சமீபத்தில் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் மிக முக்கியமான ஒரு சமூகநீதி முடிவு எடுக்கப்பட்டது. ‘காலனி’ என்ற சொல் பட்டியல் இன மக்களை, அம்மக்களின் வாழ்விடங்களை இழிவாகக் குறிப்பிடும் ஒரு சொல்லாக இருப்பதால் அச்சொல்லை உபயோகத்தில் இருந்தும் மற்றும் அரசு ஆவணங்களில் இருந்தும் நீக்குவது என மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். இது வெறும் சொல் அகற்றல் அல்ல; இது நம் சமூகத்தின் அடித்தள மாற்றத்தை நோக்கி எடுக்கப்படும் ஒரு வரலாற்று நிகழ்வு.
கட்டுப்பாடுகளின் உள்ளடக்கம் என்ன?
‘காலனி’ (Colony) என்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சொல்லாடல். காலனித்துவ நாடுகள்(colonial countries) என்பது காலனித்துவம் (colonialism)எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் மற்ற பிரதேசங்களை வரலாற்று ரீதியாகக் கட்டுப்படுத்திய நாடுகள் ஆகும், இதில் ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார ஆதிக்கத்தை செலுத்துகிறது . இந்தக் கட்டுப்பாடு பெரும்பாலும் காலனிகளை நிறுவுதல், வளங்களைச் சுரண்டுதல் மற்றும் காலனித்துவ சக்தியின் மொழி, கலாச்சாரம் மற்றும் அரசியல் அமைப்புகளைத் திணித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
அந்த வகையில், பிரிட்டிஷ் பேரரசு உலகெங்கிலும் பரந்த அளவிலான காலனிகளை உள்ளடக்கியது, அவற்றில் பிரிட்டிஷ் காலனித்துவ பிரதேசங்களின் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளில் கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, கானா (கோல்ட் கோஸ்ட்) மற்றும், வட அமெரிக்கா, கரீபியன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் பெரும் பகுதிகள் (இந்தியா, பாகிஸ்தான், மியான்மர், மலேசியா சிங்கப்பூர் ஹாங்காங்) ஆகியவை அடங்கும். இந்த நாடுகள் காலனி நாடுகள் என்று அழைக்கப்பட்டாலும், ‘காலனி’ என்ற சொல்லாடல் இழிவின் குறியீடாக வழங்கப்படவில்லை.
சுயமரியாதை, கண்ணியம், மனிதநேயத்திற்குப் புறம்பாக ‘காலனி’ என்ற சொல்!
கிராமங்களில் இன்றைக்கும் ஊர் என்றும் சேரி என்றும் காலனி என்றும் வாழ்விடங்கள் தனித்தனியே ஜாதி ரீதியாக அமைக்கப்பட்டு வழக்கத்தில் இருந்து வருகின்றன. பட்டியலின மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை நில புலன்களை ஜாதியின் அடக்குமுறை காரணமாக இழந்து, ஊருக்கு வெளியே தனிமைப்படுத்தப்பட்டு குடியமர்த்தப்பட்ட இடங்களை ‘காலனி’ என்று இழிவுடன் அழைக்கப்பட்டு வருகிறது. இது வெறும் நிலக் குறியீடு மட்டுமல்ல, அது ஒரு சமூக விலக்குவாதத்தின் அடையாளமாகவும், தீண்டாமையின் ஆழமான கண்ணோட்டமாகவும் இருந்து வருகிறது. ‘காலனி’ என்ற சொல் சுயமரியாதைக்கும், கண்ணியத்திற்கும், மனிதநேயத்திற்கும் புறம்பாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சொல்லின் பயன்பாடு, அந்த மக்களின் சமூக அடையாளத்தையே தாழ்வாகக் குறிக்கிறது. முகவரியிலேயே “காலனித்தெரு” என்று குறிப்பிடப்பட்டால், அந்த நபர் எந்த சமூகத்திலிருந்து வருகிறார் என்பதை உடனே அறிந்து கொள்ளும் வகையில் சமூக கண்கள் பழகிவிட்டன. இது ஜாதிய அடையாளச் சின்னமாக வெளிக்காட்டுகிறது.
