ஓசூர், மே 8- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் வளாகத்தில் பிரசாத கடை உள்ளது, இங்கு புளியோதரை, சர்க்கரை பொங்கல் உட்பட பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
கோயில் பிரசாதம்
கருநாடகா மாநிலம், பொம்மசந்திராவில் வசிக்கும், தனியார் மருத்துவமனை செவிலியர் மதனிகா, 23, அவரது அக்கா ஜெயலட்சுமி, 33, ஆகியோர், இந்த கோவிலில் 6.5.2025 அன்று சுவாமி தரிசனம் செய்தனர்.பின், பிரசாத விற்பனை கடையில், ரூ.60 கொடுத்து இரு புளியோதரை பிரசாதங்களை வாங்கினர். பார்சலை பிரித்த போது, ஒரு டப்பாவில் இருந்த புளியோதரைக்குள், இறந்த நிலையில் கட்டுவிரியன் பாம்பு குட்டி இருந்தது.இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மதனிகா, பிரசாத கடைக்கு சென்று கேட்டார். அங்கிருந்த ஊழியர், அதை பொருட்படுத்தாமல் ‘நானும் இதை தான் சாப்பிட்டேன்’ என, அலட்சியமாக பதிலளித்தார். இதனால், ஆத்திரமடைந்த மதனிகா, கோவில் செயல் அலுவலர் சாமிதுரையிடம், எழுத்துப்பூர்வமாக புகாரளித்தார்.
செயல் அலுவலர் சாமிதுரை கூறுகையில், ”புகார் வந்தவுடன் பிரசாதக் கடையை மூடி விட்டோம். துறை ரீதியாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொருட்கள் தரம் குறித்து பரிசோதனை செய்யப்படும்,” என்றார்.
மதுரை ஆதீனத்துக்கு
சிவபக்தர்கள் குழு கண்டனம்!
சிவபக்தர்கள் குழு கண்டனம்!
ஒட்டன்சத்திரம், மே 8- மதுரை ஆதீனத்தின் செயல்பாடுகளால் சைவ மடங்களின் மாண்பு குறைந்து வருகிறது என தமிழ்நாடு சிவ பக்தர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
உண்மைக்கு புறம்பாக
தமிழ்நாடு சிவ பக்தர்கள் குழு மாநில தலைவர் விஸ்வரத்தினம் கூறியதாவது: தமிழ்நாட்டில் சைவ திருமடங்கள் மிகவும் தொன்மையானவை. இவைகளின் கீழ் பல்வேறு கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் மடாதிபதிகள் சைவ நெறிகளை, சைவ சித்தாந்தங்களை பக்தர்களுக்கு போதித்து சமதர்மத்தை வளர்த்து வருகின்றனர். சில மடாதிபதிகள் அரசியல்வாதிகள் போல் செயல்படுகின்றனர்.
அரசியல் அமைப்பு சட்டப்படி அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் உள்ளது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது. கார் விபத்து குறித்து மதுரை ஆதீனம் உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார். இதனால் சைவ மடங்களின் மீதான மாண்பு குறைந்து வருகிறது. மடாதிபதிகள் தங்களை பிரபலப்படுத்துவதில் முனைப்பாக உள்ளனர். சைவ நெறி சார்ந்த விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து, வணிக நிறுவனங்களின் திறப்பு விழா உள்ளிட்ட பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் எங்களை போன்ற அடியார்கள் திருக்கூட்டத்திற்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. பண்டைய காலத்தில் சைவ மடங்கள் எவ்வாறு உண்மையாக சைவ தொண்டு புரிந்ததோ, எவ்வாறு ஏழை எளியோர்களின் பசிப்பிணியை போக்கியதோ, அதேபோல மீண்டும் தர்ம சிந்தனை மற்றும் சமய சிந்தனையோடு செயல்பட வேண்டும். மாற்று மதத்தை அநாகரீகமாக பேசுவதை தவிர்த்து, சைவ சமய வளர்ச்சியில் பெரும்பங்காற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில்
100 நாள் வேலைத்திட்ட ஊதியம்
ரூ.336 ஆக உயர்வு
சென்னை, மே 8- ஒன்றிய அரசின் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்துக்கான அன்றாட ஊதியம் ரூ.319-அய் ஏப்ரல் 1 முதல் ரூ.336 ஆக உயர்த்தி வழங்க ஊரக வளர்ச்சித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) பயனாளிகளுக்கு வழங்கப்படும் அன்றாட ஊதியத்தை 1.4.2025 முதல் ரூ.319-லிருந்து ரூ.336 ஆக உயர்த்தி வழங்கும் வகையில் ஒன்றிய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்பேரில் தமிழ்நாட்டில் பயனாளிகளுக்கான அன்றாட ஊதியத்தை ஏப்ரல் 1 முதல் ரூ.319-லிருந்து ரூ.336 ஆக உயர்த்தி வழங்கும் வகையில் உரிய ஆணை வெளியிடுமாறு ஊரக வளர்ச்சி ஆணையர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதை ஏற்று மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்பு உறுதியளிப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ஒருநாள் ஊதியம் ரூ.319-அய் ஏப்ரல் 1 முதல் ரூ.336 ஆக உயர்த்தி வழங்க அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அந்த அரணையில் கூறப்பட்டுள்ளது.