லாவற்றையும் சமாளிக்கிறார்கள்!
இதோ பாருங்க, யதேச்சையாக நடந்த கார் ஓவர் ஸ்பீட் டிரைவிங் சம்பவத்தில் கூட தன் தரப்பை சுயபரீசீலனைக்கு உட்படுத்தாமல், ஒரு மதக் கலவரத்தை தூண்டும் விதத்தில் ‘’ தொப்பி, தாடி, கொலை முயற்சி..’’ என கெடு நோக்கத்துடன் முந்தின நாள் பேசிய ஒரு அற்ப மனிதர் – விசாரணை வளையத்தில் எடுத்து சிறைக் கம்பியை எண்ணிக் கொண்டிருக்க வேண்டிய மடாதிபதி – அடுத்த நாளே நீதிபதி இருக்கும் மேடையில் நிற்கிறார்.
இதை மேடையில் உள்ள பெரிய மனிதர்களும், பார்வையாளர்களாக வந்த பக்தர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் எவ்வித குற்றவுணர்வுமின்றி இயல்பாக எடுத்துக் கொள்ள முடிகிறது. குறைந்தபட்சம் இவரை அன்றைய நாள் மேடையேற்றாலாமாவது தவிர்த்திருக்கலாமே.
‘நாங்க எல்லாம் சட்டம், நீதி, மனசாட்சி… என அனைத்துக்கும் அப்பாற்பட்டவங்க…’ என்ற நினைப்போ, என்னவோ..!