சுயமரியாதை இயக்கம் தனது நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடி மகிழ்கிறது.
புதுவை சுப்பு இரத்தினக் கவிஞர் – ‘புரட்சிக் கவிஞர்’ என்று சுயமரியாதை இயக்கத் தந்தை, பகுத்தறிவுப் பகலவன் பாராட்டி மகிழ்ந்த நம் கவிஞர் பெருமான், சுயமரியாதை இயக்கத் தொடக்கக் காலத் தொண்டரானார்.
தமிழ் இலக்கியம் ‘சுயமரியாதை’ என்ற உடையை வெற்றுடலுக்குப் போர்த்திக் கொண்டது!
சுயமரியாதை மனித குலம் அனைத்துக்குமான மாண்புமிக்க தேவை.
எல்லோரும் சமத்துவத்தோடும், அறிவுச் சுதந்திரத்தோடும், சமூகம் சார்ந்து பொது நலத் தொண்டர்களாகவும் வாழ வேண்டும் என்பதை உணர்ந்து உன்னத நெறியாளராயினர்!
ஆங்கே வெறி இல்லை; நெறி உண்டு.
அந்நெறி செம்மை நெறி, செழுமைக்கு நம்மை அழைத்துச் செல்லும் ஜீவநெறி.
இளைய தலைமுறைக்கு இப்படி நல்லொழுக்க நெறியினைப் புரட்சிக் கவிஞர் எளிய சொல்லாளுமை கொண்ட கவிதை வரிகளால் உள்ளத்தில் பதிய வைத்த முக்கிய தலைப்பு – ‘அறிவு’ – உள் தலைப்பு நேர்பட ஒழுகு என்ற –
- நேர்பட ஒழுகு
தரையில் உட்கார வேண்டாம்-ஒரு
தடுக்குமா இல்லைஉன் வீட்டில்?
கரியாகிப் போகும்உன் சட்டை-நீ
கண்ட இடத்திலே புரண்டால்.
சரியான வழியில் நடப்பாய் -நீ
தண்ணீரில் ஆடக்கூ டாது.
எரிந்திடும் நெருப்புமுன் னாலே -கேள்
என்கண்ணே உனக்கென்ன வேலை.
அடுத்தது
- நேர்பட ஒழுகு
சுண்ணாம்புக் கட்டியை நறுக்காதே- நல்ல
சுவரிலும் கதவிலும் கிறுக்காதே.
கண்ணாடி எடுத்தால் மெதுவாய்வை-அது
கைதவறி விட்டால் உடைவது மெய்.
பண்ணோடு பாடநீ கூசாதே-உன்
பள்ளியில் எவரையும் ஏசாதே.
மண், ஓடு, ஆணி, துணி கடிக்காதே-கேள்
மற்றவர் பொருளை நீ எடுக்காதே.
என்னே எளிய சொற்கள் – அரிய பாடங்கள்! புரட்சிக் கவிஞரே குழந்தைக் கவிஞருமாகி எழுதியுள்ள வரிகள் குழந்தைப் பருவ முதல் மூதுரை எவ்வளவு அழகாக அமைகின்றன.
எல்லாம் தம்பி உனக்காக, இனி எப்போது காண்போம் இப்படி ஒரு புரட்சிக் கவிஞரை!
வீடெல்லாம் நாடெல்லாம், உலகெலாம் அவர் தமிழ்! தமிழ்! ஒலிக்கும்; ஓங்கும்!
தொடருவோம்! ‘நேர்பட ஒழுகு’
படித்து செயலாக்குவோம்!
வாரீர் வாரீர் தம்பிகளே, தங்கைகளே!
(தொடரும்)