‘காலனி ஆளுங்க’, ‘காலனிப் பசங்க’ என்ற சொல்லாடல்கள் எல்லாம் ஜாதி ஆதிக்க, தீண்டாமை மனநிலையின் உச்சத்தின் வெளிப்பாடுகள்தானே. அது உளவியல் ரீதியாக மன உளைச்சலை (depression), மனநலப் பாதிப்புகளையும், தாழ்வுணர்வையும் ஏற்படுத்தும் ஒரு முக்கோண வலியை அந்தந்த முகவரிக்காரனால் மட்டுமே முழுமையாய் உணர முடியும்.
பெரியார் நினைவு சமத்துவப்புரத் திட்டம்
தந்தை பெரியார் வழிகாட்டிய முதன்மை பாதை — ஜாதி ஒழிப்பு. அதனை அரசியல் மட்டுமல்லாது, கட்டமைப்பு மாற்றமாகவும் கொண்டு வருவதற்காக கலைஞர் அரசு உருவாக்கிய புரட்சிகர திட்டம்தான் பெரியார் நினைவு சமத்துவப்புரம். பட்டியலின மக்கள் தனிமைப்படுத்தப்படாமல்,பிற பிற்படுத்தப்பட்ட இனத்தினருடன் ஒரே இடத்தில், ஒரே மாதிரியான வீடுகளில்,சம உரிமையோடும், சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் வாழக்கூடிய சமூக சூழலை உருவாக்குவது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்.
இது ஒரு வீடு கட்டும் நலத்திட்டம் மட்டும் அல்ல, ஒரு சமூக மறுசீரமைப்புத் திட்டம். “நீ வேறு, நான் வேறு” என்று மக்கள் முகவரியால் பிரிக்கப்படாமல், “நாம் அனைவரும் ஒன்றுதான், ஓர் நிலை தான்” என்று வாழக்கூடிய மனப்பான்மையை வளர்க்கும் இந்த புரட்சிகர திட்டம், இந்தியாவில் எங்கும் காண முடியாத வகையில் வளர்த்தெடுக்கின்ற ஒரு முக்கிய ஆய்வுக்கூடமாக விளங்கி வருகிறது.
சமூக மாற்றத்தை வலிமையாக்கும் செயல்
தமிழ்நாடு முதலமைச்சரின் துணிவு – சமூக நீதி அரசியலின் தொடர்ச்சி , “காலனி” என்ற இழிவை உமிழும் ஆதிக்கச் சொல்லை அரசு ஆவணங்கள் மற்றும் பொதுப் பயன்பாட்டிலிருந்து நீக்குமாறு அறிவித்தது, திராவிட மாடல் அரசியல் மரபில் ஒரு மைல்கல். இது வெறும் வார்த்தை மாற்றமல்ல, சமூக வலிமைமிக்க மாற்றத்திற்கு இட்டுச் செல்லும் செயல்முறை.
தந்தை பெரியார் வலியுறுத்திய வழியில், மனித மாண்பு பாதுகாக்கப்படும் என்பதற்கான அரசின் உறுதியின் பிரதிபலிப்பாகவே இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக நாம் குரல் கொடுக்க விரும்பினால், அந்த ஒடுக்குமுறையை பேணும் சொல்லாடல்களை நாம் புறக்கணிக்கத் தொடங்க வேண்டும். ‘காலனி’ என்ற சொல், அந்த வகையில், முதன்மையான முற்றுப்புள்ளியடைய வேண்டியதொன்றாக இருந்தது. இப்போது அந்த முரண் நீக்கப்பட்டது.
காலனி என்ற சொல்லுக்கு விடை சொல்வது – ஜாதி ஒழிப்புக்கான ‘மொழிப்’ புரட்சி. சமத்துவப்புரம் என்பது – சமூக ஒற்றுமைக்கான கட்டமைப்புப் புரட்சி. இவை இணையும் பொழுதே – தந்தை பெரியாரின் கருத்துசெயலாகிறது.